Madharaasi
MadharaasiSivakarthikeyan

துப்பாக்கி + கஜினி = மதராஸி... எப்படி இருக்கிறது சிவா - முருகதாஸ் கூட்டணி?|Madharaasi Review | SK

மாஸ் + ஹூமரை ஒற்றை ஆளாக கொடுத்து அசத்துகிறார் சிவகார்த்திகேயன்.
Published on
துப்பாக்கி + கஜினி = மதராஸி... எப்படி இருக்கிறது சிவா - முருகதாஸ் கூட்டணி?|Madharaasi Review | SK(2.5 / 5)
Summary

என்ன பிரச்சனை என்பதை அறிமுகப்படுத்திவிட்டு, அதற்குள் ஹீரோ வருவது, உணர்வு ரீதியாக அவருக்கு இருக்கும் சிக்கல், அதனால் கதைக்குள் வரும் திருப்பம் என ஒரு அசாத்தியமான கதைக்குள் சின்ன சின்ன லாஜிக்குகளை கொண்டு வந்து நம்பும்படி கொடுக்க முயன்றிருக்கிறார்.

Madharaasi
MadharaasiSivakarthikeyan

யாருக்கு ஆபத்து என்றாலும் உதவ ஓடும் ஹீரோ, தன் காதலிக்கு ஒரு பிரச்சனை வரும் போது என்ன செய்கிறார் என்பதே 'மதராஸி'

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வர நினைக்கிறது வித்யுத் ஜம்வால் குழு. அதை தெரிந்து கொள்ளும் NIA அதிகாரி பிஜூ மேனன், அவர்களை பிடிக்க திட்டமிடுகிறார். இந்தக் கதை ஒரு பக்கம் இருக்க, காதல் தோல்வியால் தற்கொலை எண்ணத்தில் அலைந்து கொண்டிருக்கிறார், சிவகார்த்திகேயன். எதிர்பாராத சூழலில் பிஜூ மேனன் - வித்யுத் மோதலுக்கு இடையே சிவா நுழைய, துப்பாக்கி கும்பலை பிடிக்கும் ஆப்ரேஷனில் முக்கிய பொறுப்பில் சிவா இணைக்கப்படுகிறார். சிவகார்த்திகேயன் பின் கதை என்ன? ருக்மிணி - சிவா காதல் என்ன ஆனது? வித்யுத் கும்பல் பிடிக்கப்பட்டதா? என்பதெல்லாம் தான் `மதராஸி'.

Madharaasi
MadharaasiSivakarthikeyan, Rukmini Vasanth

படத்தின் முதல் பலம், முருகதாஸின் பரபரப்பான திரைக்கதை. ஒரு பக்கம் துப்பாக்கி போல ஒரு சமூக பிரச்சனை, அதில் கஜினி போல ஒரு மெடிக்கல் கண்டிஷன் உள்ள ஹீரோ என்ற காம்பினேஷனை கொண்டு வந்திருக்கிறார். சமூகம் சார்ந்த ஒரு சிக்கலை எடுத்துக் கொண்டு அதை கமர்ஷியலாக கொடுக்கும் அதே பேர்ட்டனில் தான் இதையும் கையாண்டிருக்கிறார். என்ன பிரச்சனை என்பதை அறிமுகப்படுத்திவிட்டு, அதற்குள் ஹீரோ வருவது, உணர்வு ரீதியாக அவருக்கு இருக்கும் சிக்கல், அதனால் கதைக்குள் வரும் திருப்பம் என ஒரு அசாத்தியமான கதைக்குள் சின்ன சின்ன லாஜிக்குகளை கொண்டு வந்து நம்பும்படி கொடுக்க முயன்றிருக்கிறார். எழுத்தாக கவர்ந்த இன்னொரு விஷயம், வன்முறையை திணிக்க நினைக்கும் வில்லன், பிறர் நலனை முக்கியமாக நினைக்கும் ஹீரோ என்ற எதிரெதிர் சித்தாந்தங்களை மோதவிட்டிருக்கும் ஐடியா அருமை.

