காஸா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை.. குடிமக்கள் வெளியேற உத்தரவு!
காஸா நகரின் 80 விழுக்காடுக்கும் அதிகமான பகுதிகள் தங்கள் ராணுவ கட்டுப்பாட்டில் வந்துள்ளதால், காஸா நகர குடிமக்கள் வெளியேற வேண்டுமென இஸ்ரேஸ் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வரும் நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் பேச்சுவார்த்தை ஏற்பட்டு சில நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும், மறுபடியும் அங்கு இன்றுவரை போர் தொடர்கிறது. இதுவரை அங்கு 62,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, ஹமாஸ் வசம் உள்ள தங்கள் நாட்டு பிணைக்கைதிகள் 58 பேர் விடுவிக்கப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ள இஸ்ரேல், காஸாவை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், காஸா நகரின் 80 விழுக்காடுக்கும் அதிகமான பகுதிகள் தங்கள் ராணுவ கட்டுப்பாட்டில் வந்துள்ளதால், காஸா நகர குடிமக்கள் வெளியேற வேண்டுமென இஸ்ரேஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் அவிகாய் அத்ரீ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காஸா நகர மக்கள், அங்கிருந்து வெளியேறத் தயாராகுமாறு எச்சரித்துள்ளார். நகருக்கு வெளியே தெற்குப் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டு, மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என்றும் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த நகர்வு, ஏற்கெனவே மோசமாக உள்ள மனிதாபிமான நெருக்கடியை, மேலும் அதிகரிக்கும் என்று சர்வதேச உதவி அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. இதனிடையே, வாஷிங்டனில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சா’ஆரை சந்தித்து, போருக்குப் பிந்தைய காசா நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். எனினும், இந்தப் பேச்சுவார்த்தையில் பணயக் கைதிகள் குறித்த நிபந்தனை இருக்கக் கூடாது என்று அமெரிக்கா கருதுகிறது.