”ஜெர்மனியில் ரூ.7,020 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து..” - முதல்வர் ஸ்டாலின்
தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்களை சந்தித்து. ரூ.7,020 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் தொழில் மேம்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு பெற்று வருகிறார்.
இதுவரை அவர் 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு உள்ள நிலையில், தற்போது 5-வது முறையாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் இருந்து கடந்த 30ம் தேதி விமானத்தில் ஜெர்மனி சென்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு, ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரில் ஜெர்மன் வாழ் தமிழர்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெர்மனியில் ரூ.7,020 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து..
தொடர்ந்து ஜெர்மனியில் உயர்நிலை முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஜெர்மனி-தமிழ்நாடு இடையே புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் முதல்வர் முக ஸ்டாலின், ஜெர்மனியில் ரூ.7,020 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய எக்ஸ் பதிவில் பதிவிட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், “எனது வெளிநாட்டு முதலீட்டுத் திட்டத்தின் ஜெர்மனி பிரிவு ஒரு வலுவான குறிப்பில் முடிவடைந்துள்ளது.
உயரும் தமிழ்நாடு என்பதின் ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ.3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவற்றால் 9,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன கூறுகள், மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் உலகளாவிய தலைவர்கள் தங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மொத்தத்தில், ரூ. 7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜெர்மனி வருகையின் போது கையெழுத்திடப்பட்டுள்ளன, இது தமிழ்நாட்டில் 15,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
திராவிட மாடல் உரையாடல்களை உறுதிமொழிகளாகவும், நம்பிக்கையை உறுதியான வளர்ச்சியாகவும் மாற்றிவருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உருவான ஒப்பந்தங்கள்..
2021-ம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பை ஏற்றப் பிறகு முதல் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு ரூ.6 ஆயிரத்து 100 கோடி அளவுக்கு தொழில் ஒப்பந்தங்கள் செய்து வந்தார். இதன் மூலம் தமிழகத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
தொடர்ந்து 2023-ம் ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்ற முதல்வர் ரூ.1,342 கோடி அளவிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இது சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று ரூ.3 ஆயிரத்து 440 கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்கு சென்று ரூ.7 ஆயிரத்து 616 கோடிக்கு பல்வேறு தொழில் மேம்பாட்டு ஒப்பந்தங்கள் செய்து வந்தார். இது 11 ஆயிரத்து 516 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் சூழலை கொடுத்திருக்கிறது.