அண்ணா பல்கலை. வன்கொடுமை விவகாரம் | FIR கசிய இதுவே காரணம் - தேசிய தகவல் மையம் விளக்கம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில், எஃப்.ஐ.ஆர் எப்படி லீக் ஆனது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்த சூழலில் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து, மாணவிக்கு இழப்பீடாக 25 லட்சம் ரூபாயை வழங்கவும் உத்தரவு பிறப்பித்தது இருந்தது.
இந்நிலையில் முதல் தகவல் அறிக்கை எப்படி வெளியானது என்பது குறித்து தேசிய தகவல் மையம் விளக்கமளித்துள்ளது.
FIR எப்படி கசிந்தது? தேசிய தகவல் மையம் விளக்கம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை எப்படி வெளியில் கசிந்தது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விளக்கத்தை தெரிவித்திருக்கும் தேசிய தகவல் மையம், “IPC-யிலிருந்து BNS-க்கு மாறுவதில் ஏற்பட்ட பிரச்னையால் எஃப்.ஐ.ஆரை மற்றவர் பார்க்கும் நிலை உருவானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக எஃப்.ஐ.ஆர். கசிந்திருக்கலாம்” என தெரிவித்துள்ளது.