தீவிரமடையும் போர் ? கெடு விதித்தால் நரகத்தின் வாயில்கள் திறக்கும் - ஈரான் எச்சரிக்கை!
பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலைத் தொடங்கின. இந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனால் போர் உக்கிரமடைந்தது. இந்தப் போர் 5-ஆவது வாரமாக தொடரும் நிலையில், மத்திய கிழக்கில் நொடிக்குநொடி பதற்றம் நீடித்து வருகிறது.
நேற்று (ஏப்ரல் 4) ஈரான், வளைகுடா நாடுகள், ஈராக் மற்றும் இஸ்ரேல் மீது மேலும் ஏவுகணைகளை ஏவியது. இதில், இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறல்கள் விழுந்து சேதத்தை ஏற்படுத்தின. அதனைத் தொடர்ந்து, ஒரே இரவில் இஸ்ரேல், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
நேற்றைய முன்தினம் ஈரான் வான்பரப்பில் அமெரிக்காவின் எஃப்-15 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன அமெரிக்க விமான ஊழியரை இரு நாடுகளும் தேடிவரும் நிலையில், அமெரிக்காவும் ஈரானும் இந்த அச்சுறுத்தல்களை விடுத்துள்ளன. விமானி மீட்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக நேற்று, ஈரான் வாஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறினாலோ அல்லது உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கத் தவறினாலோ, ஈரானில் "நரக நிலை ஏற்படும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார் . மேலும் ஈரான் மீது பெரும் அழிவு ஏற்படும் என்றும் தெஹ்ரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை அழித்துவிடுவோம் என்றும் அச்சுறுத்தல் விடுத்தார்
இந்த சூழலில், ஈரானிய மூத்த இராணுவ அதிகாரியான ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாடி, "நரகத்தின் வாயில்கள் உங்களுக்காகத் திறக்கும்" என்று டிரம்பின் மிரட்டலுக்கு பதிலடி தந்துள்ளார். மேலும், டிரம்பின் எச்சரிக்கையை "ஒரு கையறுநிலையான, பதட்டமான, சமநிலையற்ற மற்றும் முட்டாள்தனமான நடவடிக்கை" என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து, ஈரானின் உள்கட்டமைப்பு மீது அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க இராணுவ சொத்துக்கள் மீதும் மற்றும் இஸ்ரேலிய உள்கட்டமைப்பு மீதும் "பேரழிவை ஏற்படுத்தும் தொடர்ச்சியான" தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அப்துல்லாஹி எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து, நடந்து வரும் போரில் தெஹ்ரான் தனது திட்டமிடலின்படி முன்னேறி வருவதாகவும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு "ஒரு பெரிய ஆச்சர்யம் " காத்திருப்பதாகவும் ஈரான் கூறியுள்ளது .
திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதில் அமெரிக்கா துல்லியமில்லாததாக இருக்கிறது " என்றும் பாலங்களைத் தாக்குவோம் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் "சிரிப்புக்குரியவை" என்றும் ஈரானின் பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார் .
இந்த போரில் எதிரியை எவ்வாறு சோர்வடையச் செய்வது என்பதை நாங்கள் நன்கு கற்றுக்கொண்டோம். அமெரிக்கா தனது விரைவான மற்றும் எளிதான தாக்குதல் உத்தியில் தோல்வியடைந்துள்ளது," என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மார்ச் 26 அன்று டிரம்ப் ஈரானுக்கு 10 நாள் காலக்கெடு விதித்திருந்தார். அந்தக் காலக்கெடு ஏப்ரல் 6 அன்று முடிவடைய உள்ள நிலையில், இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

