தமிழ்நாடு அரசியல் | 2024ல் நடந்த மாற்றங்கள், புதுவரவுகள், திருப்பங்கள்
தமிழக அரசியல் களத்தில் எண்ணற்ற மாற்றங்கள், புதுவரவுகள், திருப்பங்கள் என இந்த 2024 ஆண்டு கடந்துவிட்டது. இவற்றில் பத்து செய்திகளை குறிப்பாக பார்க்கலாம்.
40 -க்கு 40 வெற்றி!
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் மத்தியில் மூன்றாவது முறையாக மீண்டும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி ஆட்சியமைத்தது. அதேசமயம், எதிர்க்கட்சிகளின் `இந்தியா கூட்டணி’ யின் அங்கமாக நின்று போட்டியிட்ட தி. மு.க கூட்டணி, தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியது. எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க, பா.ஜ.க, நா.த.க உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்தன. தி.மு.க தலைவராகப் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க பெறும் ஐந்தாவது தொடர் வெற்றியாக இந்தத் தேர்தல் பார்க்கப்பட்டது.
துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின்!
2021-இல் எம்.எல்.ஏ, 2022-இல் விளையாட்டுத்துறை அமைச்சர் என அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறிய உதயநிதி ஸ்டாலின், செப்டம்பர் 29-ஆம் தேதி துணை முதல்வராக பதவி உயர்வுபெற்றார். சட்டப்பேரவையில் மூன்றாவது வரிசையிலிருந்த உதயநிதியின் இருக்கை, முதல்வருக்கு அருகே மூன்றாவது இடத்தில் ஒதுக்கப்பட்டது. இதை, `வாரிசு அரசியலின் உச்சம்’ என அ.தி.மு.க, பா.ஜ. க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. `இந்த விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் தருவேன்’ என்றார் உதயநிதி.
நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி:
தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட்டு, தமிழ்த் திரையுலகிலிருந்து அரசியலுக்கு என்ட்ரி கொடுக்கும் நடிகர்கள் வரிசையில் நடிகர் விஜயும் இணைந்தார். `2026-இல் ஆட்சியைக் கைப்பற்றுவோம்’ என்ற கோஷத்தோடு பிப்ரவரி 2-ஆம் தேதி, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் விஜய். அதையடுத்து பல்வேறு தடங்கல்களுக்கிடையே, அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக முதல் மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அரசியல் எதிரி தி.மு.க; கொள்கை எதிரி பா.ஜ.க’ `தமிழ்த்தேசியம் திராவிடமும் இரு கண்கள்; ஆட்சிக்கு வந்தால் அதிகாரப் பகிர்வு உறுதி’ என பேசியது அரசியல் வட்டாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அமைச்சரவை மாற்றங்கள்!
அமலாக்கத்துறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, ஜாமீனில் விடுதலையான சில நாள்களில் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரைகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்ததையடுத்து, 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டன. செப்டம்பர் 29-இல் நடந்த பதவியேற்பு விழாவில், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கொடுக்கப்பட்டது. புதிய அமைச்சர்களாக பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி.செழியன் ஆகியோர் பதவியேற்றனர். ஆவடி நாசர் மீண்டும் அமைச்சரானார். அமைச்சர்களாக இருந்த மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், இளித்துறை ராமச்சந்திரன் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
வி.சி.க - தி.மு.க உரசல்!
2024 நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டின்போதே, வி.சி.க கூடுதலாக ஒரு சீட் கேட்ட விவகாரத்தில் தி.மு.க - வி. சி.க இடையே லேசான சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என பேசிய பழைய வீடியோ திருமாவளவனின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டு சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மதுஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அவர் சொன்னதும் சர்ச்சையானது. இதையடுத்து, த.வெ.க தலைவர் விஜய் கலந்துகொண்ட `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவை திருமா புறக்கணித்த நிலையில், அந்த விழாவை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான வி. சி.க துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ``2026 தேர்தலில் தி.மு.க கூட்டணி சிதறும், மன்னராட்சி வீழ்த்தப்படும்” என்ற தொனியில் தி.மு. கவை விமர்சித்துப் பேசியது தி.மு.க-வி. சி.க உறவில் புயலாக வீசியது. இதையடுத்து ஆதவ் அர்ஜூனாவை 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்தார் திருமா. பின்னர் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அறிவித்தார். இந்த உரசல்கள் இருந்தாலும் கூட்டணியில் தொடர்வதாக இருதரப்பும் கூறிவருகிறார்கள்.
மீண்டும் வலுப்பெற்ற அ.தி.மு.க இணைப்பு கோரிக்கை!
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் `அ.தி.மு.க ஒருங்கிணைப்பு’ என்ற குரல் வலுவாக ஓங்கி ஒலித்தது. அந்த நிலையில், `நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்’ என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, கட்சியின் ஆறு முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து (ஜூலையில்) வலியுறுத்தியதாகத் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம், அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் இயங்கிவரும் ஓ.பி.எஸ், ``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தபடி அ.தி.மு.க., மீண்டும் மலரும். சசிகலா, டி.டி.வி தினகரன் உள்பட அ.தி.மு.க, அணிகள் இணையும் காலம் வெகு தொலைவில் இல்லை!” என்றார். எடப்பாடி பழனிசாமியோ, ``உறுதியாக அ.தி.மு.க., இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. பொதுக்குழுக் கூட்டத்தில் நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான்!” என அதிரடியாக அறிவித்தார்!
அதிமுக களேபரங்கள்!
மாவட்டம்தோறும் அ.தி.மு.க நடத்திய கள ஆய்வுக் கூட்டங்களில் அ.தி.மு.க நிர்வாகிகள் மோதிக்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் டிசம்பர் மாதம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், ``2025 ஜனவரி மாத இறுதியில் 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும், 2026 தேர்தலில் மக்கள் விரும்பும்கூட்டணி அமையும் என்று தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார் எடப்பாடி பழனிசாமி..
லண்டன் பறந்த அண்ணாமலை!
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் தொடர்பான 3 மாத படிப்பிற்காக, ஆகஸ்ட் 27-ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, தமிழக பா.ஜ.க-வை வழிநடத்த, பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான், கோவையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி குறைதீர்ப்பு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கேள்வி கேட்ட சம்பவமும், அதற்கு மன்னிப்பு கோரிய வீடியோவும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு லண்டனில் இருந்தபடியே மன்னிப்பு கோரினார் அண்ணாமலை.
இரு இடைத்தேர்தல்கள்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தார். இதையடுத்து காலியான விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் நடைபெற்ற விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பர்ட் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் நந்தினியை சுமார் 40,174 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். விக்கிரவாண்டி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி திடீர் மரணமடைந்ததை அடுத்து, ஜூலை 10-ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தத் தேர்தலை புறக்கணித்தது. தேர்தல் முடிவில், தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா சுமார் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
கலைஞர் நாணயம்
அரசியலில் கொள்கைரீதியாக திமுகவும் பாஜகவும் எதிரெதிர் நிலைப்பாட்டில் உள்ள சூழலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். கருணாநிதி நாணயத்தை வெளியிட முதல் தேர்வாக இருந்தது ராஜ்நாத் சிங் தான் என கூறிய முதலமைச்சர், நாணயத்தை வெளியிட ராஜ்நாத் சிங்கை அனுப்பிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை, கூட்டணியில் இருக்கும் ராகுல்காந்தியை வைத்து வெளியிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக - பாஜக இடையே ரகசிய உறவு என விமர்சித்தார்.