தந்தையைத் தொடர்ந்து மகனுக்கும் குறி.. தீவிரமாய் தேடும் அமெரிக்கா.. வெனிசுலா அதிபரின் மகன் யார்?
போதைப் பொருள் வழக்கில் வெனிசுலா அதிபர் மதுரோ தவிர, அவரது மகனும் அமெரிக்க அரசால் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளார். குற்றப்பத்திரிகையில் ஆறு நபர்களுடன் சேர்ந்து, அவரது மகன் நிக்கோலஸ் எர்னஸ்டோ மதுரோ குரேராவும் பெயரிடப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாகவும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப் பொருள் பரவலை ஊக்குவிப்பதாகவும் அமெரிக்க தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி அமெரிக்க ராணுவம் வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி, நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரைக் கைது செய்து அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர்கள் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலையில், போதைப் பொருள் வழக்கில் மதுரோ தவிர, அவரது மகனும் அமெரிக்க அரசால் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளார்.
குற்றப்பத்திரிகையில் ஆறு நபர்களுடன் சேர்ந்து, அவரது மகன் நிக்கோலஸ் எர்னஸ்டோ மதுரோ குரேராவும் பெயரிடப்பட்டுள்ளார். அவர் மீது போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு சதி செய்ததாகவும், அமெரிக்காவிற்குள் கோகோயின் கடத்த உதவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க சந்தைகளை நோக்கி போதைப்பொருட்களை கடத்தும் வலையமைப்பில் அவர் முக்கியப் பங்கு வகித்ததாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர் மியாமி உள்ளிட்ட அமெரிக்க இடங்களுக்கு ஏற்றுமதிகளை ஏற்பாடு செய்ததாகவும், அரசுக்குச் சொந்தமான விமானங்களைப் பயன்படுத்தி கோகோயின் கொண்டு சென்றதாதவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க சட்டத்தின்படி, இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
யார் இந்த நிக்கோலஸ் எர்னஸ்டோ மதுரோ குரேரா
இதையடுத்து, வெனிசுலாவின் 'தி பிரின்ஸ்' என்று அழைக்கப்படும் மதுரோவின் மகனான நிக்கோலஸ் எர்னஸ்டோ மதுரோ குரேராவின் இருப்பிடம் குறித்து அமெரிக்கா தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்கா தந்தை மதுரோவை கைது செய்திருக்கும் நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளார். இதற்கிடையே தனது தந்தையின் கைது நடவடிக்கையைக் கண்டித்த அவர், ”அமெரிக்காவை எதிர்த்துப் போராட வெனிசுலா மக்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்” என அவர் அழைப்பு விடுத்துள்ளார். ”நாங்கள் பலவீனமாகத் தோன்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் நாங்கள் பலவீனத்தைக் காட்ட மாட்டோம்” என அவர் எச்சரித்துள்ளார்.
வெனிசுலாவின் நிக்கோலாசிட்டோ அல்லது இளவரசர் என்று அழைக்கப்படும் நிக்கோலஸ் எர்னஸ்டோ மதுரோ குரேரா, 1990ஆம் ஆண்டு, ஜூன் 21ஆம் தேதி நிக்கோலஸ் மதுரோவிற்கும் அவரது முதல் மனைவி அட்ரியானா குவேரா அங்குலோவிற்கும் பிறந்தவர் ஆவார். 2014 வரை வெனிசுலாவின் பொது அமைச்சகத்தில் பணியாற்றிய அவர், தனது தந்தையின் அதிபர் அதிகாரத்தால் அரசியலுக்குள் நுழைந்தார். திரைப்பட தயாரிப்பு அனுபவம் இல்லாதபோதிலும், 2013இல் அதிபரின் சிறப்பு ஆய்வாளர்கள் படையின் தலைவராகவும், 2014இல் தேசிய திரைப்படப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். 2017 அரசியலமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு, அமெரிக்காவை அச்சுறுத்தியதற்காக அவர் பெயர் பெற்றார். தாக்கப்பட்டால் துப்பாக்கிகள் நியூயார்க்கை எட்டும் என்று எச்சரித்தார். 2021 முதல், அவர் ஐக்கிய சோசலிசக் கட்சியின் உறுப்பினராக தேசிய சட்டமன்றத்தில் பணியாற்றி வருகிறார்.

