பேருந்து ஓட்டுநர் டு அதிபர் வரை.. அமெரிக்கா கைது செய்த வெனிசுலாவின் நிகோலஸ் மதுரோ யார்?
வெனிசுலாவில் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்த நாட்டு அதிபரான நிகோலஸ் மதுரோவைக் கைது செய்து நாடு கடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வோம்.
அமெரிக்கா, வெனிசுலா இருநாடுகள் இடையேயான மோதல் நீண்டகாலமாக நடந்துவரும் சூழலில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாகவும், அந்த கும்பல்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார். தவிர, மதுரோவை தானாக முன்வந்து பதவி விலகுமாறு ட்ரம்ப் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ட்ரம்ப் நிர்வாகம் மதுரோவிற்கு எதிராக அதிக அழுத்தத்தைக் கொடுத்து வந்த நிலையில், பொருளாதாரத் தடைகளுக்கு அப்பால் இராணுவமும் குவிக்கப்பட்டது.
தொடர்ந்து வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், தலைநகர் கராகஸில், இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடைபெற்றதாக வெனிசுலா தெரிவித்துள்ளது. மிராண்டா, அரகுவா மற்றும் லா குய்ரா மாநிலங்களிலும் தாக்குதல்கள் நடத்தியதாக அது தெரிவித்துள்ளது. இதை, அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளது. தவிர, இந்த தாக்குதலில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
யார் இந்த நிக்கோலஸ் மதுரோ?
1962ஆம் ஆண்டு, நவம்பர் 23ஆம் தேதி ஒரு தொழிற்சங்கத் தலைவரின் மகனாக பிறந்தவர் நிக்கோலஸ் மதுரோ. சிறுவயது முதலே அவரது அரசியல் இடதுசாரி பக்கம் திரும்பியது. இதற்கிடையே, மதுரோ கராகஸில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து, பின் அத்துறையின் சங்கத்தில் படிப்படியாக உயர்ந்தார். 1992ஆம் ஆண்டு, அப்போது ராணுவ அதிகாரியாக இருந்த சாவேஸ், ஒரு தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்காகச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, மதுரோ, தனது வருங்கால மனைவி சிலியா புளோரஸுடன் சேர்ந்து சாவேஸின் விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1998ஆம் ஆண்டு சாவேஸ் அதிபராக அரியனை ஏறிய பிறகு, மதுரோ முறையாக அரசியலில் நுழைந்து சட்டமன்றத்தில் ஓர் இடத்தைப் பிடித்தார். அவர் தேசிய சட்டமன்றத்தின் தலைவரானார். பின்னர் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றினார். வெனிசுலாவின் எண்ணெய் வளத்தால் ஆதரிக்கப்படும் சர்வதேச கூட்டணிகளை உருவாக்க உலகம் முழுதும் பயணம் செய்தார். அதேநேரத்தில், சாவேஸின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. இதையடுத்து, 2011ஆம் ஆண்டு, மதுரோ துணை அதிபரானார்.
தவிர, சாவேஸ் தனது மரணத்திற்கு முன் மதுரோவை தனது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் வாரிசாக பகிரங்கமாக அறிவித்தார். பின்னர் சாவேஸின் மரணத்திற்குப் பின், 2013ஆம் ஆண்டு மதுரோ குறுகிய வாக்கு வித்தியாசத்தில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் கடுமையான பொருளாதார சரிவைச் சந்தித்தது. அதிக பணவீக்கம், உணவு மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக வெனிசுலா மக்கள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேறினர். ஆனாலும் அவரது 2014 மற்றும் 2017ஆம் ஆண்டுகால ஆட்சி, தேர்தல்களில் மோசடிகள் மற்றும் போராட்டங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவும் பிற நாடுகளும் மதுரோ அரசாங்கத்தின் மீது கடுமையான தடைகளை விதித்தன. தவிர அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும் வைத்தது.
ஆனாலும், அதை அவர் தொடர்ந்து நிராகரித்து வருகிறார். இதற்கிடையே 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மோசடி நடைபெற்றதாக எதிர்க்கட்சிகளும் அமெரிக்காவும் ஐரோப்பா நாடுகளும் அவர்மீது குற்றஞ்சாட்டின. ஆனால், அதை மறுத்து, அவர் ஜனவரி 2025இல் மூன்றாவது முறையாக பதவியேற்றார். ஆட்சிக்கு வந்த பிறகு அவரை எதிர்த்த பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சமீபத்திய ஐ.நா. உண்மை கண்டறியும் பணி, வெனிசுலாவின் பொலிவேரியன் தேசிய காவல்படை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

