அதிபராக மீண்டும் ட்ரம்ப்.. உலக அரசியலில் மாற்றங்கள் ஏற்படுமா?
மீண்டும் ட்ரம்ப்
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 20 ஆம் தேதி பதவியேற்றார். பதவியேற்பதற்கு முன்பாக தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப், “பதவியேற்பதற்கு முன்பே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல மாறுதல்கள் தொடங்கிவிட்டது. நான் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன். மத்திய கிழக்கில் குழப்பத்தை நிறுத்துவேன், 3வது உலகப் போர் நடக்காமல் தடுப்பேன்” என பல்வேறு விஷயங்களைப் பேசி இருந்தார்.
அதேபோல் பதவியேற்றபின்பும் பல அறிவிப்புகள் வெளியானது. “பனாமா கால்வாயை மீட்பேன்” என ட்ரம்ப் கூறிய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பனாமா நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் வாஷிங்டன் டிசியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்று பாலினத்தவர்களின் உரிமைகள், குடியேற்றங்கள், பாலஸ்தீன விவகாரம் உள்ளிட்டவற்றில் ட்ரம்பின் கொள்கைகள் மக்களுக்கு எதிராக இருப்பதாக தெரிவித்த போராட்டக்காரர்கள், இந்த கொள்கைகளை கடைப்பிடிக்கும் ட்ரம்ப், அதிபராக இருக்க தகுதியற்றவர் என்று விமர்சித்துள்ளனர்.
பொதுநலன்களில் இருந்து விலகும் அமெரிக்கா
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதிவியேற்றது உலக அரசியல் அரங்கில் எம்மாதிரியான மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பது குறித்து பேராசிரியர் க்ளாட்ஸ்டன் சேவியர் (Gladston Xavier) உடன் பேசினோம்.
அவர் கூறியதாவது, “டொனால்ட் ட்ரம்ப் இம்முறை அமெரிக்க அதிபராக பதவியேற்றதற்கும், போன முறை பதவியேற்றதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. குறிப்பாக, நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில் இருந்து தனிச்சையாக செயல்படும் போக்கு இப்போதே ஆரம்பித்துவிட்டது. உலக பொது நலன்களில் இருந்து அமெரிக்கா விலகி இருக்கப்போவதை நாம் பார்க்கப்போகிறோம்.
உலக சுகாதார மையத்தில் இருந்து விலகினார்கள், பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியில் வந்தார்கள், வரி விதிப்புகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்கள். பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை பயன்படுத்தாமல் வேறு கரன்சியை பயன்படுத்தலாமா என யோசிக்கும்போதே அவர்கள் மேல் 100% வரி போடுவோம் என மிரட்டுகிறார். இதன்மூலம் என்ன தெரிகிறது என்றால், அமெரிக்காவின் ஆதிக்கத்தையும், முதலாளித்துவ கொள்கைகளையும் முன்னிறுத்துவதற்கான எல்லாவிதமான முன்னெடுப்புகளையும் அவர்கள் எடுக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இதன்காரணமாக, பல்வேறு நாடுகள் சுயமாக செயல்படும் என நிலை மாறி அமெரிக்காவை சார்ந்துதான் வாழ வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துகிறார்கள்.
மறுபுறம் எல்லை சார்ந்த பிரச்னைகளையும் பேசி வருகின்றனர். பனாமா கால்வாய் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். மெக்சிகோ விரிகுடாவை அமெரிக்க விரிகுடா என மாற்ற வேண்டும் என பேசியுள்ளார். க்ரீன்லாந்து தொடர்பாகவும் பேசுகிறார். இதில், தற்கால அரசியல் செயல்பாடுகளைப் புரட்டிப் போடக்கூடிய அத்தனை அறிகுறிகளும் தெரிகிறது.
இதுமட்டுமல்ல, விசா பிரச்னை மிக முக்கியமானது. அனுமதி இன்றி குடியேறியவர்களுக்கு சலுகைகள் இருக்காது என்பது ரொம்ப நாளாக பேசப்பட்டு வந்த விஷயம்தான். ஆனால், அதை இவர் மிகத் தீவிரமாக செயல்படுத்துவதைப் பார்க்கிறோம். அனைத்து விஷயங்களிலும் பாரிய மாற்றங்கள் நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவுக்கு சாதகமான சூழலா?
இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடு. இந்தியா நட்பு நாடாக இருப்பதால், இந்தியா மீதான அமெரிக்காவின் அணுகுமுறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. இருந்தாலும் இந்தியா இதை ஜாக்கிரதையாக அணுக வேண்டும். இந்தியர்கள் மிக அதிகளவில் அங்கு இருக்கிறார்கள். அதற்கேற்றவாறு செயல்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
அடுத்தது வர்த்தகம். அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் இந்தியா மிகப்பெரிய பாத்திரத்தை வகிக்கிறது. ராணுவம், மருத்துவம், மென்பொருள், டெக்னாலஜி என பல்வேறு விஷயங்களில் இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கிய உறவில் இருக்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அமெரிக்காவிற்கு அதிகளவில் தேவைப்படுகிறது.
அதிரடியான முடிவுகளை ட்ரம்பிடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம். அமெரிக்க அதிபர்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். முதலில், ‘நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஏனென்றால் நான் அமெரிக்கன்’ என இருப்பவர்கள். இரண்டாவது, ‘நாம் சொல்வதை உலகமே கேட்கிறது. நாம் மிக ஜாக்கிரதையாக பேச வேண்டும்’ எனும் பாணி. இதில் ட்ரம்ப் முதல் வகை” எனத் தெரிவித்தார்.