குறைந்த செலவு.. அதிக தாக்கம்.. தொடர்ந்து நிலைகுலையும் அமெரிக்கா? ஆட்டிப்படைக்கும் ஈரான்!
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தொடங்கிய தாக்குதல்கள் ஐந்தாவது வாரத்திலும் நீடிக்க, மலிவான ஷாஹெட் ட்ரோன்கள் மூலம் ஈரான் பொருளாதாரப் போரை முன்னெடுக்கிறது. 20-50 ஆயிரம் டாலர் மதிப்புள்ள ட்ரோன்களை வீழ்த்த அமெரிக்கா, வளைகுடா நாடுகள் மில்லியன் டாலர் மதிப்புள்ள THAAD, பேட்ரியாட் ஏவுகணைகள், F-16 விமானங்களை பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகி, அவர்களின் பாதுகாப்பு செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்கின்றன.
பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலைத் தொடங்கின. இந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனால் போர் உக்கிரமடைந்தது. இந்தப் போர் 5-ஆவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் நொடிக்குநொடி பதற்றம் நீடித்து வருகிறது.
இதற்கு மத்தியில், ஏவுகணைத் திறன்கள் குறைந்திருந்தாலும் அமெரிக்கா- இஸ்ரேலுக்கு ஆதரவான வளைகுடா நாடுகளை அச்சத்தில் வைத்திருக்க போதுமான செயல்திட்டங்களை வைத்திருக்கிறது ஈரான்.
மோதல்கள் தொடங்கியதிலிருந்து, ஈரான் ட்ரோன்களை மட்டுமே பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு ராணுவத்துக்கு அழுத்தம் கொடுக்க ஷாஹெட்-136, ஷாஹெட்-107 மற்றும் ஷாஹெட்-238 ட்ரோன்களை பயன்படுத்துகிறது, ஈரான்.
இதில், ஷாஹெட் 136 மற்றும் ஷாஹெட் 107 ஆகியவை பிஸ்டன் இன்ஜின் மூலம் இயங்கும், ஒருமுறை மட்டுமே தாக்கும் 'லாயிட்டரிங் மியூனிஷன்' (இலக்கு இருக்கும் பகுதியில் வட்டமிட்டுக் கொண்டே இருக்கும் ஆயுதங்கள்) ரகத்தைச் சேர்ந்தவை. ஷாஹெட் 238 என்பது ஜெட் இன்ஜின் மூலம் இயங்கும் லாயிட்டரிங் மியூனிஷன் ஆகும்.
ஈரான் போரில் பயன்படுத்தும் இந்த ஷாஹெட் ட்ரோன் ஒன்றின் விலை 20,000 முதல் 50,000 டாலர் வரை மட்டுமே ஆகிறது. ஆனால், இந்த ட்ரோன்களை வீழ்த்த அமெரிக்கா செயல்படுத்தும் முறைக்கு அதிக செலவாகிறது.
அதாவது, ஈரானின் ட்ரோனை தடுத்து நிறுத்த அமெரிக்காவின் 'தாட்' (THAAD) அல்லது 'பேட்ரியாட்' ஏவுகணை அமைப்பு (PAC-3) மூலம் ஒரு தாக்குதல் ஏவுகணையையோ அல்லது ட்ரோனையோ நடுவழியில் சுட்டு வீழ்த்த 1 மில்லியன் முதல் 4 மில்லியன் டாலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு மற்றுமொரு சிக்கலும் உள்ளது. எதிரியின் தாக்குதலை தடுக்கும் ஏவுகணைகள் வேகமாகத் தீர்ந்துவிடுவதுடன், அவற்றை மீண்டும் தயாரித்து நிலைநிறுத்த நீண்டகாலம் எடுப்பதாகக் கூறப்படுகிறது.
மோதலின் ஆரம்ப நாட்களில், ஈரான் நாட்டு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தடுக்க அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் 800-க்கும் மேற்பட்ட எதிர் ஏவுகணைகளை ஏவியது.
உண்மையில், ஈரான் அனுப்பும் ட்ரோன் கூட்டங்களின் விலையைவிட, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அவற்றைத் தடுக்கப் பயன்படுத்தும் அமைப்புகளின் விலை பலமடங்கு அதிகம். இது அமெரிக்காவை நிலைகுலைய செய்துள்ளது. ஈரானின் செலவு குறைவிலான இந்த உத்தி, இந்த மோதலில் ஒரு பாதகமான பொருளாதாரச் சூழலை அமெரிக்காவுக்கு உருவாக்கியுள்ளது. இந்த பொருளாதாரச் சமன்பாடுகள், ஈரான் தனக்குச் சாதகமான உத்திகளைக் கையாளுவதற்கு உதவியுள்ளன.
