பாஜக-வின் அடுத்தத் தலைவர்; பட்டியலில் இருக்கும் நான்கு பெயர்கள்.., ஆர்எஸ்எஸ்-ன் தாக்கம் இருக்குமா?
பாஜக தனது புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தயாராகிவரும் நிலையில், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சௌஹான், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, ஒடிஷாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகிய நான்கு பெயர்களும் தலைமைப் பதவிக்கு அடிபடுகின்றன.
பாஜக தலைவரின் பதவிக்காலம் நிறைவு !
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் ஏழு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது; ஆனால் அடுத்த தலைவர் இன்னமும் நியமிக்கப்படவில்லை. “உலகிலேயே பெரிய கட்சி என்கிறீர்கள்... ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லையா?” என்று நாடாளுமன்றத்திலேயே பாஜகவை கேலி செய்துவிட்டார் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். ஆனாலும், தலைவர் தேர்வு தொங்கலில் இருப்பதற்கு, பாஜக - ஆர்எஸ்எஸ் இடையேயான கருத்து வேறுபாடுகள்தான் முக்கியமான காரணம் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்பட்டது.
வலுவான பாஜக தலைமையை கோரும் ஆர்எஸ்எஸ்
ஜெ.பி.நட்டா போன்று தங்களுக்கு தோதான ஒருவரை தலைவர் பதவிக்கு மோடி ஷா கொண்டு வர திட்டமிட்டதாகவும், ஆனால் ஆர்எஸ்எஸ் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வகையில் வலுவான ஒருவரை தலைவர் பதவிக்கு கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் எல்லா மாநிலங்களிலுமே வலுவான தலைவர்களை மாநில தலைவர் பதவிக்கு அமர்த்த வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தலைமை கூறியதாக தெரிகிறது.
இதனூடாகத்தான் "75 வயதானால் பொது வாழ்வில், தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் வகையில் ஓய்வை சிந்திக்க வேண்டும்" என்று பொருள்பட பேசினார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். பிரதமர் மோடிக்கு செய்தி சொல்லும் விதமாகத்தான் பகவத் இது போன்று பேசியிருக்கிறார் என்பதாகவும் அப்போது புரிந்துகொள்ளப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களில் பாஜக ஆர்எஸ்எஸ் இரு தரப்புமே தங்களிடையேயான உறவை சீரமைத்துக்கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்கின. உச்சகட்டமாக இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பேசுகையில், "ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தியாகிகள்" என்று புகழ்ந்துரைத்தார் பிரதமர் மோடி.
பாஜக தலைவர் பரிசீலனையில் இருக்கும் நான்கு பேர்!
பாஜக தலைவரின்பதவிக்காலம் முடிந்திருக்கும் நிலையில், பாஜக தலைவர் பரிசீலனையில் மோடி-ஷா கூட்டணியின் விருப்பப் பட்டியலில் பூபேந்திர யாதவ் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் பெயர்கள் கொடுக்கப்பட்டதாகவும், ஆர்எஸ்எஸ் விருப்பப் பட்டியலில் சிவராஜ் சௌஹான், தேவேந்திர ஃபட்னவீஸ் பெயர்கள் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. சௌஹான், ஃபட்னவிஸ் இருவருமே மோடி - ஷாவுக்கு இணக்கமானவர்களாக அறியப்பட்டவர்கள் அல்ல. இதனூடாகத்தான் இரு தரப்புக்கும் உகந்த பெயராக ரூபாலாவின் பெயரும் பரிசீலனை பட்டியலில் வந்தது.
குஜராத்தைச் சேர்ந்த ரூபாலா பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்பதோடு, ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் தீவிரமான செயல்பாட்டுக்காக அறியப்பட்டவர். இந்த சூழலில்தான், " 2029 தேர்தலிலும் பாஜகவின் பிரதமர் முகம் மோடிதான்" என்று உறுதிபட பேசினார். மோடி - ஷாவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும், பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் ஆகிய நிஷிகாந்த் துபே.
இடைப்பட்ட ஒரு மாதத்தில் வேகமாக பல விஷயங்கள் நடந்தன. அதில் முக்கியமான ஒரு விஷயம்: ஆர்எஸ்எஸ் - பாஜக இடையேயான சமாதானம்!
பாஜக-வில் உயர்கிறதா ஆர்எஸ்எஸ் கரம்?
2029 தேர்தலிலும் பாஜகவின் பிரதமர் முகமாக மோடியே முன்னிறுத்தப்படுவார் என்பதற்கு ஆர்எஸ்எஸ் ஒப்புக்கொண்டதாகவும் பதிலுக்கு, ஆர்எஸ்எஸ் தலைமை குறிப்பிடும் ஒருவரையே பாஜக தலைவராக மோடி - ஷா அறிவிக்க வேண்டும் என்றும் ஏற்பாடு ஆனதாக தெரிகிறது. இந்தப் பின்னணியில் பாஜக தலைவருக்கான பரிசீலனை பட்டியல் மீண்டும் ஒரு சுழற்சி கண்டது. அந்த வகையில், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சௌஹான், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, ஒடிஷாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகிய நான்கு பெயர்களும் இப்போது இறுதி கட்ட பரீசிலனையில் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
2014 முதல் 2024 வரை மோடி - ஷாவிடம் பாஜகவின் முழுக் கட்டுப்பாடும் இருந்த சூழல் வெகுவாக மாறியிருப்பதையும், ஆர்எஸ்எஸ் கரங்கள் உயர்வதையும் வெளிப்படையாக பார்க்க முடிகிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்!