காசா | அமலுக்கு வந்த போர் நிறுத்தம்.. நீடித்த அமைதிக்கு வழிவகுக்குமா?
போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, காசாவில் இருக்கும் இஸ்ரேல் படைகள் திரும்பப்பெறப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மக்கள் வடக்கு காசாவில் உள்ள தங்களது இருப்பிடங்களுக்கு நடந்தே செல்கின்றனர். ஒப்பந்தத்தின் விளைவாக, பிணைக் கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. காசாவை நிர்வகிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஹமாஸ் படைகள் ஆயுதங்களை துறக்காவிட்டால், மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் நடவடிக்கையை வரவேற்று, இஸ்ரேல் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தலைநகர் டெல் அவிவில் உள்ள பிணைக் கைதிகள் சதுக்கத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொண்டாட்டத்தின்போது, போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பிரமாண்ட போஸ்டரை பொதுமக்கள் ஏந்தி இருந்தனர்.
இதேபோல், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த ட்ரம்ப் எடுத்துவரும் முயற்சிகள் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் எந்த அமெரிக்க அதிபர்கள் மேற்கொள்ளாத முயற்சியை ட்ரம்ப் மேற்கொண்டிருப்பதாக சர்வதேச புவி அரசியல் நிபுணர்கள் பாராட்டுகின்றனர். எனினும், ட்ரம்ப் முன் இன்னும் பல சவால்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
முக்கியமாக, ஹமாஸ் தனது ஆயுதங்களை ஒப்படைப்பது போன்ற சிக்கலான விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படாதது போர் நிறுத்த செயல்பாட்டில் பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது. தனது முதல் பதவிக் காலத்தில் எட்டிய ஆபிரகாம் ஒப்பந்தங்களை விரிவாக்கம் செய்து, மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வரும் முயற்சியில் ட்ரம்ப் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பும் போர் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது நிரந்தர போர் நிறுத்தமாக இருக்குமென்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், காசா தாக்குதல் மீண்டும் நடந்தது. 2021 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இடைக்கால போர் நிறுத்தமும், 2023 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த போர் நிறுத்தமும் பல்வேறு புற அழுத்தங்களால் மீண்டும் தொடங்கியது. ஆனால், போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் அழுத்தம் இம்முறை சற்று அதிகமாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகள் காசா மீதான தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றன. அதேபோல், பாலஸ்தீனத்தை தனி நாடாக பெரும்பாலான நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன. எனவே, இத்தகைய அழுத்தங்கள் எல்லாம் முழுமையான போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே காஸா அமைதி ஒப்பந்தத்தை முடிவு செய்வது தொடர்பாக நாளை நடைபெறும் உலகத்தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் எகிப்து அதிபர் அல் ஃபட்டா எல் சிசியும் இந்த அழைப்பை விடுத்துள்ளனர். காஸாவில் இஸ்ரேல் போரை நிறுத்தியுள்ள நிலையில் அங்கு நிரந்தரமாக அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக எகிப்தில் நாளை 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்பது குறித்து உறுதிசெய்யப்படவில்லை என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.