‘மும்பை கா ராஜா’ ரோகித் சர்மா, எதிர்பார்க்கப்பட்ட ரஞ்சி தொடரில் 3 ரன்களில் OUT.. ரசிகர்கள் ஏமாற்றம்!
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சமீப காலங்களில் தொடர்ச்சியாக தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். அவர் கடைசியாக விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு இன்னிங்ஸில் மட்டுமே அரைசதம் அடித்திருந்தார். குறிப்பாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் 3, 9, 10, 3, 6 என சொற்ப ரன்களில் வெளியேறினார். மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கூட பும்ரா கேப்டனாக செயல்பட ரோகித் பெஞ்சில் அமர்ந்திருந்தார்.
இதனிடையே பிசிசிஐ புதிய விதிமுறைகளை வெளியிட்டது. அதில், வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும் என்ற விதிமுறை மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இதனை அடுத்து இந்திய அணியின் மிக முக்கிய வீரர்கள் பலரும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினர். இதில் பிரதானமாக எதிர்பார்க்கப்பட்ட நபர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா.
கிட்டத்தட்ட 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரோகித் சர்மா தனது ரஞ்சி போட்டியில் விளையாடியுள்ளார். மும்பைக்கும் ஜம்மு காஷ்மீருக்கும் இடையிலான ரஞ்சி போட்டி மும்பையில் உள்ள சரத் பவார் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வாலும் ரோகித் சர்மாவும் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். 4 ரன்களில் ஜெய்ஸ்வால் வெளியேற ரோகித் சர்மாவும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னதாக ரோகித் களமிறங்கியபோது அவரது ரசிகர்கள், ‘மும்பை கா ராஜா-ரோஹித் சர்மா’ என்ற முழக்கத்துடன் அவரை வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக 18 பந்துகளை எதிர்கொண்ட அவர் சில பந்துகளை தவறவிட்டார். ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பவுன்சர்களை அடிக்க சிரமப்பட்டார். ஒரு கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் உமர் நசீர் மிர் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். 2015 ஆண்டுக்குப்பின் மீண்டும் ரஞ்சி போட்டியில் களமிறங்கிய நிலையில், தனது முதல் இன்னிங்ஸிலேயே 3 ரன்களுக்கு வெளியேறியது அவர்களது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.