அணு ஆயுதங்கள் விண்ணில் இருந்து பாயுமா..! புதிய யுத்தத்தை தொடங்கும் ரஷ்யா?
ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் வெளிவருகின்றனவோ இல்லையோ.. போர் முறைகள் ஒவ்வொரு தினமும் புதுப்புது அவதாரங்களை எடுத்து வருகிறது. நிலம், கடல், விண்வெளி என போர் முறைகள் இருந்த நிலையில், தற்போது விண்வெளியையும் தாண்டியிருக்கிறது. அந்த வகையில், உக்ரைனின் செயற்கைக்கோளை ரஷ்யா ஹேக் செய்து கைப்பற்றியதுதான் புது வரவு..
இந்த ஆண்டு ரஷ்யா தனது "வெற்றி தினத்தை" கொண்டாடிக் கொண்டிருந்தபோது, உக்ரைனின் தொலைக்காட்சி சேவையை வழங்கும் செயற்கைக்கோளை (orbiting satellite) ரஷ்யாவின் ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் கைப்பற்றியதை அடுத்து உக்ரைனின் வழக்கமான டிவி நிகழ்ச்சிகள் தடைபட்டன. பதிலாக, ரஷ்யாவின் அணிவகுப்பு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதன் காரணமாக உக்ரைன் பார்வையாளர்கள், மாஸ்கோவில் நடைபெற்ற ரஷ்யாவின் ராணுவ அணி வகுப்புக் காட்சிகளைக் காண நேரிட்டது. இந்நடவடிக்கைகள் 21ஆம் நூற்றாண்டிற்கான புதிய போரை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஹேக்கர்கள், செயற்கைகோள் ஒன்று பூமியுடன் தொடர்புகொள்வதற்கு உதவும் மென்பொருள் அல்லது வன்பொருள் (software or hardware) போன்றவற்றில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து, அதைக் கைப்பற்றி, பூமியில் இருக்கும் தொடர்பு நிலையங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். செயற்கைகோள் பாதுகாப்பானதாக இருந்தாலும்கூட, அதைக் கட்டுப்படுத்தும் மென்பொருள் பழையதாகவோ அல்லது பலவீனமாகவோ இருந்தால் அதை எளிதாகக் கைப்பற்ற முடியும் எனத் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கூட அமெரிக்க வணிக செயற்கைக்கோள் இணைய நிறுவனமான வியாசாட்டை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என்று இங்கிலாந்து மற்றும் அமெரிக்க உளவுத்துறைகள் தெரிவித்திருந்தன.
செயற்கைகோளைக் கைப்பற்றுவது தொடர்பாகப் பேசியிருக்கும் NetRiseயின் சிஇஓ டாம் பேஸ், “ஒரு செயற்கைக்கோள் தொடர்பு கொள்ளும் திறனை நீங்கள் தடுக்க முடிந்தால், அதனால் மிகப் பெரிய இடையூறு மற்றும் சீர்குலைவு ஏற்படுத்த முடியும். ஜிபிஎஸ் பற்றி சிந்தித்துப் பாருங்கள். குறிப்பிட்ட மக்கள் அதை இழந்துவிட்டால் என்ன ஆகும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதனால் ஏற்படும் குழப்பம் எவ்வளவு பெரிதாக இருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்
தற்போது, பூமியின் சுற்றுப்பாதையில் 12,000-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் செயலில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தகவல் தொடர்புகள், இராணுவ நடவடிக்கைகளை திட்டமிடுதல், navigation மற்றும் ஜிபிஎஸ் அமைப்புகளுக்கு அத்தியாவசியமானவைகளாக உள்ளன. மேலும், உளவு நடவடிக்கைகள், ஏவுகணை தாக்குதல்களைக் கண்டறிதல் மற்றும் தாக்குதல் நடைபெறுவது குறித்து எச்சரித்தல் போன்றவற்றிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, செயற்கைக்கோளைக் கைப்பற்றுவது என்பது ஒரு நாட்டை மொத்தமாக முடக்குவது போன்றது.
ரஷ்யா விண்வெளி அடிப்படையிலான அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அது ஒரே சமயத்தில் பூமியின் கீழ் வட்டப்பாதையில் (Low-Earth Orbit) உள்ள பெரும்பாலான செயற்கைக்கோள்களை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கின்றனர். இத்தகைய ஆயுதம் பூமியின் கீழ் வட்டப்பாதையில் ஒரு வருடம் வரை செயற்கைக்கோள்களை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாற்றும் எனத் தெரிவிக்கின்றனர்.
1967-ஆம் ஆண்டின் உடன்படிக்கை ஒன்று, பூமியின் சுற்றுப்பாதையில் அணு ஆயுதங்கள் அல்லது வேறு எந்த வகையான மக்களைப் பெருமளவில் அழிக்கும் ஆயுதங்களையும் ஏவுவது தடைசெய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகிறது. இந்த உடன்படிக்கையில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளும் கையெழுத்திட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.