பசி, அச்சம், மரணம் : அச்சுறுத்தும் காசா.. மாற்றுத்திறனாளிகளான 21,000 குழந்தைகள்
இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்னை என்பது 19ஆம் நூற்றாண்டில் இருந்தே இருந்து வருகிறது. இருந்தபோதும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 815 பொதுமக்கள் உட்பட 1,195 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதோடு, 251 பேர் பிணைக் கைதிகளாகப் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் பேச்சுவார்த்தை ஏற்பட்டு சில நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும், மறுபடியும் இன்றுவரை போர் தொடர்கிறது. இதுவரை அங்கு 60,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர்.
இதற்கிடையே, ஹமாஸ் வசம் உள்ள தங்கள் நாட்டு பிணைக்கைதிகள் 58 பேர் விடுவிக்கப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ள இஸ்ரேல், காஸாவை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது. மேலும், காஸா நகரின் 80 விழுக்காடுக்கும் அதிகமான பகுதிகள் தங்கள் ராணுவ கட்டுப்பாட்டில் வந்துள்ளதால், காஸா நகர குடிமக்கள் வெளியேற வேண்டுமென இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் இதுவரை சுமார் 21ஆயிரம் குழந்தைகள் தங்களது இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாகி உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான ஐ.நா அமைப்பு (CRPD) இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.
2023 அக்டோபரில் இஸ்ரேல் தனது போரை காசாவில் தொடங்கியதிலிருந்து 40,500 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் சரிபாதி குழந்தைகள் கேட்கும், பேசும், பார்க்கும் திறன் உள்ளிட்ட திறன்களை இழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் காஸா குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேநிலை நீடித்தால் 2026 ஜூன் மாதத்திற்குள் 5 வயதிற்குட்பட்ட சுமார் ஒரு லட்சத்து 32ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுமென்று ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு குறித்து கண்காணிக்கும் அமைப்பின் தரவை மேற்கோள்காட்டி CRPD எச்சரித்துள்ளது.
மறுபுறம், இஸ்ரேலியப் படைகள் உதவி மையங்களில் தொடர்ந்து நடத்தும் துப்பாக்கிச் சூடுகளால், மாற்றுத்திறனாளிகளில் பலர் உதவி பெற முடியாமல் போகிறது எனவும், மேலும் அவ்வாறு செய்யும்போது பலர் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் தாக்குதலின்போது, மாற்றுத்திறனாளிகள் சேறு மற்றும் மணல்களில் ஊர்ந்து சென்று தப்பும் அளவிற்கு அவர்கள் பாதுகாப்பற்ற மற்றும் மனிதாபிமானமற்ற சூழலில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், "மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், பலர் உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் இன்றி, உயிர்வாழ்வதற்காக பிறரின் தயவையே சார்ந்துள்ளனர்," என CRPD தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் உதவி விநியோக அமைப்பு மிகவும் சுருங்கி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தாக்குதல்களில் சக்கர நாற்காலிகள், நடப்பதற்கு உதவும் சாதனங்கள் மற்றும் செயற்கை உறுப்புகள் போன்றவற்றை பெரும்பாலானோர் இழந்திருக்கின்றனர். இவற்றை மீண்டும் வாங்கும் திறன் பெரும்பாலானோருக்கு இல்லை. மேலும், இவை “இரட்டை பயன்பாட்டு பொருட்கள்” (dual-use items) எனக் கருதி, உதவி பொருட்களுடன் காசாவுக்குள் அனுப்புவதைத் தடுக்கின்ற இஸ்ரேலின் கொள்கையையும் CRPD கடுமையாக விமர்சித்துள்ளது.
உடனடி நடவடிக்கை அவசியம் எனக் கூறிய CRPD, "மாற்றுத் திறனாளிகளுக்காக பெரிய அளவில் மனிதாபிமான உதவி அனுப்பப்பட வேண்டும்" என வலியுறுத்தியிருக்கிறது. மேலும், "இனியும் வன்முறை, சேதம், உயிரிழப்பு, உரிமை பறிப்பு" நடைபெறாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அனைத்து தரப்புகளையும் கேட்டுக்கொண்டுள்ளது. தாக்குதல்களில் இருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு வெளியேற்றும் நெறிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் அது கூறியது.