“யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார்கள்தானே?” - இளையராஜா விவகாரத்தில் கலையரசி நடராஜன்
வெளியே அனுப்பப்பட்ட இளையராஜா
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலுக்கு சென்ற இசையமைப்பாளர் இளையராஜாவை, உற்சவர் சிலை அமைந்துள்ள அர்த்தமண்டபத்திற்கு வெளியே நிற்க வைத்த சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.
ஆடித் திருப்பூரப் பந்தலில் நடைபெற்ற விழாவில், இளையராஜா இசையமைத்து பாடிய திவ்ய பாசுரம் இசைக் கச்சேரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளையராஜா, ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்காக சென்றார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர், ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயரும் இதில் பங்கேற்றனர்.
அப்போது ஜீயர்கள், உற்சவர் இடம்பெற்றுள்ள அர்த்தமண்டபத்திற்கு சென்றபோது, இளையராஜாவும் உள்ளே சென்றார். இதைக் கண்ட ஜீயர்களும் பட்டர்களும் இளையராஜாவை வெளியே நிற்குமாறு கூறினர். அதன் பிறகு அர்த்தமண்டபத்திற்கு வெளியே அனுப்பப்பட்ட இளையராஜா, அங்கிருந்தபடியே வழிபாடு செய்ய நேரிட்டது. அவருக்கு பரிவட்டமும் கட்டப்பட்டது. இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை அர்த்தமண்டபத்திற்குள் செல்ல அனுமதி மறுத்தது சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஜீயர் தவிர யாருக்கும் அனுமதி கிடையாது
இதனிடையே, இதுதொடர்பாக, மதுரை இந்து சமய இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “திருக்கோவிலின் மரபுப் படியும், பழக்க வழக்கப்படி, ‘அர்த்த மண்டபம் வரை கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர, இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கவில்லை’ என்று செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இளையராஜா, சின்ன ராமானுஜ ஜீயருடன் அர்த்த மண்ட வாசல்படியில் ஏறியபோது, ஜீயரும் கோயில் மணியமும், அர்த்த மண்டபம் முன் தரிசனம் செய்யலாம் என இளையராஜாவிடம் தெரிவித்தார். இதனை இளையராஜாவும் ஏற்றுக்கொண்டு, அர்த்த மண்டபத்தின் முன் நின்று சாமி தரிசனம் செய்தார். சின்ன ராமானுஜ ஜீயர் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தார்” என விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விளக்கம் விருதுநகர் ஆட்சியருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
எதற்காக செல்ல வேண்டும்..
இந்நிலையில் ஆன்மீக பேச்சாளர் கலையரசி நடராஜன் இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசினார். அவர் கூறுகையில், “இந்து சமய அறநிலையத்துறையினர் கோவிலில் என்ன சொல்கிறாரோ அதைத்தான் சொல்வார்கள். மற்றபடி, ஆகமம் என்பதெல்லாம் வைணவத்திற்கு ஒரு மாதிரியும், சைவத்திற்கு ஒருமாதிரியும் இருக்கிறது. சைவத்திற்கு உள்ள நடைமுறை என்பது சாதிப்பாகுபாடு எதையும் பார்ப்பது கிடையாது.
‘அர்த்த மண்டபம் வரைதான் செல்ல வேண்டும். அதற்கு முன்பு செல்ல முடியாது’ என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது. ஆகமம் என்பது இறைவனால் அருளப்பட்டது என்பது உண்மையாக இருந்தால், எந்த மனிதரையும் உயர்த்தியும் தாழ்த்தியும், இவர் உள்ளே வரலாம் வரக்கூடாது என்றெல்லாம் சொல்லி இருக்க மாட்டார். ஆகமம் என்பது கோவிலுக்கு கோவில் வேறுபட்டு மனிதர்களால் உருவாக்கப்பட்டது.
வைணவ ஆகமங்கள் எல்லாம் சாதி அடிப்படையிலேயே வகுக்கப்பட்டுள்ளன. ராமானுஜரையே சாதி நீக்கம் செய்யும் அளவிற்கு அவர்களுக்கு அந்த உணர்வு இருந்தது. இவ்வளவு காலத்திற்குப் பிறகும், எல்லா விவரங்களும் மக்களுக்குத் தெரியும் இந்தக் காலக்கட்டத்திலும், அதே நடைமுறையை கடைப்பிடிக்கிறார்கள் என்றால், அந்த இடத்திற்கு எதற்காக செல்ல வேண்டும்.
பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்கிறார்கள்
பணம் யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார்கள்தானே? அவர்களுடைய சட்டத்திட்டத்திலும், அவர்களுடைய ஆகமத்திலும் இன்னின்னாரிடம் பணம் வாங்கக்கூடாது என்று வரைமுறை இருக்க வேண்டும்தானே? ஆனால், அப்படி இல்லையே. அந்த ஆகமத்தில் இன்னின்னார் உள்ள வர வேண்டும், இவர்கள் எல்லாம் உள்ளே வரக்கூடாது என்று வைத்துள்ளார்கள். அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை ஏற்றத்தாழ்வை தங்களது வாழ்வின் ஆதரமாகக் கொண்டு அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நடுவனரசு ஆட்சியாளர்கள் இந்த நாட்டை முழுமையாக அவர்களது கைகளுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள் என்றால், கோவிலுக்கு யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதை அவர்கள் தீர்மானம் பண்ணுவார்கள். இதுதான் நம் நாட்டில் இனி நடக்கப்போகிறது.
மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்
மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். நம்மால் வேறு என்ன செய்ய முடியும். அதாவது, ஜீயர்களும் பட்டாச்சாரியார்களும் ஒரு இடத்திற்கு போகலாம். வேறு ஒரு மனிதன் போகக்கூடாது. மனிதனில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பது யாருக்குத் தெரியும்? இறைவன் ஒருவனுக்குத்தானே தெரியும். இவர்கள் யார் அதைத் தீர்மானிப்பதற்கு? இன்ன சாதியில் ஒருவன் பிறந்துள்ளான்; அவனிடம் காசு வாங்கக்கூடாது என்று இறைவன் எங்காவது சொல்லியுள்ளானா? இந்த விழிப்புணர்வு மக்களுக்கு வந்தது என்றால் இந்த ஜீயர்கள், பட்டாச்சாரியார்களின் ஆட்டமெல்லாம் தானாகவே அடங்கிவிடும்.
அறநிலையத்துறையின் கைகளில் கோவில் இருக்கக்கூடாது எனச் சொல்கிறார்கள். எதற்கு? இம்மாதிரி ஆட்டம் எல்லாம் ஆடுவதற்குத்தான்..” எனத் தெரிவித்தார்.