முதலீட்டுப் பயணம் வெற்றி.. நாடு திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!
இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர். அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்க்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணத்தை தொடங்கினார். முதற்கட்டமாக ஜெர்மனிக்கு சென்ற ஸ்டாலின் அங்கு, நடைபெற்ற ‘டிஎன் ரைசிங் ஜெர்மனி’ என்னும் முதலீட்டார்கள் மாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து, முதலீட்டாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.7,020 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
ஜெர்மனி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றடைந்தார். லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வறவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்தார். இதனையடுத்து, லண்டனில் டாக்டர் அம்பேத்கர் வசித்து வந்த வீட்டையும் பார்வையிட்டார். பிறகு, கார்ல் மார்க்ஸின் நினைவிடத்திற்கும் சென்றிருந்தார்.
இதனையடுத்து, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 8) காலை சென்னை வந்தடைந்தார். இந்நிலையில் அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இந்த சுற்றுப்பயணம் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “ஒரு வார காலமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு மனநிறைவோடு நான் திரும்பி இருக்கிறேன். இந்த பயணத்தை பொருத்தவரை மாபெரும் வெற்றி பயணமாக அமைந்திருக்கிறது. ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு ரூபாய் 15,516 கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. மொத்தமாக 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17, 613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்து 10 புதிய தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்காக முன் வந்திருக்கிறார்கள். உயர்கல்வி, சிறு குறு தொழில் துறைகளில் உள்ளிட்ட ஆறு அமைப்புகள் நம்மோடு இணைந்து கூட்டு முயற்சியில் மேற்கொள்ள இருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கக்கூடிய 17 நிறுவனங்களும் மற்ற மாநிலங்களை நோக்கி போகாமல் நம் மாநிலத்தை நோக்கி தன்னுடைய தொழிலை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
”வெளிநாட்டு பயணத்தில் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன”
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ”நான் வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாகவே இந்த பயணத்தை சிறப்பாக ஒருங்கிணைத்த தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருடன் இருந்த துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்.
தொழில்துறை அமைச்சர் துடிப்பான அமைச்சராக உள்ளார் என்பதை நிரூபித்துள்ளார். நான்காண்டு காலத்தில் மேற்கொண்டுள்ள என்னுடைய பயணங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இந்த பயணம் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த வெளிநாட்டு பயணத்தின்போது அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்”
”புதிய திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும்”
தமிழ்நாட்டில் ஏற்கனவே, நிறுவனங்கள் இருந்தாலும் புதிய திட்டங்களை இங்குதான் தொடங்க வேண்டும், விரிவுபடுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. புதிய முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ள உறுதி செய்ய நேரில் சந்தித்து பேசும்போதுதான் அதனை உறுதி செய்தார்கள். அதற்கு இந்த பயணம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் மனித வளம், உள்கட்டமைப்பு, வெளிப்படையான அரசு நிர்வாகம், சலுகைகள் என அனைத்தையும் முதலமைச்சராக இருக்கக்கூடிய நானே அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமல்ல, இன்னும் பல முதலீடுகள், பல நிறுவனங்கள் சந்திப்பு நாளை நிச்சயம் தமிழ்நாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள்” என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
பின்னர், அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் பதவி பறிப்பு குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள ஸ்டாலின், ”ஆக்கபூர்வமான விஷயமாக பேசிக் கொண்டிருக்கும்போது அக்கப்போரான கேள்வியை கேட்கிறீர்கள்” என தெரிவித்தார்.