அமெரிக்க பிடியில் நிக்கோலஸ் மதுரோ.. வெனிசுலாவில் இனி ட்ரம்பின் ஆதிக்கம்!
வெனிசுலா அதிபர் மதுரோவைக் கைது செய்த விவகாரத்தில் அமெரிக்க வீரர்களுக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இதனால் அவர் உற்சாகமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாகவும், அந்த கும்பல்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், இன்று அதிகாலை தலைநகர் கராகஸில், அமெரிக்க விமானப் படை தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் மிராண்டா, அரகுவா மற்றும் லா குய்ரா மாநிலங்களிலும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அரைமணி நேரம் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி புளோரஸும் அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர்கள் தற்போது அமெரிக்க போர்க் கப்பல் மூலம் நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அங்கு அவர்கள் இருவரும், மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, மதுரோவின் கைது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்து வெனிசுலா என்னவாகும் என்ற அச்சமும் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, ”வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்க எரிசக்தி நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்” என அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருப்பது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவிர, புதிய அரசு பதவியேற்கும் வரை அமெரிக்காவே வெனிசுலாவை நிர்வகிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் குறித்து வைத்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மதுரோவைக் கைது செய்த விவகாரத்தில் அமெரிக்க வீரர்களுக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இதனால் அவர் உற்சாகமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

