நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதுதான் சினிமா உலகின் விவாதப் பொருளாக உள்ளது. பொங்கலுக்கு படம் கண்டிப்பாக வெளியாகும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வெளியீடு ஒத்திவைப்புக்கு ஆந்திர மாநில ரிலீஸ்தான் காரணம் என தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தைப் போலவே, ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் அஜித்தின் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. டோலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூவின் கட்டுப்பாட்டில் தான் நூற்றுக் கணக்கான திரையரங்குகள் உள்ளன. ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' படத்தின் தயாரிப்பாளரே தில் ராஜூ தான் என்பதால், விடாமுயற்சிக்கு போதிய திரையரங்குகள் கிடைக்காது என கூறப்படுகிறது. இதன் காரணமாக, வசூல் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.
அதே நேரத்தில், விடாமுயற்சி படத்தின் இறுதிகட்டப் பணிகளை நிறைவு செய்ய, தயாரிப்பு நிறுவனமான லைக்காவிடம் போதிய பணம் இல்லை என்ற தகவலும் சொல்லப் படுகிறது. இது அஜித்குமாரின் ரசிகர்களை சோர்வடையச் செய்திருக்கிறது.
இதுஒருபுறம் இருந்தாலும், விடாமுயற்சி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பொங்கல் ரிலீஸ்க்காக களத்தில் 10 படங்கள் குதித்துள்ளன. வணங்கான், சுமோ, நேசிப்பாயா, தருணம், மெட்ராஸ்காரன் என வரிசை நீள்கிறது. எது எப்படி இருந்தாலும், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தயாராக உள்ள ஒரு பெரிய பட்ஜெட் படம் ஒத்திவைக்கப்படுவது சிறிய பட்ஜெட் படங்களுக்கு நன்மையைத்தான் செய்யும் என்கின்றனர். அதேசமயத்தில் மாறுபட்ட கருத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன.
ஓரிரு தினங்களுக்குமுன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதுதொடர்பாக யுடியூப் தளம் ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில், “விடாமுயற்சி திரைப்படம் வெளியாகுமா? ஆகாதா? என்பது குறித்து இன்னும் சரியாக தெரியவில்லை. படம் வெளியாகும் என தெரிந்தால்தான் நம்மால் ஒரு முடிவை எடுக்க முடியும். படம் வெளியாகும் அல்லது வெளியாகாது என சில நாட்களுக்கு முன்பே தெளிவாக சொல்லிவிட்டால், அந்த வெளியீட்டு தேதியை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்தானே. நீங்கள் கடைசி நிமிடத்தில் படம் வெளியாகுமா அல்லது ஆகாதா என்பது குறித்து சொன்னால், அடுத்து வெளியாக நினைக்கும் படங்களுக்கு ஓவர்சீஸ் கண்டெண்டை எப்படி அனுப்புவார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
பெரிய பட்ஜெட் படங்கள் வெளியீடு அறிவிக்கப்பட்டு தள்ளிப்போகும் சூழலில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு என்ன நன்மைகள் ஏற்படும் என்பது தொடர்பாக பேச திருப்பூர் சுப்பிரமணியன் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
திருப்பூர் சுப்பிரமணியம் பேசுகையில், “விடுமுறை நாட்கள் பொதுவாக சின்ன பட்ஜெட் படங்களுக்குக் கிடைக்காது. பெரிய பட்ஜெட் படங்கள் தள்ளிப்போவதில் நாலைந்து சின்ன பட்ஜெட் படங்களுக்கு உதவிகரமானதாகத்தான் இருக்கும். சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதும் சிக்கல் இல்லை. மொத்தமாகவே 1168 ஸ்க்ரீன்கள்தான் உள்ளது. வெளியாகும் சிறிய பட்ஜெட் படங்கள் தங்களுக்குள் திரைகளைப் பகிர்ந்து கொள்ளப்போகிறார்கள். பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தள்ளிப்போவது சின்ன பட்ஜெட் படங்களுக்கு லாபம்தான்” எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “விடுமுறை நாட்களில் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பதை மக்கள் எப்போதும் விரும்புவார்கள். படம் நன்றாக இருந்தால் மக்கள் திரையரங்கிற்கு வரப்போகிறார்கள். பொங்கலுக்கு நல்ல திரைப்படங்கள்தான் திரைக்கு வருகிறது.
ஆனால், பெரிய நடிகர்களது படங்கள் வருவதை இதனுடன் ஒப்பிட முடியாது. அஜித், விஜய் திரைப்படங்கள் வெளியானால் ரசிகர்கள் அளவுக்கதிகமாக திரையரங்கிற்கு வருவார்கள். நல்ல ஓப்பனிங் கிடைக்கும். எல்லா திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் அந்த ஓப்பனிங்கை விரும்புவார்கள். மற்ற சிறிய படங்களுக்கு அது இருக்காது. அது ஒன்று மட்டும்தான் சிக்கலானது.
மற்றபடி, நல்லபடங்களுக்கு கூட்டம் படிப்படியாக அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக மகாராஜாவைச் சொல்லலாம். அமரன் படம் கூட படிப்படியாக பிக்அப் ஆனதுதான். பெரிய படங்கள் மட்டும்தான் ரசிகர்களை திரையரங்கிற்கு கொண்டு வரும் என்பது இல்லை.
சிறிய படங்களை பெரும்பாலும் ரிலீஸ் செய்வதற்கு தயாராகவே வைத்திருப்பார்கள். தற்போதுகூட பொங்கலுக்குப் பின் ரிலீஸ் செய்துகொள்ளலாம் என காத்திருந்தனர் அவ்வளவுதான். 100 திரையரங்குகள் கிடைத்தால்கூட போதுமானதுதானே? சிறிய பட்ஜெட் படங்களுக்கு தொடர்ச்சியான இந்த 10 நாள் விடுமுறை எப்போது கிடைக்கும். அதை தவறவிடலாமா? திரைத்துறைக்கு இது நல்லதுதான். 10 படங்களில் 4 திரைப்படங்கள் நன்றாக இருந்தால்கூட மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள்” எனத் தெரிவித்தார்.