சமீபத்தில் சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் `SK25' படம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சுதா இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது சூர்யா. `புறநானூறு’ எனத் தலைப்பு கூட அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்டேட் இல்லை. ஒரு படத்தில் நடக்கும் மாற்றங்களோ, படமே நடக்காமல் போய் கைவிடப்படுவதோ சினிமாவில் மிக சகஜமான ஒன்று.
இதில் சூர்யா - சுதாவின் படம் என்ன ஆனது எனப் பார்க்கும் முன், சூர்யாவின் கேரியரில் இதற்கு முன்பு என்ன படங்கள் எல்லாம் கைமாறியது? எது டிராப் ஆனது? எது நடக்கவில்லை? என்பதை இங்கே பார்க்கலாம்.
சூர்யாவை சினிமாவில் `நேருக்கு நேர்' படம் மூலம் அறிமுகப்படுத்தியது வசந்த்தான். ஆனால், அந்தப் படத்திற்கு முன்பே வசந்தின் முதல் படமான `ஆசை' படத்தில் ஹீரோவாக நடிக்க வசந்த் கேட்டது சூர்யாவைதான். ஆனால், அப்போது சூர்யாவுக்கு நடிப்பு மேல் ஆர்வம் இல்லாமல் இருக்க, படத்தில் நடிக்கவில்லை. பின்பு அது அஜித்துக்கு பெரிய அடையாளம் கொடுத்த படமாக மாறியது தனிக்கதை.
எஸ் பி ஜனநாதன் `இயற்கை' கதையை முதலில் சொன்னது சூர்யாவிடம். ஆனால், அப்போது சூர்யா ரொமான்ஸ் படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து இருந்ததால் இயற்கைக்கு நோ சொன்னதாக சொல்லப்படுகிறது.
2004ல் சூர்யா - அசின் நடிப்பில் கௌதம் மேனன் துவங்கிய படம் `சென்னையில் ஒரு மழைக்காலம்’. படத்துக்கு இசை ஹாரிஸ். ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்த நிலையில், படம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்பு சில பிரச்சனைகளால் படம் நடக்கவில்லை.
மீண்டும் 2009ல் இதே தலைப்பில் த்ரிஷா மற்றும் சில புதுமுகங்களை வைத்து கௌதம் மேனன் ஒரு படத்தை திட்டமிட்டார். இந்த முறை இசை ஏ ஆர் ரஹ்மான். ஆனால் அப்போதும் நடக்கவில்லை. ஆனால் சூர்யா - ஹாரிஸ் கூட்டணியுடன் `வாரணம் ஆயிரம்’ படத்திலும், த்ரிஷா - ஏ ஆர் ரஹ்மானுடன் `விண்ணை தாண்டி வருவாயா’ படத்திலும் கௌதம் பின்னர் இணைந்தார்.
`காக்க காக்க’, `வாரணம் ஆயிரம்’ என இரு வெற்றிப் படங்களை தொடர்ந்து, மீண்டும் கௌதம் - சூர்யா இணைந்து பணியாற்ற சில கதைகளை ஆலோசித்த நிலையில், `துருவ நட்சத்திரம்’ கதைக்கு ஓக்கே சொல்கிறார் சூர்யா. படம் கமிட்டாகி ஒருவருடம் மேலாகியும் படத்தின் முழுக்கதையை தன்னிடம் சொல்லவில்லை என இந்தப் படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். அந்த நேரத்தில் சூர்யா இது தொடர்பாக வெளியிட்ட பிரஸ் நோட்டும் குறிப்பிடத்தக்கது. பின்பு இந்தப் படத்தில் விக்ரம் நடித்ததும், இன்னும் வெளியீட்டுக்காக காத்திருப்பதும் தனிக்கதை.
சூது கவ்வும் படத்திற்கு பிறகு `எஸ்கிமோ காதல்' என்ற கதையை சூர்யாவுக்கு சொல்லியிருக்கிறார் நலன். சூர்யாவும் ஓக்கே சொல்ல, முழுக்க முழுக்க காதல் கதையான அதை படமாக்க பரபரப்பாக தயாரானார் நலன். இளம் இயக்குநர்களுடன் பணியாற்ற ஆர்வமாக சூர்யா இருந்த போதிலும் `அஞ்சான்' பட வேலைகள் குறுக்கே வர நலன் படத்தில் சூர்யா நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து `My Dear Desperado' படத்தை `காதலும் கடந்து போகும்' என ரீமேக் செய்தார் நலன்.
