கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு | பெற்றோரின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! ஆனால்?
வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு (2024, ஆகஸ்ட் 9), கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதில் மாநில அரசின் போக்கு மெத்தனமாக உள்ளதாக புகார் எழுந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மத்திய புலனாய்வு அமைப்பும் விசாரணையை நடத்தியது. இந்த நிலையில், இவ்வழக்கில் சீல்டா நீதிமன்றம் சஞ்சய் ராய்தான் குற்றவாளி என கடந்த ஜனவரி 18ஆம் தேதி உறுதிப்படுத்தியது. தொடர்ந்து அவருக்கு தண்டனை குறித்த விவரங்களை, ஜனவரி 20ஆம் தேதி அறிவித்தது.
அதன்படி, குற்றவாளி சஞ்சய் ராய் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. தவிர, ராய்க்கு ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 17 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மாநில அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பிலும் சிபிஐ சார்பிலும் சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கக் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களின் மீதான விசாரணை, கடந்த ஜனவரி 27ஆம் தேதி வந்த நிலையில், “ஒரே நோக்கத்துக்காக இரு தரப்பிலும் ஏன் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது” எனக் கேள்வி எழுப்பியதுடன், வழக்கையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இதற்கிடையே, ”இந்த வழக்கில் சஞ்சய் ராய்க்கு மட்டும் தொடர்பில்லை. மேலும் பலருக்கு இருக்கிறது. அவர்களையும் விசாரிக்க வேண்டும். இதில் தூண்டப்பட்டவர்களும், சதிகாரர்களும் விசாரிக்கப்படவில்லை. அவர்களிடமும் உரிய விசாரணை நடத்த வேண்டும்” எனக் கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், இதை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. என்றாலும், இதில் திருத்தம் செய்து புதிய மனுத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.