அமெரிக்கா | உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப்.. எதிர்ப்பு தெரிவித்து மெக்சிகோ மக்கள் ஆர்ப்பாட்டம்!
மெக்சிகோ மக்கள் ஆர்ப்பாட்டம்!
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், பல அதிரடி கருத்துகளை வெளியிட்டார். அதற்குப் பிறகு அத்தகைய திட்டங்களை நிறைவேற்றும் பணிகளிலும் கையெழுத்திட்டார். இதையடுத்து, அவருடைய பதவியேற்புக்கும் அவர் அறிவித்த திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வாஷிங்டன், மெக்சிகோ, பனாமா கால்வாய் உள்ளிட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, அமெரிக்கா குடியேற்ற திட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெக்சிகோவில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மெக்சிகோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பு கூடிய அவர்கள், ட்ரம்பின் உருவ பொம்மை மற்றும் அமெரிக்கா கொடியை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
எல்லையை ராணுவ மயமாக்கும் ட்ரம்பின் திட்டத்தை அனுமதிக்கப் போவதில்லை எனக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் அறிவிப்புகள் மற்றும் எல்லைகளை விரிவுபடுத்தும் திட்டங்களை எதிர்ப்பதாக தெரிவித்தனர். முன்னதாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் பொருட்டு மெக்சிகோவின் தெற்கு எல்லையில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய ட்ரம்ப், மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்கா வளைகுடா என மாற்றம் செய்யப்படுமென அறிவித்தார்.
பனாமா கால்வாய் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அதேபோல், “பனாமா கால்வாயை மீட்பேன்” என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கூறிய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பனாமா நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தலைநகர் பனாமா சிட்டியில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்கா தூதரக அதிகாரியின் குடியிருப்பை நோக்கி பேரணி சென்று முற்றுகையிட்டனர். ட்ரம்ப் அறிவித்ததை எந்த சூழலிலும் ஏற்கப் போவதில்லை எனக் கூறிய அவர்கள், ட்ரம்ப் மற்றும் அமெரிக்கா ராணுவத்திற்கும் பனாமாவில் எந்த தொடர்பும் இல்லை என முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பனாமா கால்வாய் தொழிலாளர்கள் அமெரிக்காவின் கொடியை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பனாமா கால்வாய் வழியாக பயணிக்கும் அமெரிக்கா கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய ட்ரம்ப், சீனாவில் கட்டுப்பாட்டில் இருக்கும் பனாமா கால்வாயை மீட்க இருப்பதாக தனது பதவியேற்பு விழா உரையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்னில் பொதுமக்கள் போராட்டம்
முன்னதாக, டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் வாஷிங்டன் டிசியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் மத்தியில் உள்ள பூங்காவில் திரண்ட மக்கள், ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள், குடியேற்றங்கள், பாலஸ்தீன விவகாரம் உள்ளிட்டவற்றில் ட்ரம்பின் கொள்கைகள் மக்களுக்கு எதிராக இருப்பதாக தெரிவித்த போராட்டக்காரர்கள், இந்த கொள்கைகளை கடைப்பிடிக்கும் ட்ரம்ப், அதிபராக இருக்க தகுதியற்றவர் என்று விமர்சித்துள்ளனர்.