ASIA CUP : இந்திய அணி அறிவிப்பு... கில்லை தேர்வு செய்தது சரியா? தவறா? பின்னிருக்கும் காரணம்..!
2025 ஆசியக்கோப்பைக்கான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணியில் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இடம் பெறாததால், நட்சத்திர வீரர்களுக்காக ஏற்கனவே நன்றாக செயல்படும் வீரர்களின் வாய்ப்புகளை பறிப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2025 ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.
துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ள தொடரில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகள் உள்ள ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம் பெற்றள்ளது. குரூப் பி பிரிவில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அணியில், டெஸ்ட் கேப்டன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் போன்றோர் இடம்பெறுவார்களா என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. கிட்டத்தட்ட ஒவ்வொரு ஸ்லாட்டுக்கும் 4 வீரர்கள் தயாராக இருக்கும்பட்சத்தில் நன்கு கட்டமைக்கப்பட்ட அணியாக இந்திய டி20 அணி இருக்கிறது. இதற்கிடையே, ஆசியக்கோப்பைக்காக 15 பேர் கொண்ட அணியைத் தேர்வு செய்வது தேர்வாளர்களுக்கு மிகக் கடினமான செயல் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா போன்றோர் இருந்தனர். மூவரும் தங்களது வேலையை சிறப்பாகவே செய்திருக்கின்றனர். ஆனால், கில் அணிக்குள் நுழையும்போது இவர்களில் யாரேனும் ஒருவர் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவது சந்தேகமாகும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி 87% வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. மிக முக்கியமாக இந்திய அணி விளையாடியிருக்கும் கடைசி 20 போட்டிகளில் 17 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. இதில் எந்த ஒரு போட்டியிலும் கில் மற்றும் ஜெய்ஸ்வால் போன்றோர் இடம்பெறவில்லை.
இதன் காரணமாக, நட்சத்திர வீரர் ஒருவருக்காக ஏற்கனவே நன்றாக செயல்படும் ஒருவரது வாய்ப்பைப் பறிப்பது சரியான செயல் அல்ல என்று விமர்சனங்களும் எழுகின்றன. ஆனால், கில்லை அணிக்குள் கொண்டு வருவதற்கு பொருளாதார ரீதியாக வேறொரு காரணம் சொல்லப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி மூன்று வடிவங்களுக்கும் ஒரே கேப்டனைக் கொண்டு விளையாடும்போதுதான் சிறப்பாக செயல்படுகிறது. அதேநேரம், அந்தக் கேப்டன் மிகப்பெரிய மார்க்கெட்டிங் பிராண்டாகவும் மாறுவார். அந்த வகையில், சுப்மன் கில்தான் இயல்பான தேர்வாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் பிசிசிஐ சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியை அறிவித்திருக்கிறது. அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். குல்தீப் யாதவ்க்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்திருக்கிறது. ரிங்கு சிங் மீண்டும் தேர்வு செய்யப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக செயல்பட்ட ஜிதேஷ் சர்மா அணியில் இடம்பிடித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெறவில்லை.
அணி வீரர்கள் விபரம் : சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்
ஆசிய தொடருக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இறுதித் தேர்வாக இருக்காது என தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்திருக்கிறார்.