கர்நாடகா: குகையில் 2 குழந்தைகளுடன் தனியாய் வசித்த ரஷ்யப் பெண்.. ஆய்வில் போலீசார் மீட்பு!
கர்நாடக மாநிலம் உத்தரகாண்ட மாவட்டத்தில் ராம தீர்த்தமலை அமைந்துள்ளது. அடர்வனப் பகுதியாகக் கருதப்படும் இப்பகுதியில், அவ்வப்போது நிலச்சரிவு அபாயம் உள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் போலீசார் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கோகர்ணாவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, ஆய்வுப் பணியில் இருந்து போலீசார், அப்பகுதியில் இருந்த குகையில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் நடமாடுவதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரைப் பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையில் நினா குடினா (40) என்ற ரஷ்யப் பெண்ணும், அவரது குழந்தைகளான பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தங்கியிருந்தது தெரிய வந்தது.
வணிக விசாவில் வந்திருந்த அவருக்கு 2017ஆம் ஆண்டே அந்த விசா முடிந்துள்ளது. இதையடுத்து கோவாவிற்குச் சென்றுள்ளார். அதன்பின் நேபாளத்திற்குச் சென்றுள்ளார். பின்னர், மீண்டும் கர்நாடகாவின் இந்த குகைக்குத் திரும்பியுள்ளார். அங்கிருந்தபடியே அவர் மளிகைச் சாமான்கள் மற்றும் காய்கறிகள் வாங்கிவந்து, விறகுகளை வைத்து உணவு சமைத்துள்ளார். தியானம் மற்றும் யோகாவில் ஆர்வம் காட்டியுள்ள அவருக்கு ரஷ்யாவில் இன்னொரு குழந்தை இருப்பதாகவும், அவரது கணவர் இஸ்ரேலிய தொழிலதிபராக உள்ளார் எனவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ”பாம்புகளும் விஷ ஜந்துக்களும் எங்களின் நண்பர்கள். அவைகள் எங்களை ஒன்றும் செய்யாது. அவற்றை தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மைத் தீண்டும்” என நினா குடினா போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர், அவருக்கு கவுன்சிலிங் வழங்கிய போலீசார், பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பிவைத்தனர். தவிர, அவர்களை ரஷ்யாவுக்கு அனுப்பும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர்.