வக்ஃப் திருத்த மசோதா | நாடாளுமன்றக் கூட்டுக் குழு அறிக்கை நாளை தாக்கல்.. எதிர்க்கட்சிகள் அதிருப்தி!
சர்ச்சைக்குரிய வக்ஃப் திருத்த மசோதாவை பரிசீலிக்க அமைக்கப்பட்ட 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு கடும் எதிர்ப்புக்கிடையே தனது அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. வக்ஃப் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அறிக்கை நாளை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்படும் என குழுவின் தலைவர் ஜெகதாம்பா பால் தெரிவித்தார். காங்கிரஸ் திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கையை எதிர்த்து தங்களது கருத்துக்களை பதிவு செய்யும் அதிருப்தி அறிக்கைகளை சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும், எதிர்க்கட்சிகள் வக்ஃப் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்து பின்னர் உச்சநீதிமன்றம் வரை செல்லவும் உறுதியுடன் உள்ளதாக ஆ ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். பட்ஜெட் கூட்டத்தொடரில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றக் குழு அளித்துள்ள பரிந்துரைகளை உள்ளடக்கிய திருத்தப்பட்ட மசோதாவை மத்திய அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதத்துக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
குழுவின் அறிக்கை அவசரமாக இறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் முக்கிய அம்சங்களை விரிவாக விவாதிக்கவில்லை எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். நேற்று மாலை குழுவின் உறுப்பினர்களுக்கு 655 பக்கங்கள் கொண்ட குழுவின் வரைவு அறிக்கை வழங்கப்பட்டது எனவும் அத்தனை விவரங்களையும் படித்து இன்று காலை 10 மணிக்கு விவாதம் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர். போதிய அவகாசம் அளிக்கவில்லை என்பதும் தேவையான ஆவணங்களை குழுவின் உறுப்பினர்களுக்கு அளிக்கவில்லை என்பதும் அவர்களது புகாராக உள்ளது.
வக்ஃப் சொத்துக்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பரிந்துரைகளை நிராகரித்து அவசரகதியில் அறிக்கையை இறுதி செய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற குழுவில் உளள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். திமுகவின் ஆ ராசா, மஜ்லிஸ் கட்சியின் அசாதுதீன் ஓவைசி, காங்கிரஸ் கட்சியின் இம்ரான் மசூத் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கல்யாண் பானர்ஜி உள்ளிட்டோரின் கருத்துக்களை குழுவின் தலைவர் ஜெகதாம்பா பால் நிராகரித்தார் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
அதிருப்தி அறிக்கைகளை வழங்க இன்று மாலை 4 மணி வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். குழுவின் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க தேசிய ஜனநாயக கூட்டணியின் 16 எம்பிக்கள் வாக்களித்தனர். அறிக்கைக்கு எதிராக பத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் குழுவின் அறிக்கை இறுதிசெய்யப்பட்டது எனவும் வியாழக்கிழமை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜகதம்பா பால் தெரிவித்தார்.
மக்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு தனி பெரும்பான்மை இல்லாத நிலையில், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், மற்றும் லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் வக்ஃப் மசோதாவை நிறைவேற்ற அரசு தரப்பு திட்டமிட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் 16 உறுப்பினர்கள், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 12 உறுப்பினர்கள் மற்றும் லோக் ஜன சக்தியை கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் மக்களவையில் வக்ஃப் மசோதாவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என பாஜக எம்பிக்கள் தெரிவித்தவர். இதைத் தவிர ராஷ்டிரிய ஜனதா தளம், அப்னா தளம் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக தெரிவித்துள்ளன என அவர்கள் குறிப்பிட்டனர்.
வக்ஃப் சொத்தா, இல்லையா என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்குவது, பயன்பாட்டின் அடிப்படையில் வக்ஃப் சொத்தாக அறிவிப்பதை முடிவுக்கு கொண்டுவருவது, பிற மதங்களை சேர்ந்தவர்களையும் வக்ஃப் உறுப்பினர்களாக நியமிப்பது மற்றும் நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துக்களை ஒரே தளத்தில் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் வக்ஃப் மசோதாவில் இடம்பெற்றுள்ளன. இஸ்லாமிய சமுதாயத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பஸ்மன்டா பிரிவினர், ஏழைகள், மகளிர் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு வக்ஃப் சொத்துக்கள் மூலம் பலன் திட்டம் வகையிலே மசோதாவில் முக்கிய அம்சங்கள் உள்ளன என ஜகதாம்பா பால் தெரிவித்தார்.
வக்ஃப் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு மற்றும் ரயில்வே சொத்துக்களை மீட்க மசோதா அமலான பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என கருதப்படுகிறது. ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்பது மற்றும் வக்ஃப் மூலம் கிடைக்கும் வருவாயை சரியான முறையில் பயன்படுத்துவது ஆகியவையும் மசோதா மூலம் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது என பாஜக உறுப்பினர்கள் தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய வக்ஃப் மசோதாவின் பல்வேறு அம்சங்கள் வக்ஃப் விவகாரங்களில் அதிகாரிகள் மூலம் அரசு தலையிட வழிவகுக்கும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருதுகிறார்கள். இது இஸ்லாமிய சமுதாயத்தை பலவீனப்படுத்தும் எனவும் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.