5 மாநில தேர்தல்| ஸ்டாலினை தொடர்ந்து மம்தா பானர்ஜியும் தோல்வி.. 3 முதல்வர்கள் மட்டுமே வெற்றி!
இந்த 5 மாநிலத் தேர்தலில் ஆளும் தலைவர்களில் மூவர் மட்டுமே வெற்றி பெற்றனர். தமிழ்நாட்டில் ஸ்டாலின், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தனர்.
தமிழ்நாடு, மேற்குவங்கம், புதுச்சேரி, கேரளம், அசாம் முதலிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் வெற்றிகரமாக நடந்துமுடிந்து இன்று முடிவுகள் வெளியாகின. எஸ்.ஐ.ஆர்-க்குப் பிறகு, நடந்த இந்த 5 மாநில தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் பல ஆச்சரியங்களை நிகழ்த்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தோல்வி..
தமிழ்நாடு பொறுத்தவரையில், ஆளுங்கட்சியான திமுக பின்னடைவை சந்தித்து தனிம்பெரும் கட்சியாக புதியதாக களம்கண்ட விஜய் தலைமையிலான தவெக முதலிடம் பிடித்துள்ளது. இதில் சோகம் என்னவென்றால் திமுகவின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் படுதோல்வியை சந்தித்துள்ளார். இது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா பானர்ஜி தோல்வி..
மேற்குவங்கத்தில் தொடர்ந்து 3 முறை ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் இந்த தேர்தலில் அதிகாரத்தை இழந்துள்ளது. பாஜக மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்தசூழலில் மேற்கு வங்கத்தின் பபானிபூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி 15ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரிக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளார்.
ரங்கசாமி வெற்றி..
புதுச்சேரியை பொறுத்தவரையில் ஆளுங்கட்சியான என்.ஏர்.காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. அதேபோல தட்டஞ்சாவடி, மங்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் என்.ரங்கசாமி இரண்டிலும் வெற்றியை பெற்றுள்ளார்.
ஹிமந்த விஸ்வ சர்மா வெற்றி!
அசாமில் பெரும்பான்மை இடங்களில் வென்று பாஜக தனது ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது. ஜலுக்பரி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா 1,26,000-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று 89,000-க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
பினராயி விஜயன் வெற்றி.!
கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. தர்மடம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் 85,614 வாக்குகள் பெற்று 19,247 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

