உணவைத் தேடி ஓடிய நபர்கள்.. சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் ராணுவம்; காஸாவில் அரங்கேறிய கொடூரம்-பகீர் வீடியோ

தெற்கு காசாவில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
gaza images
gaza imagestwitter

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸா நகர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. குறிப்பாக, வடக்கு காஸாவிற்குள் தாக்குதல் நடத்தி முன்னேறிய இஸ்ரேல் ராணுவம், அங்கு முக்கியப் பகுதிகளையும் கைப்பற்றியது. மேலும் தெற்கு காஸாவிலும் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. முற்றிலும் காஸாவை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் தெற்குப் பகுதி தவிர எகிப்து எல்லையையொட்டி அமைந்துள்ள ராஃபாவிலும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவருகிறது.

பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால், ரமலான் மாதம் தொடங்குவதற்குள் ராஃபா நகரில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிகிறது. இருதரப்பு போரை நிறுத்தக்கோரி பல்வேறு நாட்டுத் தலைவர்கள், உலகளாவிய அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தும் இன்னும் காஸாவில் போர் சத்தம் ஓய்ந்தபாடில்லை. இதனால் உயிர்ப்பலிகள் அதிகரித்து வருவதுடன், காஸா மக்களுக்கு அடிப்படை உணவான மாவும், தண்ணீரும் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், காஸா நகரத்தில் உணவுப் பொருட்களுக்காகக் காத்திருந்தபோது, அங்கு உணவு கொடுக்க வந்த டிரக்கை ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்துகொண்ட காட்சி பலரது மனங்களையும் உலுக்கியுள்ளது. அப்போது அவர்கள் மீது இஸ்ரேல் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 70க்கும் அதிகமானோர் பலியானதாகவும் 280க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், “இன்று அதிகாலை 4.30 மணியளவில் காஸா வழியாக டிரக்குகள் வரத் தொடங்கின. நாங்கள் உதவியைத் தேடி அலைந்தபோது, இஸ்ரேலிய டாங்கிகளும் போர் விமானங்களும் எங்களை நோக்கிச் சுடத் தொடங்கின. பெரும்பாலான மக்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். காயம்பட்டவர்களை, மருத்துவமனைகளை கொண்டுசெல்ல, சாலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ்கள் அப்பகுதியைச் சென்றடைய முடியவில்லை. முதலுதவி செய்யகூட யாரும் இல்லை. இந்த தருணத்தை எங்களால் மறக்க முடியாது” என்கின்றனர்.

காஸாவின் பெரும்பாலான பகுதிகளில் உதவி பொருட்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் இன்னும் சவால் நீடிப்பதாக அமைப்புகள் தெரிவிக்கின்றன. சட்ட ஒழுங்கின்மை மற்றும் விரக்தியில் உள்ள மக்கள் டிரக்குகளை வழிமறித்து தங்களுக்கான பொருள்களை எடுத்துக்கொள்வது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. காஸா மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் வேகப்படுத்தியிருக்கும் நிலையில், ஜனவரி 23 முதல் வடக்கு காஸாவில் பொருட்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் (WFP) துணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ், “காசாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உயிர்வாழ உணவு உதவி தேவைப்படுகிறது. உணவுப் பொருட்களை காஸா மக்களுக்கு சரியான நேரத்தில் கொண்டு சேர்க்க முடியாத சூழல் இருப்பதால், அம்மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர். சோதனைச் சாவடிகளில் தாமதம் ஏற்பட்டதாகவும், வழியில் உணவு கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது” என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் போர் தொடங்கியது முதல் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது. அது வெளியிட்டுள்ள குறிப்பில், இதுவரை 30,035 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 70,457 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்லாமியர்களின் உயரிய பண்டிகையாக கருதப்படும் ரம்ஜான் பண்டிகை தினத்தை (மார்ச் 10 - ஏப்ரல் 9) முன்னிட்டு இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஜோ பைடன், ’இருதரப்பும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பணயக்கைதிகள் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை அடுத்ததாக இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. விரைவில் இருதரப்புக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும்’ எனத் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com