மகாராஷ்டிரா | பாஜக உடன் முற்றும் மோதல்.. மோடி, அமித் ஷா உடன் ஏக்நாத் ஷிண்டே திடீர் சந்திப்பு!
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை டெல்லியில் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஷிண்டே கூறியுள்ளார். ஆனால் மாநிலத்தில் பாஜக கூட்டணி அரசுக்குள் சிவசேனை அமைச்சர்கள் நடத்தப்படும் விதம் குறித்து விவாதிக்க இந்தச் சந்திப்பு நடந்ததாகத் சிவசேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகராஷ்டிரத்தில் 2024 தேர்தலில் வென்று பாஜக-சிவசேனா,-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆட்சி அமைந்த காலத்திலிருந்தே பாஜகவுக்கும் சிவசேனாவிற்கும் பிணக்கு நிலவிவருகிறது. பாஜக முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஷிண்டேவின் சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர்களின் முடிவுகளை பல்வேறு காரணங்களைக் கூறி ரத்து செய்வதாகவும், அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும் சிவசேனா தரப்பினர் அதிருப்தியில்உள்ளனர்.
சிவசேனாவின் அமைச்சர்கள் ஓரங்கட்டப்படக் கூடாது என்றும், அதிகாரப் பகிர்வு சமமாக இருக்க வேண்டும் என்றும் ஷிண்டே, பாஜக தலைமையிடம் உறுதியளிக்கக் கோரியதாக விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கக்கூட சிவசேனா தயாராக இருப்பதாகவும் பாஜக அரசு மீது அவநம்பிக்கைக்கு வழிவகுக்கும் என்பதற்காக அதைத் தவிர்ப்பதாகவும் ஷிண்டே கூறியதாக சிவசேனா தரப்பில் தெரிவிக்கின்றனர். இது கூட்டணியில் தொடர்வது குறித்து பாஜக தலைமைக்கு ஷிண்டே விடுத்திருக்கும் மறைமுக ஏச்சரிக்கை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.