’நெதன்யாகு பதவி விலகணும்’- இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த மக்கள்.. ஏன் தெரியுமா?

இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பிணைக்கைதிகளை நீக்க இதுவரை நெதன்யாகு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெஞ்சமின் நெதன்யாகு
பெஞ்சமின் நெதன்யாகுட்விட்டர்

காஸைவை அழித்து வரும் இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸா நகர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. குறிப்பாக, வடக்கு காஸாவிற்குள் தாக்குதல் நடத்தி முன்னேறிய இஸ்ரேல் ராணுவம், அங்கு முக்கியப் பகுதிகளையும் கைப்பற்றியது. மேலும், தெற்கு காஸாவிலும் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. முற்றிலும் காஸாவை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் தெற்குப் பகுதி தவிர எகிப்து எல்லையையொட்டி அமைந்துள்ள ராஃபாவிலும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவருகிறது.

ராஃபாவில் தரைவழியாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தவும் முயற்சி செய்து வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் அங்குள்ள மக்கள் உணவின்றி அல்லலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக, இஸ்ரேலுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆயுதங்களை அளித்து உதவி செய்துவரும் அமெரிக்கா, காசா நகர் மீதான தாக்குதலை தற்காலிமாகவாவது நிறுத்தக் கோரி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அமெரிக்காவின் கருத்தை இஸ்ரேல் கேட்பதாக இல்லை. மேலும், போர் நிறுத்தம் பற்றி அமெரிக்கா கருத்து கூறி வந்தாலும், இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அனுப்பி தாக்குதலுக்கும் உதவி வருகிறது. அண்மையில், இஸ்ரேல் ராணுவத்திற்கு, பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வெடிகுண்டுகள் மற்றும் போர் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிக்க: பண மதிப்பிழப்பு: மாறுபட்ட தீர்ப்பு தந்தது ஏன்? விளக்கமளித்த நீதிபதி பி.வி.நாகரத்னா!

பெஞ்சமின் நெதன்யாகு
உணவைத் தேடி ஓடிய நபர்கள்.. சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் ராணுவம்; காஸாவில் அரங்கேறிய கொடூரம்-பகீர் வீடியோ

இஸ்ரேல்  அரசுக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்!

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு ரமலான் பண்டிகையை முன்னிட்டு காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. இதற்கு முன்னரும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பிணைக்கைதிகளை நீக்க இதுவரை நெதன்யாகு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரதமர் நெதன்யாகுவைப் பதவி விலகவும், தேர்தல்களை முன்கூட்டியே நடத்தவும் கோரிக்கை வைத்து நேற்று (மார்ச் 31) ஜெருசலேம் பகுதியில் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெருசலேமில், பிரதமர் நெதன்யாகு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பிணைக்கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டினர்.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அவர்கள்மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகளைக் காவல் துறையினர் வீசினர். சாலையில் பொருட்களைப் போட்டு தீவைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தினர். இந்த போராட்டங்கள் காரணமாக இஸ்ரேலில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது. மேலும், டெல்அவில், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே டெல் அவிவில் போராட்டம் முடிவுக்கு வந்ததாக காவல்துறை அறிவித்தது. 16 எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

இதையும் படிக்க: டெல்லி முதல்வர் மனைவியுடன் ஹேமந்த் சோரன் மனைவி சந்திப்பு.. இருவரும் பேசியது என்ன?

பெஞ்சமின் நெதன்யாகு
கொட்டிய ரத்தம்! 4 வயது பாலஸ்தீன சிறுவனைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் கடித்த இஸ்ரேல் ராணுவ நாய்!

மீண்டும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை!

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகிக்கும் ஹமாஸ் படையினர், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் 250க்கும் அதிகமானோர் பிணைக்கைதிகளாக கடத்தப்பட்டனர். இதில் இடையில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின்போது சிலர் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்றவர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இதனால், அவர்களின் உற்றார் உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் போர் நீடித்தால், பணயக்கைதிகளில் பலர் கொல்லப்படலாம் என அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அதேநேரத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், இஸ்ரேலும் அரசும் காசா மீதான போரை நியாயப்படுத்துகிறது. அவர்களை அழிப்பதிலேயே குறியாக இருக்கிறது.

இஸ்ரேல் பிரதமர் - பெஞ்ஜமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் - பெஞ்ஜமின் நெதன்யாகுமுகநூல்

மேலும், போரின் தீவிரத்துக்கிடையே இந்த ஆண்டு நடைபெற இருக்கும் இஸ்ரேல் பிரதமர் தேர்தலும் பேசுபொருளாகும் எனச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், ஹமாஸ் அழிக்கப்படவேண்டும் என்பதில் இஸ்ரேலியர்களிடையே பெரும் ஆதரவும் உள்ளது. ஆக, எப்போது தேர்தல் நடைபெற்றாலும், மீண்டும் நெதன்யாகுவே வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவருக்கு இந்தப் போர் நிறைய அழுத்தத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையே இன்று மீண்டும் போர்நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை எகிப்தில் நடைபெற இருக்கிறது.

இதையும் படிக்க: பாஜகவில் இணைந்த சிவராஜ் பாட்டீல் மருமகள்.. மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்!

பெஞ்சமின் நெதன்யாகு
’சாவதுதான் விதியென்றால் அது எங்கு நடந்தால் என்ன’-வேலைக்காக இஸ்ரேல் செல்லும் ஹரியானா இளைஞர்கள் வேதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com