WHO வெளியேற்றம் முதல் குடியெற்றக் கொள்கை வரை.. ஒரேநாளில் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்த ட்ரம்ப்!
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று (ஜனவரி 20) பதவியேற்றார். தொடர்ந்து உரையாற்றிய அவர், பல அதிரடியான கருத்துகளைத் தெரிவித்தார். அதற்கு அமெரிக்க மக்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பியபடியே இருந்தனர். இந்த நிலையில் அதிபராகப் பொறுப்பேற்ற அடுத்த 8 மணிநேரத்தில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் வகையில், அதற்கான உத்தரவுகளில் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்...
1. உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவு. உலக சுகாதார நிறுவனத்தால் சீனாவைவிடவும் அமெரிக்கா நேர்மையாக நடத்தப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
2. அமெரிக்க மத்திய அரசின் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. இனி மத்திய அரசு பணியாளர்கள் அலுவலகத்துக்கு வர வேண்டும் என உத்தரவு.
3. பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து உடனடியாக அமெரிக்காவை விலக்கிக்கொள்ள உத்தரவு. உலக அளவில் தொடர்ச்சியாக பேரழிவை ஏற்படுத்தும் காலநிலை நிகழ்வுகளின் காரணமாக புவி வெப்பமயமாதலை எதிர்த்துப் போராடும் உலக நாடுகளின் முயற்சியை புறக்கணிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
4. அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கை மற்றும் புகலிடம் தொடர்பான புதிய கட்டுப்பாடுகளுக்கு உத்தரவு.
5. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை குடியுரிமை ரத்து.
6. அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு ராணுவத்தை அனுப்பவும், பிறப்புரிமை மற்றும் குடியுரிமையை முடிவுக்கு கொண்டுவரவும் உத்தரவு பிறப்பிப்பு.
7. தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலை பிறப்பிப்பு.
8. 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, அமெரிக்க தலைநகர் மீதான தாக்குதலின் ஒரு பகுதியாக இருந்த அவரது ஆதரவாளர்களில் 1,500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி உத்தரவு.
9. பன்முகத்தன்மை திட்டங்கள் மற்றும் LGBTQ சமத்துவத்தை ஊக்குவிக்கும் பல்வேறு நிர்வாக உத்தரவுகள் ரத்து. ஆண் மற்றும் பெண் இரு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும் என உத்தரவு.
10. அரசு, வணிகம், சுகாதாரம் ஆகியவற்றில் பன்முகத்தன்மை, சம உரிமை ஆகியவற்றையும் ரத்து செய்தார்.
11. தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவிக்கும் உத்தரவில் கையெழுத்து. இது நாட்டில் துளையிடும் நடவடிக்கைகளை கணிசமாக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
12. டிக்டாக் செயலியை, தடைசெய்யும் சட்டத்தை அமல்படுத்துவதற்கு 75 நாள் இடைநிறுத்த உத்தரவு.
13. பாலஸ்தீனியர்களுக்கு எதிராக துஷ்பிரயேகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறியவர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் ரத்து.
14. கியூபாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் தடுப்புப்பட்டியலில் இருந்து நீக்க உத்தரவு.