இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் Bad Girl. இயக்குநர் வர்ஷா பரத் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இத்திரைப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். அஞ்சலி சிவராமன், டீஜெ போன்றோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வெளியானது. டீசர் வெளியானதில் இருந்து இணையத்தில் இத்திரைப்படத்திற்கு எதிராக சில கருத்துகள் பதிவிடப்படுகின்றன. எந்த ஒரு திரைப்படமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்பது எல்லோரும் ஏற்கும் விஷயம். ஆனால், படத்தினை தயாரித்த வெற்றிமாறன், படம் தொடர்பாக கருத்தினை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இயக்குநர் பா.ரஞ்சித், டீசரை பகிர்ந்து வாழ்த்திய நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் மாரி செல்வராஜ் போன்றோரை விமர்சித்து தனிமனித தாக்குதலாக மாறியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இத்திரைப்படத்தின் டீசரை ஒட்டு இயக்குநர் பா.ரஞ்சித் பகிர்ந்திருந்த பதிவை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த இயக்குநர் மோகன் ஜி, “பிராமணப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த குழுவினருக்கு எப்போதும் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஒரு நிகழ்வு. வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் & கோ விடமிருந்து இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும். உங்கள் சொந்த சாதிப் பெண்களிடம் இதை முயற்சித்து உங்கள் குடும்பத்தினருக்கு இதை முதலில் காட்டலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
திரைப்படம் தொடர்பாக பேசியிருந்த இயக்குநர் வர்ஷா பரத், “பேட் கேர்ள் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கை, காதல் அனுபவங்கள் மற்றும் நட்பு குறித்து பேசும் கதை. பெண் என்பவள் பத்தினியாக, பூ மாதிரி, தாயாக இருக்க வேண்டும் என தொடர்ந்து காட்டப்பட்டு வருகிறது. அது அதிக அழுத்தமாக இருக்கிறது. பெண்களுக்கு தகுந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க நினைத்தேன். படத்தில் காட்டியிருப்பது போல பெண்கள் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. நான் அப்படி நினைத்து எடுக்கவும் இல்லை” என தெரிவித்திருந்தார்.
எதிர்வினைகள் குறித்துப் பேசிய அவர், “இது யாரையும் குறிப்பிட்டு எடுக்கப்பட்ட படம் இல்லை. ஒரு தனி நபரின் கதையை சொல்ல விரும்பினேன். அதைத்தாண்டி எதுவும் இல்லை. ஆரம்பத்தில் bad girl எனது முதல் படமாக இருக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. படத்தின் கதையின் one line -ஐ வெற்றிமாறன் சாரிடம் கூறினேன் . அப்போது அவர் கண்ணில் ஒரு spark தெரிந்தது. இது அனைவருக்கும் இருக்கும் என நம்பி கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடிவு செய்தேன்” என்றும் தெரிவித்திருந்தார்.
THE FEDERAL உடன் பேசிய இயக்குநர் வர்ஷா பரத், “எனது அனுபவங்களின் அடிப்படையில் ஒரு கதையை சொல்ல விரும்பினேன்” எனத் தெரிவித்திருந்தார்.
விளக்கங்கள் எத்தனை இருந்தபோதும் ஒரு சமூகத்தை மட்டும் குறிப்பிட்டு பேசுவது ஏன் என பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் நடக்கும் இத்தகைய உரையாடல்கள் தொடர்பாக இயக்குநர் ஹலீதா ஷமீமிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்பதுதானே ஒரு திரைப்படம் எடுக்கப்படுவதன் நோக்கமாக இருக்க முடியும். இவ்வளவு தூரம் சர்ச்சையாகுமென்று படக்குழுவினரே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
90ML என்று ஒரு திரைப்படம் வந்தது, அதில் பெண்கள் குடிப்பது போன்ற காட்சிகள் இருந்தது. அப்போது இந்த அளவுக்கு எதிர்ப்புகள் இல்லையே. ஏனெனில், அந்த படத்திற்குப் பின்னால் மிகப்பெரிய அளவில் தெரிந்த முகங்கள் இல்லை. இந்த படத்தினை வெற்றிமாறன் அனுராக் காஷ்யப் தயாரிப்பது, ரஞ்சித், விஜய்சேதுபதி போன்றோர் அதுகுறித்து பேசுவதுதான் எதிர்ப்பவர்களின் பிரச்னையாக உள்ளது.
எப்போதும்போல், கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரித்து அதை வெளியிட்டிருந்தால் இந்த அளவிற்கு எதிர்ப்பு வந்திருக்காது. Bad Girl படம் குறித்து பேசும் கலைஞர்களது மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியால்தான் இந்த எதிர்ப்புகள் வருகிறது என்பது முக்கியமான விஷயம்.
எப்போதும்போல், கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரித்து அதை வெளியிட்டிருந்தால் இந்த அளவிற்கு எதிர்ப்பு வந்திருக்காது.
தனிப்பட்ட முறையில் எனக்கும் கூட டீசரில் சில பிரச்னைகள் இருந்தது. ‘நான் தற்கொலை செய்துகொள்வேன்’ என அந்த பெண் கதாப்பாத்திரம் சொல்வது எனக்கும் செட் ஆகவில்லை. ஒரு ட்ரைலரில் அதுபோன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.
பொறுப்புணர்வு என்பது எல்லோருக்கும் இருக்க வேண்டும். இதுதான் முற்போக்கு, நாங்கள் எல்லாவற்றையும் உடைப்போம் என்பதற்காகவே சில விஷயங்களைப் பண்ணக்கூடாது.
