பிரிந்தவர்களை சேர்த்தால் தன் தலைமைக்கு பாதிப்பா? - இபிஎஸ் தயங்குவது ஏன்?
'தமிழ்நாட்டை 30 ஆண்டுகளாக ஆண்ட அதிமுக என்ற ஆலமரத்தின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது? 20 ஆண்டுகள் மூத்த இயக்கமான திமுகவால் கூட செய்ய முடியாத தொடர் வெற்றியை பதிவு செய்த அதிமுகவின் இப்போதைய நிலை என்ன? நேற்று முளைத்தவர்கள் எல்லாம் திமுகவுக்கும் தங்களுக்கும்தான் போட்டி என்கிறார்கள். அப்படி என்றால் நாம் என்ன நிலையில் இருக்கிறோம்..' இப்படி அடுக்கடுக்கான கேள்விகளோடு குமுறி வருகின்றனர் அதிமுக தொண்டர்கள்.
அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள்.. வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் நிலையில், மாட்டவே மாட்டேன் என்று மறுப்பு தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் அதிகளவில் பிரிப்பார் என்பதை அனைத்து தரப்பினருமே ஏற்றுக்கொள்கின்றனர். நிலைமை இப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியின் யோசனைக்கு அப்படி என்னதான் காரணம் என்று கேள்விகளும் எழுகின்றன.
2026 அதிமுகவிற்கு வாழ்வா சாவா தேர்தல்?
2016ம் ஆண்டு இறுதியில் அப்போதைய முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்த பின்னர், ஆட்சி நிலைக்காது.. கட்சி நிலைக்காது என்கிற பேச்சு எழுந்தது. ஆனால், முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்க, கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருந்தார் ஓபிஎஸ். இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் இருக்க, அடுத்த நான்கு ஆண்டுகளாக நிதானமாக ஆட்சியை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.
சிறைக்கு சென்று திரும்பிய சசிகலா, அதிமுகவை தன்வயப்படுத்துவார் என்று அவரது ஆதரவாளர்களே எதிர்பார்த்த நிலையில், அவர் ஒதுங்கியே இருந்தார். 2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, 2022ம் ஆண்டு அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக, பொதுச்செயலாளராக தன்னை நிறுவிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கினார். பொதுக்குழு நடக்கும்போது எம்ஜிஆர் மாளிகையை ஓபிஎஸ் சூறையாடினார் என்பதே இபிஎஸ்ஸின் குற்றச்சாட்டு. இதற்குப் பிறகு அதிமுக என்ற பேரியக்கம், தனித்தனி அணிகளாக மாற, 2026 தேர்தல் வாழ்வா சாவா என்ற தேர்தலாக மாறி இருக்கிறது.
யோசிக்கும் நிர்வாகிகள்
அதிமுகவில் இருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட சசிகலா, ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோர், அதிமுகவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று குரல் எழுப்புகின்றனர். 4 வருடம் முதலமைச்சர், 4 வருடம் தற்போது கட்சியின் பொதுசெயலாளர் என கட்சியை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி மார்த்தட்டி கொண்டாலும், எம்ஜிஆர் தொடங்கி, ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய இயக்கத்தின் தற்போதைய நிலை என்ன என்று குமுறுகின்றனர் எம்ஜிஆர் மாளிகையின் விசுவாசிகள்.. 1949ம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக, 1967 மற்றும் 1971 ஆகிய தேர்தல்களின்போது மட்டுமே தொடர் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், அதிமுக வரலாற்றில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தொடர் வெற்றிகளை பதிவு செய்ததை தமிழக அரசியல் களம் பார்த்திருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரிந்து கிடக்கும் கட்சியை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம் என்று கேள்வி, கட்சி தொண்டர்களிடமே மேலோங்கி வருகிறது. யாரை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு பயம், எதற்காக கட்சி ஒன்றிணைவதை தடுக்கிறார் என்று நிர்வாகிகளும் யோசிக்க தொடங்கியுள்ளனர்.
ஒருபக்கம் திமுக கூட்டணி.. மறுபக்கம் அதிமுகவிற்கு இதுநாள் வரை வந்துகொண்டிருந்த திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்க காத்திருக்கும் விஜய்.. அதிமுகவிற்குள்ளாகவே நிலவும் உட்கட்சிப் பூசல்கள் என அதிமுகவிற்கு திரும்பிய திசையெல்லாம் செக்மேட்டாக இருக்கிறது. இந்த சூழலில் கூட, அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் அதிமுகவினரையும் யோசிக்க வைத்திருக்கிறது.
இந்த நேரத்தில், கட்சியின் தலைமையே வேண்டாம் என்று சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைக்கு வந்த பிறகும், இபிஎஸ் பிடிவாதம் காட்டுவது ஏன்? டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் கட்சிக்குள் வந்தால், தன் தலைமைக்கு பாதிப்பு என எடப்பாடி பழனிசாமி அஞ்சுகிறாரா..? என்பது குறித்து, மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.
இபிஎஸ்ஸின் செயல் அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும்
அவர் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி தெளிவாகவே இருக்கிறார். ஓபிஎஸ், தினகரன் மற்றும் சசிகலா என யாரும் அரசியல் ரீதியாக வலுபடுவதை அவர் விரும்பவில்லை. அவர்களை கட்சியில் சேர்த்தால் எந்தக் கட்டத்திலும் தனது தலைமைக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்திருக்கிறார். அதனாலேயே அவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார். ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வத்திடம் இரட்டைத்தலைமை என நிறைய சவால்களை சந்தித்து, தனது 4 ஆண்டுகால முதலமைச்சர் செல்வாக்கால் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். எனவே இன்னொருமுறை அந்த நிலைமைக்கு செல்ல வேண்டாம் என நிச்சயம் நினைப்பார். மேலும், செல்வாக்கு மிக்க தலைவர்கள் யாரை வேண்டுமானாலும் கட்சியில் சேர்த்துக் கொள்வார்கள்.
உதாரணமாக ஜெயலலிதா தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆர்.எம் வீரப்பன் அவர்களை கட்சியில் சேர்த்துக் கொண்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு தனது தலைமையின் மேலேயே நம்பிக்கையில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. அதனாலேயே யாரையும் சேர்த்துக் கொள்ள தயங்குகிறார். மேலும் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான இந்த செயல் அதிமுக-விற்கு பின்னடைவை ஏற்படுத்துவதாகவே அமையும்" எனத் தெரிவித்தார்.