பேருந்து ஓட்டுநர் முதல் வெனிசுலா அதிபர் வரை., யார் இந்த நிக்கோலஸ் மதுரோ?
நிக்கோலஸ் மதுரோ அடிப்படையில் ஒரு பேருந்து ஓட்டுநராக வாழ்வை ஆரம்பித்தவர். தொழிற்சங்கத் தலைவரானது, அவரது அரசியல் வாழ்வின் தொடக்கமானது. வெனிசுலாவின் அதிபராக ஹ்யூகோ சாவேஸ் உருவெடுத்த 1999க்குப் பின் மதுரோவின் அரசியல் வாழ்வும் வேகம் பிடித்தது. கட்சியிலும் ஆட்சியிலும் பல முக்கிய பொறுப்புகளை மதுரோவிடம் ஒப்படைத்தார் சாவேஸ். விரைவில், சாவேஸ் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சரான மதுரோ, தொடர்ந்து சாவேஸுக்கு அடுத்த நிலையில் துணை அதிபரும் ஆனார்.
1999 முதல் 2013 வரை வெனிசுலாவின் செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழ்ந்த சாவேஸ், உலகளாவிய அளவில் இடதுசாரிகள் மத்தியில் புகழையும் பெற்றிருந்தார். அதேசமயம், அமெரிக்காவால் எரிச்சலுடன் பார்க்கப்பட்டார். கியூபாவைத் தொடர்ந்து இன்னொரு எரிச்சலாக வெனிசுலாவைப் பார்த்தது அமெரிக்கா. இத்தகு சூழலில்தான் 2013இல் சாவேஸ் மறைவுக்குப் பின் வெனிசுலாவின் அதிபர் பதவி மதுரோவிடம் வந்தடைந்தது. இந்த 12 ஆண்டுகளில் கட்சியிலும் ஆட்சியிலும் தன்னுடைய பிடியை வலுவாக மதுரோ வைத்திருந்தாலும், சாவேஸ் போன்று மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக அவர் இல்லை என்ற குரல்கள் ஒலித்தன. எதிர்ப்போரைக் கடுமையாக ஒடுக்கிறார்; யதேச்சதிகாரியாக நடந்துகொள்கிறார் எனும் குற்றச்சாட்டுகள் நிறைந்திருந்தன.
வெனிசுலாவின் எண்ணெய் வளம், அது சீனாவுடன் கொண்டிருந்த உறவு, வெனிசுலாவில் வேரூன்றியுள்ள இடதுசாரி சித்தாந்தம், அரசியல் சூழல் காரணமாக அமெரிக்காவை வந்தடையும் புலம்பெயர் வெனிசுலியர்கள்... இந்தக் காழ்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்காவை வந்தடையும் போதை பொருள்களுக்கு வழிப்பாதையாக வெனிசுலா கடல் பகுதி பயன்படுத்தப்படுகிறது எனும் குற்றச்சாட்டையும் சுமத்திவந்தது அமெரிக்கா. மதுரோவை வீழ்த்த சரியான தருணம் பார்த்துவந்த அமெரிக்க நாடு, 2024 வெனிசுலா தேர்தலுக்குப் பின் அதற்கான வேலைகளை ஆரம்பித்தது. 2024 அதிபர் தேர்தலில் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், எதிர்க்கட்சிகளோ அவர்களின் வேட்பாளரான எட்முண்டோ கோன்சலஸ் அமோக வெற்றி பெற்றதாகவும் தேர்தல் முடிவு மதுரோவால் கைப்பற்றப்பட்டதாகவும் கூறின.
முன்னதாக, வெனிசுலாவின் முதன்மை எதிர்க்கட்சித் தலைவரான மரியா கோரினா மச்சாடோ தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டதால், அவருக்குப் பதிலாக நிறுத்தப்பட்டவர் கோன்சலஸ். இந்தப் பின்னணியில்தான் 2025 அமைதிக்கான நோபல் பரிசு மரியா கோரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. வெனிசுலாவைக் குறிவைத்த பிறகு, உலகின் மிகப் பெரிய கடற்படைக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்ட் உள்பட 15,000 வீரர்களுடன் பெரும் துருப்புகளை கரிபீய கடல் பகுதிக்கு அனுப்பியது.
1989இல் அமெரிக்கா பனாமாவை ஆக்கிரமித்த காலத்துக்குப் பின் இந்த பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்ட மிகப் பெரிய படை இதுதான் என்பதால், அப்போதே வெனிசுலா மீது பெரும் தாக்குதல் நடத்தக் கூடும் எனும் எண்ணம் எழுந்தது. சமீப மாதங்களாகவே, போதைப் பொருட்களைக் கடத்துவதாகச் சொல்லி வெனிசுலா படகுகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்திவந்தது அமெரிக்கா.
இப்படிப்பட்ட சூழலில்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப், நவம்பர் 21 அன்று மதுரோவுடன் தொலைபேசியில் பேசியதாகவும், மதுரோ தனக்கு நெருக்கமானவர்களுடன் வெனிசுலாவைவிட்டு வெளியேற சொன்னதாகவும், இதைக் கேட்காதபட்சத்தில் நடவடிக்கையை எடுக்க தயாராக இருக்குமாறு எச்சரித்ததாகவும் கூறப்பட்டது. மதுரோ இதை ஏற்காத நிலையில், வெனிசுலாவைச் சுற்றியுள்ள வான்பரப்பு மூடப்பட்டதாக அறிவித்தார் டிரம்ப். அதன் தொடர்ச்சியாகத்தான், ஜனவரி 3 அன்று வெனிசுலா மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியதாகவும், அதிபர் மதுரோ அமெரிக்க படைகளிடம் பிடிபட்டதாகவும் அறிவித்திருக்கிறார் ட்ரம்ப். அமெரிக்காவின் இந்நடவடிக்கை வெனிசுலாவைத் தாண்டி ஒட்டுமொத்த தென் அமெரிக்க கண்டத்திலும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. அடுத்து, கொலம்பியா மீது அமெரிக்க படைகள் பாயலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