மெட்ராஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு பா ரஞ்சித் சூர்யா நடிப்பில் ஒரு படம் இயக்குவதற்கான வேலைகள் நடந்தன. ஆனால் அப்போது ரஜினிகாந்த் படத்தை இயக்கம் வாய்ப்பு இரஞ்சித்துக்கு அமைய `கபாலி', `காலா' என அடுத்தடுத்து இரு படங்களில் பிஸியானார்.
ஆறு, வேல், சிங்கம் படத்தில் மூன்று பாகங்கள் என ஐந்து மெகா ஹிட் கொடுத்து சூர்யாவின் கரியரை உச்சத்துக்கு கொண்டு சென்றவர் ஹரி. மீண்டும் இந்தக் கூட்டணி இணையும் படமாக `அருவா’ அறிவிக்கப்பட்டது. ஆனால் ஹரி - சூர்யா இடையே கருத்து வேறுபாடு காரணமாக இந்தப் படம் கைவிடப்பட்டது. இதன் பின் அடுத்த படத்தை சிவா இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சிவாவுக்கு ரஜினிகாந்த் பட வாய்ப்பு கிடைக்க, சூர்யா அனுமதியோடு `அண்ணாத்த’ படத்தை இயக்கினார். பின்பு சுதா கொங்கரா இயக்கத்தில் `சூரரைப் போற்று’ படமாக அது உருவானது.
`கங்குவா’ படத்தில் தெலுங்கு பதிப்பிற்கான புரமோஷனில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ராஜமௌலி. அதில் சூர்யா பற்றி ராஜமௌலி பேசும் போதும், ராஜமௌலி பற்றி சூர்யா பேசும் போதும் “இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டி இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை” எனக் கூறினர். அது என்ன படமாக இருக்கும் யோசிக்கையில் இரு படங்களை பற்றிய பேச்சு எழுந்தது. ஒன்று மகதீரா, இன்னொன்று பாகுபலி. இவ்விருபடங்களில் ஏதேனும் ஒன்றா அல்லது வேறு எதுவுமா என்பதை சம்பந்தப்பட்டவர்களே உறுதிப்படுத்த வேண்டும்.
2022ல் பாலா - சூர்யா கூட்டணியில் `சூர்யா 41’ உருவாகும் என அறிவிக்கப்பட்டது. பாலாவின் பிறந்தநாளான ஜூலை 11ம் தேதி படத்தின் பார்ஸ்டலுக் `வணங்கான்’ என்ற தலைப்புடன் வெளியானது. படப்பிடிப்பு சில காலம் நின்றதால் படம் கைவிடப்பட்டது என சில தகவல்கள் உலாவும் போதும், சூர்யா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள காத்திருக்கிறேன் எனப் பதிவிட்டு நம்பிக்கை கொடுத்தார். ஆனால் டிசம்பர் 4ம் தேதி பாலா ஒரு அறிவிப்பை வெளியிட்டு, “கதையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் சூர்யாவுக்கு உகந்ததாக இருக்காது. எனவே நாங்கள் இருவரும் பேசி இப்படத்தில் இருந்து அவர் விலகுவதாக முடிவெடுத்திருக்கிறோம்” என்றார். அதன் பின் வணங்கானில் அருண் விஜய் நடித்து வெளியாக தயாராகியுள்ளது.
`சூரரைப் போற்று’ படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு சூர்யா - சுதா இணையும் படமாக அறிவிக்கப்பட்டது `புறநானூறு’. துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகரான விஜய் வர்மா என பயங்கரமான காமினேஷன்களுடன் படத்தின் மோஷன் போஸ்டரும் கூட வெளியானது. இந்தி எதிர்ப்பு போராட்ட பின்னணியில்தான் படத்தின் கதை எனத் தகவல்களும் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், 2024 மார்ச் 18ம் தேதி "புறநானூறு உருவாக்க இன்னும் நேரம் தேவைப்படுகிறது. இந்தக் கூட்டணி என் மனதுக்கு நெருக்கமானது. சிறப்பான ஒன்றை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். விரைவில் இதன் பணிகளைத் துவங்குவோம்" என சுதா - சூர்யா கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
இப்போது சுதா, சிவகார்த்திகேயனின் 25வது படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அது `புறநானூறு’தான் என்கிறது ஒரு தரப்பு. பொறுத்திருந்து பார்ப்போம்.
தற்போது சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு, ஆர் ஜே பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார்.