US-இன் 2 விமானங்களை ஒரேநாளில் தகர்த்தது எப்படி? யாருக்கும் தெரியாத ஈரானின் ராணுவ ரகசியம்!
அமெரிக்க விமானங்களை ஈரான் வீழ்த்தியது எப்படி என்பது குறித்த ரகசியத்தை அந்நாடு வெளியிடவில்லை என்றாலும், கண்டறிவதற்கு கடினமான மஜித் அகச்சிவப்பு வான் பாதுகாப்பு அமைப்பு அல்லது தோளில் வைத்துச் சுடும் ஏவுகணைகளாக அவை இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ஒரே நாளில் 2 விமானங்கள்; 2 ஹெலிகாப்டர்கள்
மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் போரால், உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. மேலும் அந்நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாட்டையும் பொருளாதாரப் பிரச்னைகளையும் உள்ளாக்கி இருக்கிறது. இதற்கிடையே, அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக ஈரானும் சமீப நாட்களாக தாக்குதலில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவுக்குச் சொந்தமான 2 போர் விமானங்களையும், அதை மீட்க வந்த 2 ஹெலிகாப்டர்களையும் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் சில விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், விமான விபத்தில் தப்பித்த விமானியின் நிலை குறித்து அமெரிக்கா தற்போது தேடி வருவதாகவும் ஈரான் வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா எதுவும் செய்தி தெரிவிக்கவில்லை என்றபோதிலும், விபத்துக்கு மத்தியில் ஈரானுடன் பேச்சுவார்த்தை தயாராக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், இந்த நிகழ்வுகள் அமெரிக்காவிற்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. காரணம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கப் போர் விமானங்கள் எதிரித் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர், 2003-ஆம் ஆண்டு ஈராக் படையெடுப்பின்போதுதான், ஒரு அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது.
அமெரிக்க விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது எப்படி?
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அமெரிக்க விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியிருப்பது உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறது. காரணம், ஈரானின் வான்வெளி முழுவதும் தமது முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தெஹ்ரானிடம் விமான எதிர்ப்பு அமைப்புகள் எதுவும் இல்லை என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் அவர், “ஈரானிடம் தற்போதைக்கு எதுவும் இல்லை. அவை முழுவதுமாக அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. அதனால், அவர்களின் நாட்டின் பிற பகுதிகளின் மீது எங்கள் விமானங்கள் பறக்கின்றன... அவர்களால் அதை ஒன்றும் செய்ய முடியாது” எனக் கர்வத்துடன் சொல்லியிருந்தார்.
ஆனால், அவர் சொல்லி சில நாட்களில் இதுவரை 4 விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள், 1 கப்பல் வீழ்த்தப்பட்டிருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. அப்படியெனில், ஈரானால் இவை எப்படிச் சாத்தியமானது என்பதுதான் பல வல்லுநர்களின் கேள்வியாக உள்ளது.
மஜித் அமைப்பு என்பது என்ன? அதன் செயல்பாடுகள் என்ன?
அமெரிக்க விமானங்களை ஈரான் வீழ்த்தியது எப்படி என்பது குறித்த ரகசியத்தை அந்நாடு வெளியிடவில்லை என்றாலும், கண்டறிவதற்கு கடினமான மஜித் அகச்சிவப்பு வான் பாதுகாப்பு அமைப்பு அல்லது தோளில் வைத்துச் சுடும் ஏவுகணைகளாக அவை இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களும் குறைந்த உயரத்தில் இயங்கிக்கொண்டிருந்ததால், இந்த ஆயுதங்களுக்கு அவை எளிதான இலக்குகளாக அமைந்திருக்கலாம் என அவர்கள் கணக்கிடுகின்றனர். ஈரானின் தரை-வான் ஏவுகணைத் தளமான 2021இல் பயன்படுத்தப்பட்ட மஜித் அமைப்புதான், இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த மஜித் அமைப்பு, தாழ்வாகப் பறக்கும் விமானங்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது. இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இது ரேடாரைச் சார்ந்து இயங்குவதில்லை. மாறாக, இது ஒரு ப்ராக்ஸிமிட்டி ஃபியூஸுடன் இணைந்த செயலற்ற அகச்சிவப்புக் கண்டறிதலைப் பயன்படுத்துகிறது. இது ரேடார் சமிக்ஞைகளை வெளியிடாததால், இதன்மீது ஏவுகணை ஏவப்படுவதற்கு முன்பு விமானங்கள் இதைக் கண்டறிவது மிகவும் கடினமாகிறது. இதன் வீச்சு தூரத்தில் 8 கி.மீ. வரையிலும், உயரத்தில் 6 கி.மீ. வரையிலும் உள்ளது. எனவே, அமெரிக்க விமானங்கள் இந்த வீச்சுக்குள் இலக்காகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, இதன் கண்டறியும் திறன்களே இதன் முக்கிய அம்சமாகும். இது கண்காணிக்கும் திறனை 30 கி.மீ. வரை நீட்டிக்கிறது. இது ஒரே நேரத்தில் பல இலக்குகளைக் கண்காணிக்கவும் செய்கிறது. மேலும் மஜித் அமைப்பு, சுடுவதற்குத் தயாரான எட்டு ஏவுகணைகள் வரை சுமந்து செல்லக்கூடியது.
உண்மையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் இராணுவ தளங்களை அழித்தபோதிலும் அந்நாட்டின் பாதி ஏவுகணை ஏவுதளங்கள் இன்னும் சேதமடையாமல் உள்ளன என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரானிடம் சுமார் 20-25% ஏவுகணை ஏவுதளங்கள் எஞ்சியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
அதற்குக் காரணம், ஈரான், நகரும் தரை-வான் ஏவுகணை ஏவுதளங்களிலும் முதலீடு செய்திருப்பதுதான். அதில் ஒன்றுதான் இந்த மஜித் அமைப்பு. இவை தங்கள் நிலைகளை விரைவாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டிருப்பதால், இவற்றைக் கண்டறிவதும் அழிப்பதும் கடினமாகிறது. இது அடிப்படையில், இந்த ஏவுதளங்களைக் குறிவைப்பதற்கு முன்பே சுட்டுவிட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர, ஈரான் இரகசியக் குகைகளிலும் சுரங்கங்களிலும் எறிகணைகளைப் புதைத்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

