பிரேசில் | மூளையில் ரத்த உறைவு கட்டி.. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதிபர் டிஸ்சார்ஜ்!
பிரேசில் அதிபரான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தலைநகர் பிரேஸிலியாவில் உள்ள அதிபர் மாளிகையில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் உண்டானது.
தொடர்ந்து அவருக்கு மூளையில் ரத்த உறைதல் பாதிப்பால் கட்டி உருவாகியிருந்த நிலையில், அவருக்கு சா பாலோ நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. ஒரே வாரத்தில் இரண்டு அறுவைச்சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதற்கிடையே, அவர் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வீடியோ ஒன்றை அதிபர் அலுவலகம் வெளியிட்டது. அதில், அறுவைசிகிச்சைக்குப் பின் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, மருத்துவமனையில் நடைபயிற்சி மேற்கொண்ட காட்சிகள் வெளியாகின.
மேலும் அவர் எந்தச் சிரமமுமின்றி, மருத்துவருடன் சேர்ந்து அதிபர் நடைபயிற்சி மேற்கொண்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதேநேரத்தில், அவருடைய உடல் நலனைத் தொடர்ந்து கண்காணிக்கும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மேலும் அவர் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
டிஸ்சார்ஜ்க்குப் பின் பேசிய லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, “நான் இப்போது வீட்டிற்குச் செல்கிறேன். எனக்கு இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை. நிச்சயமாக நான் குணமாகிவிட்டேன். இனி, நான் என்னை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். நான் இறக்கப்போகிறேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை, ஆனால் நான் பயந்தேன். இனி, சில கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். பல பிரேசிலியர்களைப்போல இந்த ஆண்டு இறுதி விடுமுறைக்கு நான் கடற்கரைக்குச் செல்ல மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.