வெனிசுலாவைத் தாக்கிய அமெரிக்கா.. அதிபர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தல்.. ட்ரம்ப் அறிவிப்பு!
வெனிசுலாவின் பல மாநிலங்களில் பொதுமக்கள் மற்றும் இராணுவ நிறுவல்களை அமெரிக்கா தாக்கியதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தவிர, வெனிசுலா அதிபரும் அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, வெனிசுலா இருநாடுகள் இடையேயான மோதல் நீண்டகாலமாக நடந்துவரும் சூழலில், அதிகளவில் குற்றவாளிகளையும், போதைப் பொருளையும் அமெரிக்காவிற்கு கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாகவும், அந்த கும்பல்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். தவிர, மதுரோவை தானாக முன்வந்து பதவி விலகுமாறு ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ட்ரம்ப் நிர்வாகம் மதுரோவிற்கு எதிராக அதிக அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது. பொருளாதாரத் தடைகளுக்கு அப்பால் இராணுவமும் குவிக்கப்பட்டது.
குறிப்பாக, 15,000க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் கடந்த வாரம் கரீபியன் பகுதியில் நிறுத்தப்பட்டன. இது பல தசாப்தங்களில் கரீபியனில் நிறுத்தப்பட்ட மிகப்பெரிய அமெரிக்க இராணுவ இருப்பு ஆகப் பார்க்கப்பட்டது. இதனால், எந்த நேரத்திலும் போர் ஏற்படும் சூழல் உருவாகும் என உலக நாடுகள் கூறியிருந்தன. இந்த நிலையில், வெனிசுலாவின் பல மாநிலங்களில் பொதுமக்கள் மற்றும் இராணுவ நிறுவல்களை அமெரிக்கா தாக்கியதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தலைநகர் கராகஸில், இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளது. மிராண்டா, அரகுவா மற்றும் லா குய்ரா மாநிலங்களிலும் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க அறிக்கை தெரிவிக்கிறது. இதை, அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால், வெனிசுலாவில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மூலோபாய வளங்களை, குறிப்பாக எண்ணெய் மற்றும் கனிமங்களை, கைப்பற்றி, அதன் அரசியல் சுதந்திரத்தை வலுக்கட்டாயமாக குறைமதிப்பிற்கு உட்படுத்துவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று வெனிசுலா ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், அத்தகைய முயற்சிகள் வெற்றிபெறாது எனவும் அது தெரிவித்துள்ளது.
மறுபுறம் வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதலுக்கு கியூபா, ஈரான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தாக்குதல் காரணமாக, வெனிசுலாவில் உள்ள கொரியர்களை வெளியேற தென்கொரியா உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “வெனிசுலா மீது அமெரிக்கா பெரிய அளவில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

