மன்னிப்பு கேட்கிறேன்... ஆனால், மீண்டும் சர்ச்சையாய் பேசிய மிஷ்கின்..!
மன்னிப்பு கேட்ட மிஷ்கின்
பாட்டல் ராதா திரைப்பட நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், நாகரீகமற்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டு பேசியிருந்தார். இசையமைப்பாளர் இளையராஜாவையும் ஒருமையில் பேசியிருந்தார். இதற்கு பாடலாசிரியர் தாமரை, இயக்குநர் லெனின் பாரதி, நடிகர் அருள்தாஸ் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பேட் கேர்ள். இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய அவர், “பாடலாசிரியர் தாமரை என்னை விமர்சித்துப் பேசியிருந்தார். அவரிடம் முதலில் நான் மன்னிப்பு கேட்கிறேன். அவர் ஒரு விஷயத்தை சொல்லி இருந்தார், ‘வெற்றி என்னை இப்படி பேச வைத்துவிட்டது’ என சொல்லியிருந்தார். 18 வருடமாக போராடிக்கொண்டே இருக்கிறேன். வெற்றி என் தலைமேல் இருந்திருந்தால் இந்நேரம் நான் பெரிய பெரிய ஆட்களுடன் எல்லாம் படம் செய்திருக்க வேண்டும்.
அமீர், வெற்றிமாறனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
அடுத்தது எனக்கு மிகப்பிடித்த, மிகச்சிறந்த ஆளுமை லெனின் பாரதி. அவரும் என்னை விமர்சித்திருந்தார். அது தத்துவ ரீதியான விமர்சனம். அவருக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்தது அருள்தாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன், தானு, என்மேல் செருப்பை எறிவேன் என்று சொன்ன நண்பர் என அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அமீரிடமும் வெற்றிமாறனிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முகம் சுழிக்கும் வகையில் பேசியதற்கு அவர்களிருவரும் சிரித்தார்கள் என அதிகமானோர் அவர்களைத் திட்டினார்கள். ஒரு நகைச்சுவை சொல்லும்போது அதை எடுத்துக் கொள்கிறவர்கள், அவர்களது ஆழ் மனதில் இருந்துதான் சிரிக்கிறார்கள். அந்த நிகழ்வில் நான் பேசும்போது எல்லோரும் சிரித்தார்கள். பத்திரிக்கையாளர்கள் பலரும் சிரித்தார்கள். நான் நகைச்சுவையாகத்தான் பேசினேன். அதில் ஓரிரு வார்த்தைகள் எல்லைமீறி சென்றுவிட்டது. குறிப்பிட்ட ஒரு மனிதரை நான் விமர்சிக்கவில்லை, அந்த எண்ணமும் எனக்கு இல்லை. விஷாலும் நானும் சண்டைபோடும்போதும், ஒருவார்த்தை கூட மோசமான வசை வார்த்தை நான் பேசவில்லை. நான் சொன்ன ஒரே வார்த்தை ‘பொறுக்கி’ என்பது மட்டும்தான்.
ஆழ்மனதில் இருந்துதான் பேசினேன்
மேடையில் பேசுவதற்கு நாகரீகம் வேண்டும் என்கிறார்கள். அது அரசியல் மேடை அல்ல. கூத்து செய்யும் கலைஞர்கள் மேடை. கிராமங்களில் நடக்கும் கூத்தில் சில வார்த்தைகளை நா கூசும் அளவிற்கு பேசுவார்கள். அது ஒருவிதமான வெளிப்பாடு, அது ஒரு வகையான நகைச்சுவை. அதுபோல்தான் நானும் பேசினேன். யாரையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை.
