குறைபிரசவக் குழந்தைகளுக்காக தாய்ப்பால் தானம்: ஜுவாலா கட்டா நெகிழ்ச்சிப் பதிவு
இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையும், விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா, குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைத் தானம் செய்து, அது குறித்து நெகிழ்ச்சியான பதிவைப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஜுவாலா கட்டா, "தாய்ப்பால் வெறும் உணவு அல்ல, அது ஒரு மருந்து. குறிப்பாகக் குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு! நோய் எதிர்ப்புச் சத்துக்கள் நிறைந்த, எளிதில் செரிமானமாகும் தாய்ப்பால், உயிரைக் காப்பாற்றக்கூடியது. உங்களால் முடிந்தால் தானம் செய்யுங்கள். இதன்மூலம் சிறிய போராளிகளுக்கு நீங்கள் ஒரு உண்மையான வாழ்வுக்கான வாய்ப்பை வழங்குகிறீர்கள். #DonorMilkSavesLives (தானம் செய்யப்பட்ட தாய்ப்பால் உயிர்களைக் காப்பாற்றும்)" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்தப் பதிவில், "மேலும் கொஞ்சம் தாய்ப்பாலைத் தானம் செய்தேன்... என்னால் முடிந்தவரை தொடர்ந்து தானம் செய்வேன்..." என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தாயின் பால் ஒரு உயிர் காக்கும் மருந்தாகச் செயல்படுகிறது. இந்நிலையில், ஜுவாலா கட்டா பொதுவெளியில் தாய்ப்பால் தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி, தானே தானம் செய்திருப்பது பல தாய்மார்களுக்கும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது.