பரந்தூர் விமான நிலைய போராட்டக்காரர்கள் - தவெக தலைவர் விஜய்
பரந்தூர் விமான நிலைய போராட்டக்காரர்கள் - தவெக தலைவர் விஜய் புதிய தலைமுறை

பரந்தூர்: போராட்டக்காரர்களை எங்கே சந்திக்கிறார் விஜய்? நீடித்த இழுபறி.. விதிக்கப்பட்ட 4 நிபந்தனைகள்!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 900 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் மக்களை, தவெக தலைவர் விஜய் இன்று சந்திக்கிறார். இதற்காக இதுவரை வைக்கப்பட்ட கோரிக்கைகள்... நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன? விரிவாக அறியலாம்...
Published on

செய்தியாளர்: சுரேஷ்குமார் 

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 900 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் மக்களை, தவெக தலைவர் விஜய் இன்று சந்திக்கிறார். இதற்காக இதுவரை வைக்கப்பட்ட கோரிக்கைகள்... நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன? தவெக தரப்பு சொல்வது என்ன? விரிவாக அறியலாம்...

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

திறந்தவெளியில் மக்களை சந்திக்க அனுமதி கோரிய தவெக!

பரந்தூரில் போராடும் மக்களை தவெக தலைவர் நேரில் சந்திக்க அனுமதி தருமாறு தமிழக வெற்றி கழகம் சார்பில் காவல்துறையிடம் கடந்த வாரம் (ஜனவரி 11ம் தேதியன்று) மனு அளிக்கப்பட்டது. மனுவில், ‘திறந்தவெளியில் மக்களை விஜய் சந்திப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் திறந்தவெளி திடலில் மக்களை சந்திக்க அனுமதி மறுத்த காவல்துறை, பரந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சந்திக்கொள்ளலாம் என்றனர். இருப்பினும், ‘திறந்தவெளியிலேயே விஜய் மக்கள் சந்திப்பதற்காக அனுமதி அளிக்க வேண்டும்’ என்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

“அனுமதி பெற்றபின் வாருங்கள்” - காவல்துறை

இதனிடையே நேற்றைய தினம் திறந்தவெளி திடல் பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கவும், பந்தல் அமைக்கவும் தேவையான பொருட்களை லாரிகளில் தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டு சென்றனர். அதைக்கண்ட பாதுகாப்பணியில் இருந்த போலீசார், “முறையான அனுமதி பெறப்பட்ட பிறகு தேவையான பொருட்களை திடல் பகுதிக்கு கொண்டுவாருங்கள்” எனக் கூறினர். இதன் காரணமாக நேற்று அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

என்.ஆனந்த் ஆய்வு
என்.ஆனந்த் ஆய்வு

தொடர்ந்து வலியுறுத்திய தவெக!

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி.யுடன் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். “திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்க முடியாது... திறந்தவெளி திடலிலேயே அனுமதிக்க வேண்டும்” என தொடர்ந்து வலியுறுத்தியது தவெக. தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேல் நடந்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. “பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி அளிக்க முடியாது” என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

பரந்தூர் விமான நிலைய போராட்டக்காரர்கள் - தவெக தலைவர் விஜய்
பரந்தூர் பறக்கும் தவெக தலைவர் விஜய்... அனுமதியோடு காவல்துறையினர் விதித்த கட்டுப்பாடுகள்! முழு விவரம்

சமரசம்!

இதையடுத்து, காவல்துறையின் அறிவுறுத்தலை ஏற்று திருமண மண்டபத்திலேயே மக்களை சந்திக்க தவெக தரப்பில் நேற்று இரவு 11 மணி அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் நேரடியாக பரந்தூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபம் வளாகத்திற்கு நிர்வாகிகள் உடன் சென்று, அங்கு பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

என்.ஆனந்த் ஆய்வு
என்.ஆனந்த் ஆய்வு

தேவையான ஏற்பாடுகளை செய்ய கட்சி நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து ஆனந்த் புறப்பட்டார். விஜய் இன்று காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் பரந்தூர் பகுதியில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்திற்கு நேரில் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து பேச உள்ளார்.

அதேநேரம் திருமண மண்டபத்தில் உள்ள கட்டடத்தில் மக்களை சந்திக்க மாட்டார் என்றும், அந்த வளாகத்தில் திறந்த வேனில் (கேரவனில்) நின்றபடி பேசுவார் என்றும் தமிழக வெற்றி கழகத்தினர் தெரிவிக்கிறார்கள்.

பரந்தூர் விமான நிலைய போராட்டக்காரர்கள் - தவெக தலைவர் விஜய்
பரந்தூரில் விஜய்.. எங்கே மக்களைச் சந்திக்கிறார்? நீடிக்கும் இழுபறி...

“காவல்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால்...” - என்.ஆனந்த்

இதுபற்றி நம்மிடையே நேற்றிரவு பேசிய என்.ஆனந்த், “பாதிக்கப்படக்கூடிய இடத்தில்தான் மக்களை சந்திக்க வேண்டும் என்பதே எங்கள் தலைவர் விஜய்யின் எண்ணம். ஏகனாபுரம் அருகே உள்ள அம்பேத்கர் திடலில்தான் தலைவர் மக்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் காவல்துறை அதற்கு மறுப்பு தெரிவித்து மண்டபத்தில்தான் அனுமதி கொடுத்தார்கள்.

‘ஏகனாபுரம் அருகே உள்ள அம்பேத்கர் திடல் பகுதியில் அனுமதி வழங்க வேண்டும் ’என போராட்டக் குழுவினரும் எங்கள் தரப்பினரும் நீண்ட நேரம் காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் பாதுகாப்பு நலன் கருதி அங்கு அனுமதி கொடுக்க முடியாது என காவல்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். அதனால் தனியார் திருமண மண்டபத்தில் சந்திக்க ஒப்புக் கொண்டோம். போராட்டக் குழுவினரும் ஒப்புக்கொண்டார்கள்” என தெரிவித்தார்.

13 கிராம மக்களையும் அழைத்து வர திட்டமிடும் தவெக!

விஜய் வருகைதரும் இடத்தில் (திருமண மண்டபத்தில்), பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படும் 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் இருக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக சென்று மக்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தவெக-வினர் செய்துள்ளனர். நிகழ்விடத்தில் ஏகனாபுரம் கிராமத்திலிருந்து அதிக அளவில் பொதுமக்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அங்குதான் தொடர்ந்து 900 நாட்களுக்கு மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமண மண்டபம்
திருமண மண்டபம்

தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளும் நிகழ்விடத்தில் அதிக எண்ணிக்கையிலான கூடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் காவல்துறை பாதுகாப்பும் அந்த பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தொடங்கிய பிறகு முதன்முதலாக தற்போது களத்திற்கு விஜய் வருவது, அரசியல் களத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தவெக தரப்புக்கு காவல்துறை தரப்பில் 4 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

விதிக்கப்பட்ட 4 நிபந்தனைகள்!

1. பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்

2. சட்டம், ஒழுங்கைப் பேண காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்

3. திட்டமிட்டபடி காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் நிகழ்ச்சியை நடத்தி முடிக்கவேண்டும்

4. பொதுமக்களுக்கோ, பொதுச்சொத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com