நடிப்பாக பார்த்தால் மாஸ் + ஹூமரை ஒற்றை ஆளாக கொடுத்து அசத்துகிறார் சிவகார்த்திகேயன். கடந்த காலத்தில் நடந்த விஷயம் ஒன்றால் பாதிக்கப்பட்டு, உணர்வுகளை வெளிப்படுத்தும் இடம், தனக்கு யாரும் இல்லை என கலங்கும் இடம், தனக்கு வேண்டிய நபருக்கு ஆபத்து என்றதும் ஆக்ரோஷமாவது என படத்தின் ஜனரஞ்சக தன்மைக்கு எந்தக் குறையும் வைக்காமல் நடிப்பை கொடுத்திருக்கிறார். அதே நேரம் பல காட்சிகளில் சிவாவின் முகத்தில் இருக்கும் ஒட்டு தாடி பெரிய உறுத்தல்.

Madharaasi
MadharaasiSivakarthikeyan

ருக்மிணி வசந்த் படம் முழுக்க அத்தனை அழகு. நடிப்பிலும் குறை ஏதும் இல்லை. சிவாவின் குணத்தைப் பார்த்து காதலிப்பது, பின்பு அதையே காரணமாக வைத்து பிரியும் இடத்தில் கலங்குவது என நல்ல நடிப்பு. NIA அதிகாரிகளாக பிஜூ மேனன், விக்ராந்த் கதைக்கு தேவையான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். வில்லனாக விரும் ஷபீர், வித்யுத் ஜம்வால் வழக்கம் போல ஒரு சினிமா வில்லன்களாக வந்து போகிறார்கள்.

சுதீப்பின் ஒளிப்பதிவு படத்தை ஸ்டைலிஷாக காட்ட முயன்றிருக்கிறது. அனிருத்தின் பின்னணி இசை, படத்தின் மாஸ் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. அவரது `சலம்பல' பாடல் அதிரடியாக இருந்தாலும் படத்தில் அது வரும் இடம் அத்தனை பொருத்தமாக இல்லை. அதே நேரம் `உனது எனது' பாடல் கேட்கவும் சரி, படத்தின் தன்மையை உணர்த்தும் விதமாகவும் சரி வெகு சிறப்பு.

Madharaasi
MadharaasiA R Murugadoss, Sivakarthikeyan

இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால், இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம் என்பதே. ஹீரோ கதாப்பாத்திரம் எப்படி இந்த பிரச்சனைக்குள் வருகிறது என்ற சில லாஜிக்குகளில் எமோஷன் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கியமான சில எமோஷன்களில் அழுத்தம் ஏதும் இல்லை. உதாரணமாக படத்தில் வரும் ஒரு தந்தை - மகன் உறவில் எந்த அழுத்தமும் இல்லை. எனவே முக்கியமான ஒரு பாத்திரம் இறக்கும் போது நமக்கு எந்த உணர்வும் ஏற்படவில்லை. போலவே ஷபீர் - வித்யுத் இடையேயான நட்பு அழுத்தமானது என்பதையும் தெளிவாக சொல்லவில்லை.

Madharaasi
MadharaasiSivakarthikeyan

படத்தில் மையமாக கையாளப்படுவது ஹீரோவுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு மருந்தாக ஹீரோயினை பார்க்கிறார். அவருக்கே ஒரு ஆபத்து வரும் போது என்ன செய்கிறார் என்பதை வைத்து எழுதப்பட்டிருக்கும் மாஸ் காட்சிகள் சிறப்பு. கூடவே தற்கொலை எண்ணத்தில் இருக்கும் ஹீரோ, மரணத்தை வைத்து செய்யும், சொல்லும் காமெடிகளுக்கு கைதட்டல் பறக்கிறது. ஆனால் அதைத் தாண்டி படத்தில் சுவாரஸ்யமாக ஏதும் இல்லை. முருகதாஸ் படங்களில் ஹீரோ - வில்லன் இடையே நடக்கும் ஒரு மைண்ட் கேம் படத்தில் பெரிய சுவாரஸ்யத்தை சேர்க்கும். அது இப்படத்தில் சுத்தமாக மிஸ்ஸிங். துப்பாக்கி கலாச்சாரம் தமிழ்நாட்டில் நுழைந்தால் என்ன ஆகும் என்பதை உணர்த்தி இருப்பது முக்கியமானதே. ஆனால் அதை மிகுதியான சினிமாத்தனமாக காட்டி இருப்பது மைனஸ்.


ஒட்டு மொத்தமாகா பார்க்கையில் முருகதாஸின் புத்திசாலித்தனமான ஹீரோ வில்லன் கேம் இல்லை என்றாலும், ஓரளவு பரபரப்பாகவே நகர்கிறது படம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு புது விஷயங்களை சேர்த்திருந்தால், பெரிய அளவில் சாதித்திருப்பான் இந்த மதராஸி.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com