ஒரு படம் (பாட்டல் ராதா) என்னை பாதித்தது, அதன் தாக்கத்தில் என் ஆழ்மனதில் இருந்துதான் பேசினேன். அப்படிப்பேசியது உங்களை பாதித்துள்ளது. நான் கேட்கின்றேன். திருக்குறளில் காமத்துப்பால் இல்லையா? பெருமாள் முருகனின் கட்டுரை ஒன்றில் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட வார்த்தையை எத்தனை முறை உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதை எழுதியுள்ளார். இப்படி நான் சொல்லிக்கொண்டே போகலாம்.
நானா ஆபாசமாக எடுக்கின்றேன்
மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 500 பேர் எனக்கு போன் செய்தார்கள். அதிகமான பெண்கள் போன் செய்தார்கள். பத்திரமாக இரு என்றார்கள். என்னைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் என் படங்களைப் பார்த்துதான் சொல்ல வேண்டும். என்னைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால் இன்று கூட என்னை அழைத்துள்ள வெற்றிமாறனிடம் கேளுங்கள். மூன்று நாட்கள் எல்லா தொலைக்காட்சிகளிலும் நான்தான் இருந்தேன். என் படங்களில் சமூக கருத்து சொல்லவில்லையா? என் படங்களில் பேரன்பு இல்லையா?
நான் ஆபாசமாக எடுக்கின்றேன் என சொல்கிறீர்கள். பிசாசு 2ல் ஆண்ட்ரியாவிடம் கதை சொல்லும்போது, நிர்வாணக் காட்சிகள் தேவை என சொன்னேன். ஆண்ட்ரியாவும் கதையைக் கேட்டு நடிக்கிறேன் என்று சொன்னார். அதற்கான முயற்சிகளிலும் இறங்கினோம். பின், அவரைத் தொலைப்பேசியில் அழைத்து ‘அந்த காட்சிகளால் நான் பெயர் வாங்கலாம், ஆனால், அதைப் பார்க்கும் இளைஞர்கள் நான் பார்க்கும் பார்வையில் பார்க்க மாட்டார்கள். அதனால் வேண்டாம்’ என சொல்லிவிட்டேன். அந்த காட்சியை எடுத்து நான் போஸ்டர்களில் போட்டிருந்தால் இந்நேரம் அந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கும். இரண்டரை வருடங்களாக அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அந்தப்படத்தினைப் பார்த்த வெற்றிமாறன், ‘இந்த இரவு முழுவதும் என்னால் பேச முடியாது நான் காலையில் பேசுகிறேன் மிஷ்கின்’ என்றார்.
என்னை மிரட்டினார்கள்
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் எடுத்தேன். அத்திரைப்படத்தினை முதல்நாளில் ரிலீஸ் ஆக விடவில்லை. மறுநாள் இரவுதான் அத்திரைப்படம் ரிலீஸ் ஆனது,. 10 நாட்களுக்குப் பிறகு அதன் தொலைக்காட்சி உரிமையை வாங்க வந்தார்கள். அப்போது எனக்கு நெருக்கமான மனிதர், அவர் மிகப்பெரிய இயக்குநர்; உனக்கு நிறைய பணம் வாங்கித் தருகிறேன் என என்னை அழைத்துச் சென்றார். பெரிய அறையில் என்னை 20 தடியர்களை வைத்து 75 லட்ச ரூபாய்க்கு படத்தின் உரிமையை கொடுக்கச்சொல்லி மிரட்டினார்கள். நான், ‘நல்ல படம் 2 கோடி கொடுங்கள்’ என கேட்டேன். ஆனால், என்னை மிரட்டி கையெழுத்துபோட வைத்து ரூ.75 லட்சம் கொடுத்தார்கள். அந்த திரைப்படத்தினை அந்த சேனலில் இதுவரை 80 தடவை போட்டுள்ளார்கள். அந்த செக்கை அவர்கள் முன் கிழித்துப்போட்டுவிட்டு, ‘நான் கஷ்டப்பட்டு மீண்டு வருவேன்’ என சொன்னேன். ஒவ்வொரு தருணமும் நான் துரோகத்தை அனுபவித்துக்கொண்டே இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.