ASIA CUP : ஷ்ரேயாஸ் இடம்பெறாதது முழுக்க முழுக்க அரசியலா..?
2025 ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஐபிஎல் மற்றும் உள்நாட்டு தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர், அரசியல் காரணங்களால் அணியில் சேர்க்கப்படவில்லை என இணையத்தில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அணி வீரர்கள் விபரம் : சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்
அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்-க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக 604 ரன்களைக் குவித்திருக்கிறார் ஷ்ரேயாஸ். அவரது சராசரி 50.33 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 175 ஆகவும் இருக்கிறது. குறிப்பாக, சுழலுக்கு எதிராக அவரது அதிரடியான ஆட்டம் டி20 தொடருக்கான மிகத் தேவையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அவரை மாற்றியிருந்தது. இத்தகைய சூழலில் அவர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் சிறப்பான செயல்பாட்டையே வெளிப்படுத்தியிருக்கிறார். 2024-இல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பத்து ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வெல்ல வைத்தார். அதேபோல், மும்பை அணியை சையத் முஷ்தாக் அலி ட்ராபியில் கோப்பை வெல்ல வைத்தார். மும்பை ஃபால்கன்ஸை மும்பை T20 லீக் இறுதிப் போட்டிக்குக் அழைத்து சென்றிருக்கிறார். மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணியை ஐபிஎல் 2025ல் இறுதிப் போட்டி வரை வழிநடத்தியிருக்கிறார். இதை விட ஒரு வீரராகவும், கேப்டனாகவும் எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேபோல சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவரது செயல்பாட்டை யாரும் மறந்துவிடமுடியாது. இந்திய அணியின் சார்பில் அதிக ரன்களைக் குவித்த வீரராகவும், ஒட்டுமொத்த தொடரில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை அடித்த வீரராகவும் திகழ்ந்தார். ஐந்து இன்னிங்ஸில் இரண்டு அரை சதங்கள் உட்பட 243 ரன்களைக் குவித்திருந்தார். இத்தனை சிறப்பான சம்பவங்களும் கூட ஷ்ரேயாஸ் ஐயரை ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்வதற்கு போதுமானதாக இல்லை.
ஏன் தேர்வு செய்யப்படவில்லை?
ஷ்ரேயாஸ் ஐயர் ஆசியக் கோப்பைக்கான அணியில் சேர்க்கப்படாததற்கு தலைமை தேர்வாளர் அகர்கர் விளக்கமளித்திருக்கிறார். அதில், “ஷ்ரேயஸ் குறித்து சொல்ல வேண்டுமென்றால், அவர் யாருக்கு பதிலாக அணிக்குள் இடம்பெற முடியும். இது அவரது தவறல்ல, எங்களுடைய தவறுமல்ல. இப்போதைக்கு நாங்கள் 15 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். எனவே, அவர் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இணையத்தில் பலரும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ராகவேந்திர ஷெட்டி என்பவர், “சிவம் துபே, கில், ரிங்கு சிங், திலக் வர்மா என நீங்கள் நிறைய பேரை மாற்றலாம். இவை அனைத்தையும் விட ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் திறமையானவர் மற்றும் சர்வதேச அனுபவத்தைக் கொண்டவர். அவரைத் தேர்வு செய்யாதது தெளிவான அரசியல் ரீதியானது” எனத் தெரிவித்திருக்கிறார்.
ஷ்ரேயாஸ் ஏன் முக்கியம்?
சரவ்ஜீத் சிங் என்பவர், “ஷ்ரேயாஸ் ஐயர் எவ்வளவு ரன்கள் எடுத்தார் என்பதை விட்டுவிடுங்கள்; ஆனால், அந்த ரன்களை அவர் எடுத்த விதம் முக்கியமானது. அவை அணி அழுத்தத்தில் இருந்தபோது முக்கியமான கட்டத்தில் வந்தன. இந்திய அணிக்கு ஐயர் போன்ற ஒருவர் நடுவில் தேவை, பந்து வீச்சை விளாசுவதோடு மட்டுமல்லாமல் அவரால் இன்னிங்ஸையும் கட்டமைக்க முடியும். அவர் பஞ்சாப் கிங்ஸில் எப்படி விளையாடினார் என்பதைப் பாருங்கள், அழுத்தத்திலும் கூலாக இருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
2025 ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ள தொடரில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகள் உள்ள ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம் பெற்றள்ளது. குரூப் பி பிரிவில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.