``பாலா அண்ணாவுடன்...”- வணங்கான் விலகல் குறித்து சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் பதில்!

``பாலா அண்ணாவுடன்...”- வணங்கான் விலகல் குறித்து சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் பதில்!
``பாலா அண்ணாவுடன்...”- வணங்கான் விலகல் குறித்து சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் பதில்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து தயாராகிவந்த வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக இயக்குநர் பாலா தரப்பில் நேற்று அறிக்கை வெளியானது. இதற்கு பதிலளித்து சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெட்ஸூம் ட்விட் போட்டுள்ளது.

நடிகர் சூர்யாவும் இயக்குநர் பாலாவும் மூன்றாவது முறையாக `வணங்கான்’ என்ற படத்துக்காக கடந்த ஆண்டு இறுதியில் இணைந்தனர். இப்படத்தின், அறிவிப்பு அதிகாரபூர்வமாக கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. துருவ் விக்ரமின் ‘வர்மா’ படத்திற்குப் பிறகு பாலா இப்படத்தை இயக்கி வந்தார். சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்த இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக, ‘உப்பெனா’ புகழ் கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடர்ச்சியாக கன்னியாகுமரியில் நடைபெற்றுவந்த நிலையில், கடந்த ஏப்ரல் - மே மாதங்களின் நேரத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதால், சூர்யா படத்திலிருந்து விலகுகிறார் என்று தகவல் வெளியானது. ஆனால், இதனை மறுத்த தயாரிப்பு நிறுவனம் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்கவுள்ளது என்று அதற்கு முடிவுகட்டியது.

மீண்டும்கூட இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவின. "பாலா ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் எடுத்ததால் கடுப்பாகிப் போன சூர்யா படத்தினை ட்ராப் செய்துவிட்டார்" என்று சொல்லப்பட்டது. இதனை மறுக்கும் விதமாக பாலாவுடன் சூர்யா அமர்ந்திருக்கும் ‘சூர்யா 41’ படத்தின் கெட்டப்புடன் இருக்கும் சூப்பர் போட்டோவை பகிர்ந்து ”‘சூர்யா 41’ படப்பிடிப்புக்காக காத்திருக்கிறேன்” என்று உற்சாகமுடன் பதிவிட்டார்.

இப்படியான சூழலில்தான், நேற்று (டிச.04) இரவு இப்படம் கைவிடப்படப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திலிருந்து, சூர்யா மட்டுமே விலக உள்ளார் என தெரிகிறது. இதுபற்றி இயக்குநர் பாலா தரப்பிலிருந்து அறிக்கை வெளியாகியுள்ளது. அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான்' என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே 'வணங்கான்' திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக சூர்யா முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. 'நந்தா'வில் நான் பார்த்த சூர்யா, 'பிதாமகன்'-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி 'வணங்கான்' படப்பணிகள் தொடரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். சுமார் ஒரு வருட காலமாக நடந்து வரும் வணங்கான் பட வேலைகளிலிருந்து சூர்யா விலகுவது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து வணங்கான் படத்துக்கு தயாரிப்பு பணிகளை 2டி நிறுவனம் ஏற்குமா என்பது கேள்விக்குறியானது. மேலும் படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்றால், வேறு யார் அந்த கதாபாத்திரத்துக்கு நடிப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் சூர்யாவின் 2டி எண்டர்டைமண்ட் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் '2DEntertainment ' நிறுவனமும் வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்” என்று பதிவிட்டுள்ளது.

இதனால் படத்திற்கு தற்போது யார் தயாரிப்பாளர், இனி யார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகர் போன்றவை கேள்விகளாக உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com