ஒரு பெரிய படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் போனால், திரையரங்க உரிமையாளர்கள், ரசிகர்கள் உட்பட பலர் ஏமாற்றம் அடைவார்கள். அதே சமயம், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல சின்ன பட்ஜெட் படங்கள் வரிசைகட்டி வெளியாகும். இந்தப் பொங்கலில் சீறிவரும் ஜல்லிக்கட்டு காளையாக ரிலீஸுக்கு நாங்க ரெடி என வாடிவாசலில் நிற்கும் படங்களின் லிஸ்ட் இதோ..!
ஜெயம் ரவி , நித்யா மேனன் நடிப்பில் காதல் ரசம் சொட்ட சொட்ட வெளியாகவிருக்கும் படம் காதலிக்க நேரமில்லை. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இப்படத்தின் மிகப்பெரிய கிரவுட் புல்லர் ரஹ்மானின் இசை தான். ஏற்கெனவே வெளியான இரண்டு பாடல்களுக்கும் பெரிய ஹிட். ரெட் ஜெயன்ட் சார்பில் வெளியாக வேண்டிய விடாமுயற்சி தள்ளிப்போனதால், அவர்கள் பட்டியலில் இருக்கும் இன்னொரு படமான காதலிக்க நேரமில்லை படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஷேன் நிகம், கலையரசன், ஐஷ்வர்யா தத்தா, நிஹரிக்கா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் மெட்ராஸ்காரன். முன்பின் தெரியாத இரண்டு நபர்களுக்கு மத்தியில் எழும் விவாதம் எப்படி இருவரின் வாழ்க்கையையும் பாதிக்கறது என்பதே இந்தப் படத்தின் ஒன்லைன்.
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் படை தலைவன். கடந்த செப்டம்பர் மாதமே வெளியாகவிருக்க வேண்டிய, சில காரணங்களால் தள்ளிப்போக, இந்தப் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இளையராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் விஜயகாந்தை AI மூலம் திரையில் தோன்ற வைக்கவிருக்கிறார்கள்.
தேஜாவூ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அரவிந்த் சீனிவாசனின் அடுத்த படம் தருணம். கிஷன் தாஸ், ஸ்முருதி வெங்கட் நடிப்பில் வெளியாகும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.
சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம், தற்போது அருண் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கிறது. இயக்குநர் பாலா படம் என்பதால் அவரின் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது.
ஷங்கர் இயக்கம், கார்த்திக் சுப்புராஜ் கதை, ராம் சரண் நடிப்பு , தில் ராஜூ தயாரிப்பு என இந்தப் பொங்கலில் பிரமாண்ட சினிமா கேம் சேஞ்சர் தான். ஐஏஸ் அதிகாரி ஒருவர் சந்திக்கும் சிக்கல்களே இந்தப் படத்தின் சாராம்சம். ராம் சரண் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் விஷ்ணு வர்தன் இயக்கியிருக்கும் படம் நேசிப்பாயா. முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நாயகனாகவும், அதிதி ஷங்கர் நாயகியாகவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம், தற்போது முந்திக்கொண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
சிவா, பிரியா ஆனந்த், விடிவி கணேஷ், ஜப்பானிய நடிகர் Yoshinori Tashiro யோஷினோரி டஷிரோ நடிப்பில் சில ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திரைப்படம் சுமோ. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியே ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் படமும் தற்போது பொங்கலுக்கு தூசி தட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டென் ஹவர்ஸ். க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம் பொங்கலை ஒட்டி வெளியாக உள்ளது.
எல்லா திருவிழாவுக்கும் திரைப்படங்களை ரிலீஸ் செய்யும் அளவுக்கு எப்போதும் ஷூட்டிங் மோடிலேயே இருக்கும் ஒரே இயக்குநர் சுசீந்திரன் தான். டிசம்பர் மாதமே வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம் தற்போது பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மீனாட்சி, புதுமுக நடிகர் ஜகவீர், பால சரவணன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.