பரந்தூர் விஜய் சந்திப்பு: அதிகளவில் கூடும் மக்கள்.. அடையாள அட்டை கேட்கும் காவல்துறை..
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 13 கிராமங்களில் இருந்து 5100 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து 900 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில்தான் தொடர் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், போராட்டக்குழுவினர் விஜயை சந்திக்கும் இடம் தொடர்பாக குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்றிரவு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகத்துடன், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், பாதுகாப்பு கருதி தனியார் மண்டபத்தில் கிராம மக்களை சந்திக்க விஜய்க்கு காவல் துறை அனுமதி அளித்துள்ளதாகவும், இன்று நண்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் குறிப்பிட்டார். தற்போது விஜய் பரந்தூரை நெருங்கிக் கொண்டிருக்கிறார். சில நிமிடங்களில் மக்களை சந்திக்க உள்ளார் விஜய்.
இந்த சந்திப்பில் பங்கேற்கும் 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 17 வேன்களில் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்த பின்பே அவர்கள் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பரந்தூருக்கு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் பிற பகுதி மக்களை தடுத்து நிறுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து பரந்தூர் செல்லக்கூடிய வாகனங்கள் சுங்குவார்ச்சத்திரம் வழியாக கண்ணன்தாங்கல் எனும் பகுதியைக் கடந்துதான் செல்லவேண்டும். எனவே, கண்ணன்தாங்கல் பகுதியில் பேரிகார்டுகளை அமைத்து வெளியூர் மக்களையும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களையும் தடுத்து வருகின்றனர்.
இதுபோல 20க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் பேரிகார்டுகளை அமைத்து முறையாக விசாரித்த பின்பே மக்களை பரந்தூருக்குள் செல்ல அனுமதிக்கின்றனர். ஏறத்தாழ 2000 பேரை திருமண மண்டபத்தில் வைத்து சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், கூடும் மக்களது எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் கிட்டத்தட்ட 5000 பேர் மண்டபத்தில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தமிழக வெற்றிக்கழகம் தரப்புக்கு காவல்துறையிடமிருந்து 4 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
1. பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்
2. சட்டம், ஒழுங்கைப் பேண காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்
3. திட்டமிட்டபடி காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் நிகழ்ச்சியை நடத்தி முடிக்கவேண்டும்
4. பொதுமக்களுக்கோ, பொதுச்சொத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்