அரிதாரம் முதல் அதிகாரம் வரை ஜெயித்தவர்கள் யார்... அரசியலில் கரைசேராத திரை நட்சத்திரங்கள் யார்?
முதல்வர் அரியணையை அலங்கரிக்கும் கனவில், மதுரையில் இரண்டாவது அரசியல் மாநாட்டுக்கு தயாராகி விட்டார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். இவரைப் போலவே, முதல்வர் கனவில் கட்சி தொடங்கிய நடிகர்களை பின்னோக்கிப் பார்க்கலாம்.
வெள்ளித்திரையில் இருந்து கோட்டைக்கு’ என்ற கனவுக்கு விதை போட்டு, நடைமுறையில் சாத்தியமாக்கி சாதித்தவர் எம்.ஜி.ஆர்... அவரிடம் தொடங்குகிறது, இந்த ‘அரிதாரம் To அரசியல்’ கணக்கு. புரட்சிகரமான வசனங்கள் - பாடல்கள் மூலம், தமிழக மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நுழைந்தவர் MGR... 1972இல் திமுகவில் இருந்து பிரிந்து, அறிஞர் அண்ணாவின் பெயரில் அதிமுகவைத் தொடங்கினார். 1977 முதல், 1987இல் மறையும் வரை, MGR தான் தமிழ்நாட்டின் முதல்வர்.
எம்ஜிஆரைத் தொடர்ந்து ஜெயலலிதா. வெள்ளித்திரை நாயகியாக அறிமுகமாகி, எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு, அதிமுகவை ‘ஒன் உமன் ஆர்மி’ யாக பாதுகாத்து, அரியணை ஏற்றினார். தனது ஆளுமையால் அரசியல் களத்தை மிரள வைத்தார். இந்த இருவரின் அரசியல் வெற்றியே, திரை நட்சத்திரங்களுக்கு முதல்வர் அரியாசனத்தின் மீதான ஆசையைத் தூண்டியது.
அந்த வகையில், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியைத் தொடர்ந்து, புரட்சிக் கலைஞர். 2005இல் மதுரையில் மாநாடு நடத்தி தேமுதிகவைத் தொடங்கிய விஜயகாந்த், அடுத்த ஆண்டே நடந்த தேர்தலில், விருத்தாசலத்தில் வெற்றி பெற்றார். 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். இவர்களுக்குப் பிறகு, அரசியல் கட்சியில் இணைந்தவர்கள், அங்கிருந்து விலகி புதிதாக கட்சி தொடங்கியவர்கள், திடீரென புதுக்கட்சி தொடங்கியவர்கள், தொடங்கிய புதுக்கட்சியை வேறொரு கட்சியுடன் இணைத்தவரகள், பெயரளவுக்கு கட்சி தொடங்கி நடத்த முடியாமல் கைவிட்ட நட்சத்திரங்களின் பட்டியல் மிக மிக நீளமானது.
முதலில் லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன். திமுக, அதிமுகவில் இருந்த இவர், தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். அதிமுகவில் சீட் கிடைக்காத ஆவேசத்தில், 1984ல், MGR - SSR கழகத்தை தொடங்கினார். திரையுலகில் எம்ஜிஆருக்கு போட்டியாளரான சிவாஜி கணேசன், 1988 இல் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் தொடங்கி, மூடினார். எம்ஜிஆரின் கலையுலக வாரிசான பாக்யராஜூம், திமுக அனுதாபியான, திரையுலக அஷ்டாவதானி டி.ராஜேந்தரும் கட்சி தொடங்கி கரைசேர முடியாமல் தவித்தவர்கள் தான்.
இதில் நவரச நாயகன் கார்த்திக், நகைச்சுவை நடிகர் கருணாசும் உண்டு... இவரைப் போலவே, திமுகவில் தீவிரமாக இயங்கிய நடிகர் சரத்குமார், 2007இல் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். தேர்தல்களில் சோபிக்காத தனது கட்சியை, தனது மனைவி ராதிகாவின் நள்ளிரவு யோசனையால், பாஜகவுடன் இணைத்தார். உலக நாயகன் கமல்ஹாசனுக்கும், மாநில முதல்வர் ஆசை இல்லாமல் இல்லை. 2018இல் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கி, 2021 தேர்தலில் தோல்வியைத் தழுவி, தற்போது திமுக கூட்டணியில் இணைந்து, மாநிலங்களவை எம்.பி. ஆகிவிட்டார் .
இயக்குநரும் நடிகருமான சீமான், 2010இல் நாம் தமிழர் கட்சியை தொடங்கி, தனித்துவமான அரசியல் செய்து வருகிறார். புதுக்கட்சி துவக்கி கரை சேராதவர்கள் பட்டியல் நீண்டிருக்க, சாதித்துக் காட்டியவர்கள் பட்டியலோ விரல் விட்டும் எண்ணும் அளவிலேயே இருக்கிறது. இதில் எந்த பட்டியலில் சேரப்போகிறார் விஜய் என காத்திருக்கிறது தமிழ்நாடு.