‘என்னா அடி...’ ரோகித், யுவராஜ் சாதனைகளை நெருங்கிய அபிஷேக் ஷர்மா.. ‘கோட்டை எல்லாம் அழிங்கப்பா’
இந்திய அணி அபார வெற்றி
ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் பலப்பரீட்சை கொல்கத்தாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்யக் கேட்டுக் கொண்டது. மிதவேகம், சுழல் என இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஒருமுனையில் இங்கிலாந்து வீரர்கள் வருவதும், பெவிலியன் திரும்புவதுவமாக இருக்க, கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டும் தமது வழக்கமான அதிரடிக்கு எந்தப் பஞ்சமும் இல்லாமல் விளையாடினார். 44 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 68 ரன்கள் விளாசி அவர் வெளியேறினார். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், பாண்ட்யா, அக்ஷர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
133 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தினர். சாம்சன் 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய அபிஷேக் வர்மா 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். 34 பந்துகளில் 8 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் உட்பட 79 ரன்களை அவர் குவித்தார். இந்திய அணி 13 ஆவது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. ஆட்ட நாயகனாக வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.
சுழலில் திணறிய இங்கிலாந்து
இந்திய அணி வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அக்சர் படேல் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. இவர்கள் மொத்தம் 12 ஓவர்களை வீசிய நிலையில், 67 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களையும் சாய்த்தனர். இதில் அக்சர்படேல் ஓவரை மெய்டனாகவும் வீசினார்.
போட்டி முடிந்து பேசிய அபிஷேக் ஷர்மா, “கேப்டன் மற்றும் பயிற்சியாளரை குறிப்பிட்டுப் பேச வேண்டும். அவர்கள் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தினைக் கொடுத்தார்கள். அவர்கள் இளம்வீரர்களுடம் பேசும் விதம் மிகவும் சிறப்பானது. 160 முதல் 170 வரையிலான டார்கெட்டைதான் எதிர்த்து ஆடுவோம் என நினைத்தேன். ஆனால், பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்து வீசினார்கள். இதுபோன்ற அணி சூழலை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை” எனத் தெரிவித்தார்.
அதிரடி நாயகன் அபிஷேக் ஷர்மா
அபிஷேக் ஷர்மா மொத்தம் 79 ரன்களை எடுத்திருந்தார். இதில் 5 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என 68 ரன்களை பவுண்டரிகளின் மூலம் மட்டுமே சேர்த்தார். இதற்கு முன் ரோகித் சர்மா மட்டும்தான் இதுபோன்ற அசத்தல் ஆட்டத்தினை ஆடியவர். 2017 ஆம் ஆண்டு இந்தூரில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 118 ரன்களை எடுத்தார். அதில் 108 ரன்களை பவுண்டரிகளின் மூலம் மட்டுமே சேர்த்தார். மொத்தமாக 10 சிக்சர்களையும் 12 பவுண்டரிகளையும் அடித்திருந்தார். அதற்குப் பின் அபிஷேக் சர்மா மட்டும்தான் அத்தகைய ஆட்டத்தினை ஆடியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலிலும் அபிஷேக் ஷர்மா இடம்பிடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு 12 பந்துகளில் யுவராஜ் சிங் அடித்த அரைசதமே முதல் சாதனையாக உள்ளது. அதற்குப் பின் நேற்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.