ஒரு பெண்ணின் கதையை திரைப்படமாக எடுத்து அதற்கான டீசராக அதை வெளியிட்டிருந்தார்கள் என்றால் ok.. ஆனால், சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக டீசரை வெளியிட்டால் அதுவுமே கூட தவறுதான்.
மொத்தமாக கவனிக்கையில் தேவையில்லாத எதிர்வினைகள்தான் அதிகமாக இருக்கிறது. எந்த பேனரில் படம் வருகிறதோ அவர்களைத்தான் எதிர்க்கிறார்கள். படம் எடுத்தவர் ஒரு பிராமணப் பெண். அவரவர்களுக்குத் தெரிந்த சூழலில் இருந்துதானே படமெடுப்பார்கள். சமுதாயத்தை இழிவுபடுத்த வேண்டும் என்றா படமெடுப்பார்கள். இது எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என எடுக்கப்பட்ட படம் இல்லை.
எதிர்ப்பவர்களுக்கு இதுபோல் ஒரு நிகழ்வு தேவைப்பட்டுள்ளதுதானே., இம்மாதிரி ஒரு காரணம் கிடைத்ததும் இவர்களை எல்லாம் விமர்சிக்க வேண்டும் என காத்திருந்ததுபோல்தான் இருக்கிறது. இது ஒரு கும்பல் மனப்பான்மைதான்” எனத் தெரிவித்தார்.
படம் எடுத்தவர் ஒரு பிராமணப் பெண். அவரவர்களுக்குத் தெரிந்த சூழலில் இருந்துதானே படமெடுப்பார்கள். சமுதாயத்தை இழிவுபடுத்த வேண்டும் என்றா படமெடுப்பார்கள்.
இதுதொடர்பாக எழுத்தாளர் ஜா. தீபாவைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதாவது, “நானும் டீசரைப் பார்த்தேன். ஒரு திரைப்படத்தினை டீசரை வைத்து முடிவு செய்யக்கூடாது. ஏன் அந்த திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஒரு படத்தினை முழுமையாக பார்த்துவிட்டுத்தான் நாம் எதையும் சொல்லமுடியும். இயக்குநருக்கு எதைச் சொல்லுவதற்கும் உரிமை உண்டு. தனிப்பட்ட விதத்தில் ஒரு பெயரையோ அல்லது சமூகத்தையோ காயப்படுத்தினார்கள் என்றால்தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். படம் பார்க்காமல் கருத்தே சொல்ல முடியாது.
இதுமாதிரியான டீசரைப் பார்த்ததும் எல்லோருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருக்கும். இதுமாதிரியான படங்கள் வெளிநாடுகளில் வரும்போதும் இம்மாதிரியான பிரச்னைகளை சந்திக்கும். கிம் கி டுக்கின் திரைப்படங்கள் கொரியாவில் வெளிவரும்போதெல்லாம் இம்மாதிரியான பிரச்னைகள் இருக்கும். ‘இவர் மிக மட்டமாக படம் எடுக்கிறார்’ என்ற பார்வையெல்லாம் அந்நாட்டில் உண்டு.
இதுமாதிரியான டீசரைப் பார்த்ததும் எல்லோருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருக்கும். இதுமாதிரியான படங்கள் வெளிநாடுகளில் வரும்போதும் இம்மாதிரியான பிரச்னைகளை சந்திக்கும்.
ஒரு பெண் மிக முற்போக்காக சிந்திக்கிறார் என்ற கோணத்தில் இதை எடுத்துக்கொள்ள முடியாது; அந்த கதாப்பாத்திரம் என்பது அந்த கதாப்பாத்திரத்தின் தனிப்பட்ட ஆசை அவ்வளவுதான். இதுதான் நான் அந்த டீசரைப் பார்த்து புரிந்துகொண்டது. நீங்கள் ஒரு டீசர் வெளியிடுகிறீர்கள் என்றால் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். சமூகரீதியில் இம்மாதிரியான கதைகளை எடுக்கும்போது கவனமாக இல்லையென்றால் இந்த பிரச்னைகள் வரும். குறிப்பிட்ட சமூக பின்புலத்தில் கதையை வடிவமைத்தது ஏன் என்பதற்கு திரைப்படத்தில் நியாயம் சேர்த்திருக்கிறார்களா என்பது படம் வெளியான பின்புதான் தெரியவரும்.
நீங்கள் ஒரு டீசர் வெளியிடுகிறீர்கள் என்றால் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். சமூக பின்புலத்தில் இம்மாதிரியான கதைகளை வைக்கும்போது கவனமாக இல்லையென்றால் இந்த பிரச்னைகள் வரும்.
தனிப்பட்ட தாக்குதல்கள் எப்போதுமே இயக்குநர்களுக்கு இருக்கும். தொடர்ந்து இந்த இயக்குநர்களெல்லாம் சமூக அரசியலைத்தான் படமாக எடுக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்களிடம், ‘இவர்கள் வேண்டுமென்றே இதைச் செய்கிறார்களா?’ என்ற சந்தேகம் இயல்பாகவே எழத்தான் செய்யும். படம் வெளிவருவதற்கு முன் நாம் இதில் எதுவுமே சொல்ல முடியாது.
இயக்குநர் தான் வளர்ந்த சூழ்நிலையை படமாக எடுத்திருக்கலாம் என்பது புரிகிறது. வளர்ந்த சூழலை மட்டுமே கருத்தில் கொண்டு ஒரு கருத்தை பேசி அதை நியாயப்படுத்த முடியுமா என்பதையும் நம்மால் சொல்ல முடியாது. மிடில் க்ளாஸ் பெண் இவ்வாறு செய்கிறார் என்பதற்கும், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் இவ்வாறு செய்கிறார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது” எனத் தெரிவித்தார்.