கொன்று குவிக்கப்பட்ட ஈரானிய தலைவர்கள்.. ஆதாரத்தோடு பகிர்ந்த அதிபர் ட்ரம்ப்!
ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட பதிவில், தெஹ்ரானில் நடந்த பெரும் தாக்குதலில் பல உயர்மட்ட ஈரானிய இராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக வீடியோ வெளியிட்டு டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது மேற்கு ஆசிய மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரானியத் தலைநகர் மீது நடத்தப்பட்ட ஒரு பெரும் தாக்குதலில் தெஹ்ரானின் பல உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' பதிவில் கூறியுள்ளார். ஒரு நிமிடம் ஏழு வினாடிகள் கொண்ட காணொளியுடன் வெளியிடப்பட்ட இந்தப் பதிவு, மேற்கு ஆசியாவில் வேகமாகத் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கும், போரின் அடுத்த கட்டம் குறித்த நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் சூழலிலும் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் போன்ற தகவல்கள் குறித்து ட்ரம்ப் எதுவும் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறினாலோ அல்லது உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கத் தவறினாலோ, கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று தெஹ்ரானுக்கு டிரம்ப் விடுத்த புதிய 48 மணி நேரக் கெடுவைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது . ஏறக்குறைய ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரில், ஒரே நாளில் ஈரானின் வான்பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன அமெரிக்க விமான ஊழியரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை அமெரிக்க இராணுவம் தீவிரப்படுத்தியது. ஒரு விமான ஊழியர் இன்னும் காணாமல் போயுள்ளார் என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். போரை நடத்திய விதம் மற்றும் அதனால் அதிகரித்து வரும் மனித மற்றும் மூலோபாய இழப்புகள் குறித்து டிரம்ப் நிர்வாகம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல, அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடாப் பகுதியில் தெஹ்ரான் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்த நிலையில், ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் இடைமறிக்கும் பணியில் தங்களது வான் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டு வருவதாக குவைத் ராணுவம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை குவைத் நகரில் உள்ள ஒரு அரசு கட்டிடத்திற்கு ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் "கணிசமான" சேதம் ஏற்பட்டதாகவும், உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்றும் நிதி அமைச்சக அறிக்கை தெரிவித்தது.

