பள்ளிகளுக்கு பதில் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில்... காசா சிறுமிக்கு சோக முடிவு | Lama Nasser
கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் தொடங்கிய இஸ்ரேல் காஸா மோதலில் தற்போதுவரை 58,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தொடர் மோதலால் காஸாவில் 2.3 மில்லியன் குடியிருப்பாளர்கள் பட்டியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இந்தப்போரில் காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகுக்குத் தெரிவித்த பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்த Watson Institute for International and Public Affairs’ Costs of War project எனும் அறிக்கை, காசா மீதான இஸ்ரேலின் போரில் 232 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. இந்த எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 13 பத்திரிகையாளர்கள். அதுமட்டுமின்றி, உலகப் போர்கள், வியட்நாம் போர், யூகோஸ்லாவியாவில் நடந்த போர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போர் என உலகில் நடந்த எந்தப் போர்களையும் விட காஸாவில் நடக்கும் போரில் அதிகளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.
இதற்கிடையே, குறிப்பாக தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவதை அடுத்து, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும், காஸா மக்களும் தாங்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை வீடியோக்களாகப் பதிவேற்ற ஆரம்பித்தனர். இதில் குழந்தைகள் பலரும் இணைந்து கொண்டனர். அப்படி துணிச்சலாக குரல் கொடுத்த குழந்தைகளில் ஒருவர்தான் லாமா நாசர் எனும் 11 வயது குழந்தை. இவர் தனது வீடியோக்களில் தனது நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகிற்கு தெரிவித்து வந்தார். Palestine Chronicle எனும் ஊடகத்திற்கும் செய்திகளை வழங்கி லாமா நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார்.
நகரத்தில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தின் மீது விழுந்த இஸ்ரேலிய குண்டு, அக்கட்டத்தை மொத்தமாக சிதைத்தது. இந்தத் தாக்குதலில் லாமா, அவரது பெற்றோர், அவரது சகோதர சகோதரிகளும் உயிரிழந்தனர்.
Palestine Chronicle ஊடகத்திற்கு கடைசியாக அவர் அளித்த வீடியோவில், “காசா என்பது குழந்தைப் பருவமும் வேதனையும் ஒன்று சேர்ந்த இடம். அங்கு உள்ள சிறுவர்கள், உலகின் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் ஒன்றில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் ஆக்கிரமிப்பு காரணமாக குழந்தைகள் கடினமான மற்றும் பேரழிவு தரும் சூழ்நிலைகளை கடந்து செல்கின்றனர்.
காசாவில், குழந்தைகள் பட்டினியால் அவதிப்படுகிறார்கள். சாப்பிட உணவு இல்லை. சாப்பிட உணவு இல்லை. மேலும், அவர்கள் தொற்றுநோய்கள், குறிப்பாக போலியோ பரவலால் அவதிப்படுகிறார்கள்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகள் பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் அழித்ததால், குழந்தைகள் கல்வி கற்கும் உரிமையை இழந்துள்ளனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள் அல்லது தங்கள் குடும்பங்களுக்கு தண்ணீர் வேண்டி வரிசையில் நிற்கிறார்கள்.
காசாவின் குழந்தைகள் உலகில் உள்ள எந்தக் குழந்தையையும் போலவே அமைதியாக வாழ விரும்புகிறார்கள். இனப்படுகொலையை நிறுத்துங்கள்!” எனத் தெரிவித்திருக்கிறார்.