2 நாள் குண்டு செலவு ரூ.51,400 கோடி.. ஈரான் மீது அமெரிக்காவின் அதிதீவிர தாக்குதல்!
ஈரான் மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதல்களின் முதல் இரண்டு நாட்களில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் 5.6 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 51,400 கோடி) மதிப்புள்ள வெடிமருந்துகளை செலவிட்டதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை தொடக்க கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளின் விலையை மட்டுமே உள்ளடக்கியது. இதன்மூலம் 5000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துருப்புக்கள், விமானங்கள் அல்லது கடற்படைகள் செலவுகளை உள்ளடக்கவில்லை என்று வாஷிங்டன் போஸ்ட் அறிக்கை தெரிவிக்கிறது.
செய்தியாளர் - திவ்யா
இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த ஒரு வாரமாக போர் நடைபெற்று வரும் நிலையில், போரின் முதல் நாளிலேயே ஈரானின் உட்சபச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதோடு ஈரானின் முக்கிய ராணுவ தலைவர்களும் இஸ்ரேல், அமெரிக்கா மேற்கொண்ட துல்லிய தாக்குதலால் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்ட ஈரான், இஸ்ரேல் மீது ஏராளமான ஏவுகணைகளை ஏவியது. மேலும் மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்ட பல்வேறு நாடுகளிலும் தாக்குதல் நடத்தியது.
இந்தப்போரில் அமெரிக்கா தனது படைகள் மற்றும் ஆயுதங்களை அதிக அளவில் பயன்படுத்தியது. இப்படி இருக்க ஈரான் மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதல்களின் முதல் இரண்டு நாட்களில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் 5.6 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 51,400 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை செலவிட்டதாக கூறப்படுகிறது.
பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க ராணுவம் நூற்றுக்கணக்கான விலையுயர்ந்த ஆயுதங்களை செலவிட்டுள்ளது. அவற்றில் மேம்பட்ட வான் பாதுகாப்பு இடைமறிப்பான்கள் மற்றும் டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகள் அடங்கும். மத்திய கிழக்கு முழுவதும் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் US Central Command-ன் படி, வெடிமருந்துகளைப் பயன்படுத்தி ஈரானில் 5,000 க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன.
மேலும், வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின்படி, பென்டகன் தென் கொரியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) அமைப்பின் சில பகுதிகளை நகர்த்தி வருகிறது. ஈரானுக்கு எதிரான அதன் பாதுகாப்பை வலுப்படுத்த, இந்தோ-பசிபிக் மற்றும் பிற இடங்களில் உள்ள அதிநவீன பேட்ரியாட் இடைமறிப்பான்களையும் இராணுவம் பெற்று வருகிறது . அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெஹ்ரானுக்கு ஒரு வலிமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பெட்ரோலியம் போக்குவரத்தைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியும் மிகப்பெரிய இராணுவ பதிலடிக்கு உட்படுத்தப்படும் என்பதே அது. இப்படி இருக்க இரண்டு நாட்களில் செலவான ஆயுதங்களின் மதிப்பு வியப்பை அளிக்கும் வகையில் இருக்கிறது.

