இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50% வரி! இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சொன்னது என்ன?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்துள்ளார் ட்ரம்ப்.
இந்நிலையில், இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது என்றும் நாட்டு நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது சந்தை காரணிகளை அடிப்படையாக கொண்டது எனவும், 140 கோடி இந்தியர்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டது எனவும், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பல நாடுகள் தங்கள் தேசிய நலனை பாதுகாக்க மேற்கொள்ளும் அதே நடவடிக்கையை, இந்தியாவும் மேற்கொண்டதற்காக, கூடுதல் வரி விதிக்கும் முடிவு துரதிருஷ்டவசமானது எனவும் கூறியுள்ளார். இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் உறுதி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சீனா செல்வதாக தகவல் வெளியான நிலையில், இந்த வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளதால் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்தியா மீதான 50 சதவீத வரி விதிப்பு என்பது வியட்நாம், இந்தோனேசியா, ஐப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளை விட மிக அதிகம் ஆகும்.