மலிவான மற்றும் அதேசமயம், திறமையான ஆளில்லா விமானங்களைத் தயாரிப்பதில் ஈரானுக்கு நீண்டகால அனுபவம் உண்டு. ஷாஹெட் 136-ஐ ஒப்பீட்டளவில் எளிமையான தொழிற்சாலைகளில் விரைவாகவும் அதிக எண்ணிக்கையிலும் தயாரிக்க முடியும். மேலும், அவற்றில் பலவற்றை ஒரே நேரத்தில் ஏவி, பாதுகாப்பு அரண்களை நிலைகுலையச் செய்ய முடியும். மணிக்கு வெறும் 185 கி.மீ (115 மைல்) வேகத்தில் செல்லும் இந்த ஷாஹெட்கள்.
ஷாஹெட் ட்ரோன்களை வீழ்த்துவதற்காக வளைகுடா நாடுகள் 'எஃப் 16' போர் விமானங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளன. இருப்பினும், இந்த முறையும்கூட அதிகச் செலவு பிடிக்கக்கூடியதுதான். ஒரு F-16 விமானத்தை ஒரு மணிநேரம் விண்ணில் பறக்க விடுவதற்கான செலவு சுமார் 25,000 டாலர் ஆகிறது. இது செலவை இன்னும் சிக்கலாக்கியுள்ளது
ஈரான் இந்தப் போரில் எதிரிகளுக்கு ஏற்படுத்திய பொருளாதாரச் சிக்கல் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய மற்றும் அதிக நிதி பலம் கொண்ட ராணுவங்களுக்கு பல தடைகளை கொடுத்திருக்கிறது. ஒரு சாமர்த்தியமான மற்றும் திறமையான குறைந்த செலவிலான ஆயுத அமைப்புகளைக் கொண்டு எதிரிகளுக்கு சவால் விடுக்க முடியும் என்பதை ஈரான் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது.
உளவுத் தகவல்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை போரின் தொழில்நுட்பக் கட்டமைப்பையே தலைகீழாக மாற்றிவிட்டன. குறைந்த மூலதனம் மற்றும் சாதாரண தொழில்நுட்பம் கொண்ட ராணுவங்களே வெற்றிபெறும் என்பது இதன் பொருளல்ல; ஆனால் இந்த உத்தி போர்க்களத்தை இன்னும் சிக்கலானதாக மாற்றுகிறது.
ஈரானின் போர் உத்தி, சமச்சீரற்ற போர்முறை மூலம் நவீன மோதல்களுக்கு புதிய வரையறை கொடுக்கிறது. விலையுயர்ந்த போர் விமானங்கள் அல்லது விமானம் தாங்கி கப்பல்களை நம்பியிருப்பதற்குப் பதிலாக, அமெரிக்கா போன்ற வலிமையான இராணுவங்களுக்கு சவால் விடுவதற்காக, ஈரான் குறைந்த விலை ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் அதிவேகத் தாக்குதல் படகுகளைப் பயன்படுத்துகிறது. ஈரான்-ஈராக் போரிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களில் வேரூன்றிய இந்த அணுகுமுறை, எதிரிகளுக்கு மோதலைப் பொருளாதார ரீதியாகத் தாங்க முடியாததாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
மலிவான ட்ரோன்கள் விலையுயர்ந்த பாதுகாப்பு அமைப்புகளை முறியடித்து, போட்டியாளர்களை அதிக செலவு பிடிக்கும் பதிலடிகளைக் கொடுக்க நிர்பந்திக்கின்றன. அமெரிக்கத் தளங்களைக் குறிவைப்பது முதல் ஹார்முஸ் ஜலசந்தியைச் சீர்குலைப்பது வரை, ஈரான் செலவையே ஒரு ஆயுதமாக மாற்றுகிறது. இன்றைய போர்களில், உத்தி, தகவமைக்கும் திறன் மற்றும் உளவியல் ஆகியவை இராணுவ பலத்தைப் போலவே சக்திவாய்ந்தவையாக நிரூபிக்கப்படுகின்றன.

