“இங்கு மத அரசியல் செய்ய வேண்டாம்” நீட் தோல்வியால் மறைந்த மாணவர் ஜெகதீஷ்வரனின் நண்பர் ஃபயாஸ்தீன்!

“பாஜக தலைவர் அண்ணாமலை என்னை பார்த்து கிண்டல் செய்திருக்கிறார். ‘ஏற்கெனவே போதுமான டாக்டர்ஸ் இருக்காங்க, எதுக்கு இந்த தம்பி 25 லட்சம் கட்டி படிக்கனும்’ என்கிறார். ஏற்கெனவே நல்ல அரசியல்வாதி இருக்காங்க நீங்க எதற்கு வந்தீர்கள்?” மாணவர் ஃபயாஸ்தீன்

2 ஆவது முறை நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி உயிரை மாய்த்து கொண்டிருந்தார் சென்னையை சேர்ந்த மாணவரொருவர். இந்நிலையில் அவரின் தந்தையும் மறுநாள் (ஆக.14) அதிகாலை தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென குரல்கள் மீண்டும் வலுக்கத் தொடங்கியது. பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்த அணிகளும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தமிழ்நாடெங்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என அறிவித்துள்ளன.

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் மதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதிமுக துணைப் பொதுச் செயலாலர் மல்லை சத்யா தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விசிக, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராகவும் நீட்டிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட ஜெகதீஸ்வரனின் நண்பர் பயாசுதீன் கலந்து கொண்டார். மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை இறந்த தினத்தன்று, இவர் நீட்டுக்கு எதிராக கொடுத்த பேட்டி பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

annamalai
“நீட் தேர்வை எதிர்த்து ஒண்ணுமே பண்ண முடியாதா?” அமைச்சர் உதயநிதியிடம் கேட்ட மாணவர்! #Video

நேற்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “நீட் எதற்கு கொண்டு வந்தாங்க என மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. பணம் இருப்பவர்களால் உள்ளே வர முடிகிறது. 12ம் வகுப்பு முடித்தவுடன், முதிர்ச்சியடையாத மனநிலையில் ஒரு மாணவர் இருப்பார். அவரை சோதித்து, அவருக்கு மருத்துவம் பார்க்க தகுதி உள்ளதா என சோதிப்பது எப்படி சரியாகும்?

நீட் கடினமாக உள்ளது. நீட் பற்றி நிறைய பேச வேண்டி இருக்கு. 2 நாட்களாக எனது விரக்திகளை கொட்டி தீர்த்து விட்டேன். என்னை திமுக கைக்கூலி என்கிறார்கள். காசு வாங்கிவிட்டதாக கூறுகிறார்கள். பாஜக நீட்டுக்கு எதிராக போராடினால் நான் அதிலும் கலந்து கொள்வேன். ஆனால் அவர்கள் போராட மாட்டார்கள். நான் திமுகவின் உபி இல்லை. மட்டுமன்றி இங்கு மத அரசியல் செய்ய வேண்டாம். இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என எல்லா மதத்தவரும் இம்மேடையில் இருக்கிறோம். உங்களின் மத அரசியல் இங்கே எடுபடாது.

பாஜக தலைவர் அண்ணாமலை என்னை பார்த்து கிண்டல் செய்திருக்கிறார். ‘ஏற்கெனவே போதுமான டாக்டர்ஸ் இருக்காங்க, எதுக்கு இந்த தம்பி 25 லட்சம் கட்டி படிக்கணும், எதுக்கு தேவையில்லாத வேலை’ என்கிறார். எனில் ஏற்கெனவே நல்ல அரசியல்வாதி இருக்காங்களே... நீங்க எதற்கு வந்தீர்கள்?” என விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com